தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக... (27)

உயிரே உனக்காக... (27)

உயிரே உனக்காக... (27)


PUBLISHED ON : ஜூன் 12, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: தான் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிக்காக, நரேன், மதுரிமா, கவிதா ஆகியோருக்கு இடையே குழப்பத்தையும், பலவித சந்தேகங் களையும் ஏற்படுத்தினான் கவிதாவின் மாஜி கணவன் ஆண்டர்சன். கொஞ்ச நாட்களுக் காவது நரேனை விட்டு பிரிந்திருந்து, அவன் மனதில் இடம் பிடித்திருப்பது, தானா அல்லது கவிதாவா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விபரீத எண்ணம் மதுரிமாவிற்கு தோன்றியது. அதற்கேற்றாற் போல், நரேனை விவாகரத்து செய்துவிடும் படி யோசனை கூறினாள் மதுரிமாவின் தாய் —

சில நேரங்களில், சில நிகழ்வுகளுக்கான காரணம், மிகவும் சாதாரணமானதாக இருக்கும்; ஆனால், அது ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் விபரீதமாக அமைந்து, நம் வாழ்க்கையின் போக்கையே அடியோடு மாற்றி அமைத்து விடும்.

மதுரிமாவும், அவள் தாயும் பெரிதாக நினைத்து, கற்பனையிலும், பயத்திலும் நரேனோடு விவாதித்துக் கொண்டிருந்த விஷயமும் அதைப் போன்ற ஒன்றுதான். எந்த மனைவியும், தன் கணவன் தன்னைத் தவிர்த்து, வேறொரு பெண்ணுடன் ரகசிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதை ஏற்க மாட்டாள்.

ஆனால், ஒரு பாவமும் அறியாத கணவனை, வெறும் சந்தேகத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளா<லும் அவனை சிறுமைப்படுத்தி கேள்வி கேட்டு, கேவலப்படுத்தும் போது, அவனால் மட்டும் தாங்கிக் கொள்ள முடியுமா?

அப்படி ஒரு சூழ்நிலையில் தான் இருந்தான் நரேன்.

'நானும், என் மனைவியும் சேர்ந்து வாழ்வது பற்றியும், பிரிந்து போவது பற்றியும், மாமியார் எத்தனை சுலபமாக முடிவு எடுக்கிறாள்? இதை, முடிவு செய்ய வேண்டியவர்கள் நானும், மதுரிமாவும் அல்லவா? பெண்ணைப் பெற்றுவிட்ட ஒரே காரணத்திற்காக, அந்தப் பெண்ணின் அத்தனை எதிர்கால முடிவுகளும் அவள் தாயின் கையிலா?'

நரேனுக்கு கோபம் வந்தது. கூடவே, அம்மா சொன்னதை பற்றி பெண் என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலும் அவனுக்கு ஏற்பட்டது...

''மது... உன் அம்மாவின் விருப்பம்தான், உன் விருப்பமுமா?''

நரேனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? உடனே பதில் சொல்லத் தெரியாதவளாய், யோசித்துப் பார்த்தாள் மது. நரேனை கொஞ்ச காலத்திற்குப் பிரிந்து வாழ வேண்டும் என, அவள் நினைத்ததற்கு காரணமே வேறு.

'பிரிவில்தான் உறவின் உண்மையான அன்பும், காதலும் வெளிப்படும்...' என்ற உண்மையை, ஆண்டர்சன் அவனுக்கு சாதகமான முறையில் மாற்றிக் கூறியது மதுரிமாவை யோசிக்க வைத்தது என்னவோ உண்மைதான். இந்தப் பிரிவில், நரேனை ஈர்க்கப் போகும் சக்தி, தானா அல்லது கவிதாவா எனத் தெரிந்து கொள்ளும் ஆசையில், அது நிச்சயம் தானாகத்தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் மதுரிமா சொன்னதை அவள் தாய் புரிந்து, பேசியவிதம் தவறு என்பது மதுரிமாவிற்கு நன்றாகவே புரிந்தது.

நரேனின் கேள்விக்கு மதுரிமா நேரடியான பதிலை சொல்ல விரும்பாமல், சுற்றி வளைத்து நரேனிடமே வேறு மாதிரியான கேள்வியை எழுப்பினாள்...

''அம்மாவின் விருப்பமும், என் விருப்பமும் இருக்கட்டும்... இதில், உங்கள் விருப்பம் என்ன?''

''என் விருப்பமா... இது, நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காதது.''

''விலகி வாழ்வதையோ, விவாகரத்தையோ நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்கலாம்; ஆனால், கவிதாவை நினைத்துப் பார்க்காமல் இருந்தீர்களா?''

''மது... மறுபடியும் தவறு செய்கிறாய்... இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துப் பேசுகிறாய். அதுமட்டுமல்ல, கவிதா மேல் வீண் பழி சுமத்துகிறாய்; அது ரொம்பவும் பாவம்.''

''இதையே, நூறு முறை சொல்லிட்டீங்க... இதை, நான் நம்பத் தயாரில்லை.''

''உன்னை எப்படி நம்ப வைப்பது?''

''கொஞ்ச நாட்களுக்கு நாம் பிரிந்து, வாழ்ந்து பார்ப்போம்.''

''பிரிந்து வாழ்வது என்றால்... தற்காலிகமான விவாகரத்தா அல்லது உன் அம்மா சொன்ன மாதிரி நிரந்தரமான விலகலா?''

''நான் சொன்னதற்கும், நீங்கள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.''

''என்ன வித்தியாசம்?''

''பிரிவு என்பது தற்காலிகமானது; நீங்கள் சொல்ற விலகலும், விவாகரத்தும் நிரந்தரமானது.''

''அதை சொன்னது நான் அல்ல; உன் அம்மாதான். சரி... எதற்காக நாம் பிரிந்து வாழ வேண்டும்?''

''உங்களுக்கு உண்மையான அன்பு என் மீதா, கவிதா மீதா என்பதை நான் தெரிந்து கொள்ளத்தான்.''

''மது... நீ என்னை மட்டும் கேவலப்படுத்தவில்லை; தேவையில்லாமல், உன்னையும் கேவலப்படுத்திக் கொள்கிறாய்.''

''கணவனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று, ஒரு மனைவி நினைப்பது உங்களுக்குத் கேவலமாகத் தெரிகிறதா?''

''நானும், கவிதாவும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.''

''அதை தெரிந்து கொள்ளத்தான், நாம் கொஞ்ச நாட்களுக்குப் பிரிந்து வாழ வேண்டும் என்கிறேன்.''

''சரி... இந்தப் பிரிவில் நீ எதை எதிர்பார்க்கிறாய்?''

நரேனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், மவுனமாக இருந்தாள் மதுரிமா. இதுவரையில் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த ஆண்டர்சன், குறுக்கே புகுந்து பேசினான்...

''மிஸ்டர் நரேன்... உங்கள் மனைவி நினைப்பது என்னவென்று உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா? இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது உங்கள் மனைவியின் ஈகோ!''

''இதில், 'ஈகோ' விற்கு என்ன இருக்கிறது?''

''உங்கள் விஷயத்தில் மதுரிமா, கவிதாவிடம் தோற்று விட்டதாக நினைத்து வருகிற கோபம் இது. உலகில் எந்த பெண்ணும், இன்னொரு பெண்ணிடம் தோற்பதை விரும்பவும் மாட்டாள், ஏற்கவும் மாட்டாள்.''

சொல்லிவிட்டு சிரித்தான் ஆண்டர்சன். அவன் சொன்னதும், சிரித்ததும் மதுரிமாவை மேலும் கோபப்படுத்தியது...

''நான் கவிதாவிடம் தோற்று விட்டதாக உங்களிடமோ, வேறு யாரிடமோ சொன்னேனா? சொல்லப் போனால், இந்த கவிதா எனக்கு போட்டியே இல்லை.''

மதுரிமா சொன்னது, கவிதாவிற்கு கோபத்தை வரவழைத்தது...

''நான் உங்களுக்குப் போட்டியென்று, உங்களிடம் சொன்னேனா?''

''தைரியமாக சொல்லிவிட்டு, போட்டி போடுவது ஒரு வகை; சொல்லாமல், முதுகிற்குப் பின்னால் நின்று யுத்தம் செய்வது வேறு வகை. நீ, இதில் இரண்டாம் வகை கவிதா.''

மதுரிமாவின் வார்த்தைகள் கவிதாவின் இதயத்தில் அம்புகளாக தைத்தன...

''மது... நீயும், நானும் செய்வது யுத்தமே இல்லை. என்னுடைய நிஜம் என்ன என்பது தெரியாமல், என் நிழலைப் பார்த்து, வெறும் நிழலோடு யுத்தம் செய்ய புறப்பட்டு விட்டாய். தன்னைப் பற்றிய தைரியமும், நம்பிக்கையும் உள்ள எந்த ஒரு பெண்ணும், தன் கணவனை இப்படி இம்சிக்க மாட்டாள்.''

பதிலுக்கு கவிதாவும், மதுரிமாவை வார்த்தைகளால் கடுமையாகத் தாக்கினாள்.

''கணவனை இம்சிப்பதைப் பற்றி நீ பேசுகிறாயா... கண் முன் சாட்சியாக நின்று கொண்டிருக்கும் உன் கணவரிடம் கேட்டுப் பார். கணவனை இம்சிப்பவள் நீயா, நானா என்பதை பிறகு புரிந்து கொள்வாய்.''

''மது... புரியாமல் பேசுவது நீதான்... எனக்கும், என் கணவருக்கும் இடையே என்னவெல்லாம் நடந்தது என்பது உனக்குத் தெரியாது.''

''அது தெரிந்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை; அது நீயும், உன் கணவரும் சம்பந்தப்பட்ட விஷயம்.''

''வேறு என்ன தெரிய வேண்டும் மது?''

''உனக்கும், என் கணவருக்கும் இடையே இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னையே!''

அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாதவனாக மதுரிமாவின் கன்னத்தில் அறைவதற்கு மீண்டும் யத்தனித்தான் நரேன்.

நிலைகுலைந்து போன மதுரிமா, அதற்கு மேலும் அங்கே நிற்கப் பிடிக்காதவளாய், அழுதபடியே அறைக்குள் போய், கட்டிலில் விழுந்தாள். அவளைத் தொடர்ந்து, அவளது தாயும் அறைக்குள் போனாள்.

''சாரி நரேன்... என்னால், தாங்கிக் கொள்ள முடியாமல் தான், மதுவிடம் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டேன். போய் மதுவை சமாதானப் படுத்துங்கள்; நான் வருகிறேன்.''

அவளது குழந்தையைத் தூக்கிக் கொண்டு, வாசலை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் கவிதா.

நடந்து முடிந்திருப்பது ஒன்றும் அத்தனை பெரிதான விஷயம் அல்ல என்பதைப் போல, வெளியேற முற்பட்டான் ஆண்டர்சன்.

''ஆண்டர்சன்... ஒரு நிமிஷம். நீங்கள் என்ன நினைத்தீர்கள்; என்ன நடந்தது?''

''நரேன்... அது முடிந்து போன விஷயம். அதை போஸ்ட்மார்ட்டம் செய்து பார்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. உங்கள் மனைவி மீதுதான் உங்களுக்கு அன்பும், காதலும் அதிகம் என நிரூபிக்க, அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது; பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆல் தி பெஸ்ட்.''

சொல்லிவிட்டு, அவன் பாட்டுக்குப் போனான் ஆண்டர்சன்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவனாய் ,சோபாவில் அமர்ந்து, கண்களை மூடி, யோசித்துப் பார்த்தான் நரேன்...

'என் அன்பையும், காதலையும் நிரூபிக்க ஒரு சந்தர்ப்பமா? என்ன விபரீதம் இது... இருக்கிற ஒன்றை இல்லை என்போரிடம் எப்படி நிரூபிக்கப் போகிறேன்!' நரேனுக்கு லேசாகத் தலையே சுற்றியது.

விட்டை விட்டு வெளியே வந்த ஆண்டர்சனுக்கு, ஆச்சரியம் காத்திருந்தது. அவனுக்கு முன்பாக குழந்தையுடன் புறப்பட்ட கவிதா போய் விடாமல், அவனது காரின் அருகே குழந்தையைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தாள்.

''ஆச்சரியமாக இருக்கிறது; எனக்காகவா காத்திருக்கிறாய்?''

''ஆமாம்...''

''என்ன விஷயம் கவிதா?''

''இங்கேயே பேச வேண்டுமா... ஒரு காபி குடித்துக் கொண்டே பேசலாமே!''

''சரி... வா.''

புன்னகைத்தபடியே, காரின் கதவைத் திறந்து விட்டான் ஆண்டர்சன். கவிதாவும், குழந்தையும் காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தனர். ஆண்டர்சனும், காரில் அமர்ந்து, ஸ்டார்ட் செய்தான்.

கலிபோர்னியாவின் மிகப் பெரியதும், அழகானதுமான ஒரு ஓட்டலின் கார் பார்க்கிங்கில் வந்து நின்றது ஆண்டர்சனின் கார்.

தானே முதலில் இறங்கி, கவிதாவும், குழந்தையும் இறங்க காரின் கதவைத் திறந்து விட்டான் ஆண்டர்சன்.

ஆயிரம் இருப்பினும், கவிதா அவனோடு மனைவியாக வாழ்ந்தவள். அதற்கு அடையாளமாக ஒரு அழகான குழந்தை யைப் பெற்றெடுத்தவள். மனதோடும், உடலோடும் சம்பந்தப்பட்டுவிட்ட உறவுகள் அத்தனை சுலபத்தில் மறந்து போகிற விஷயம் இல்லை.

சந்தோஷமோ, துயரமோ அதன் பதிவுகள் மிகவும் அழுத்தமானவை. அவர்கள் மூவரும், ஒட்டலில், ஒரு குளிர்சாதன அறையில் வந்தமர்ந்தனர்.

''காபிக்கு முன்பாக வேறு ஏதாவது சாப்பிடுகிறாயா?''

''எனக்கு காபி மட்டும் போதும்; குழந்தைக்கு ஏதாவது ஆர்டர் பண்ணுங்கள்.''

''என்ன சாப்பிடுகிறாய் என் செல்லமே?''

ஆண்டர்சனின் குரலில், ஒரு தந்தையின் கரிசனம் தெரிவதை கவிதாவால் உணர முடிந்தது. மனைவியிடமிருந்து விலகி நிற்க முடிந்த அவனால், குழந்தையுடன் ஒட்டிக் கொள்ள நினைக்கும் பரிவு வெளிப்படையாகத் தெரிந்தது.

பணியாள் குறிப்பெடுத்து அகல, கவிதாவும், ஆண்டர்சனும் சில வினாடிகளுக்கு மவுனமாக இருந்தனர்.

''ம்... எதற்காக குழந்தையை நரேன் வீட்டில் கொண்டு போய் விட்டீர்கள்?''

''நான் அப்படி செய்ததற்கு, இரண்டு காரணங்கள் உள்ளது கவிதா.''

''முதல் காரணம் என்ன?''

''என்னுடைய சுயநலம். என்னோட ஆராய்ச்சி... செக்ஸ் பற்றி அறிந்து கொண்ட பின் ஒரு ஆண், பெண்ணையோ அல்லது பெண், ஆணையோ தவிர்த்து வாழ்வது அத்தனை சுலபமான காரியமல்ல. பாலுணர்வின் உந்துதல்கள் அந்த ஆணையோ, பெண்ணையோ வெகு எளிதில் தடம் புரள வைத்துவிடும் என்பது...''

''நிறுத்துங்கள்... அது, அமெரிக்கா போன்ற நாடுகளில் எளிதான நிகழ்வாக இருக்கலாம்; எங்கள் ஊர் கலாசாரமும், பண்பாடும் அதுவல்ல. எங்கள் பெண்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. இளம் வயதிலேயே கணவனை இழந்த பின்பும், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்.''

''ஒரு சின்ன திருத்தம். அப்படி வாழ கட்டுப்படுத்தப்பட்டவர்கள் உங்களூர் பெண்கள். வாய்ப்புகள் இருந்தும், கலாசாரத்தின் பெயரால் கட்டுப்பாட்டை பழக்கி, சமூகத்திற்கு பயந்தும், ஆசைகளைக் கொன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்.''

இத்தனை காலமாக உலக அரங்கில் நாம் பெருமைப்பட்டு இறுமாப்புடன் நடந்து கொண்டிருக்கும் பண்பாட்டை, அவன் சிறுமைப்படுத்திப் பேசுவதை போல உணர்ந்தாள் கவிதா.

அவள் நினைப்பதை புரிந்து கொண்டவன் போல ஆண்டர்சன் பேசினான்...

''நான் ஏதோ உங்களூர் பெண்களை தனிமைப்படுத்தி குறை சொல்வதாக எண்ண வேண்டாம்.

''நான் சொல்வது உலகத்தில் பெண் என்று படைக்கப் பெற்ற எல்லா பெண்ணுக்கும் பொதுவான ஒன்றுதான். செக்ஸ் பற்றிய உணர்வுகளில் அவர்களுக்குள் எவ்விதமான வேறுபாடும் கிடையாது என்பதே என் கருத்து. அதன் காரணம் என்ன தெரியுமா? அதிலிருந்து எந்த ஒரு ஆணும், பெண்ணும் விலகிப் போகாத விதத்தில்தான் மனிதர்கள் படைக்கப் பட்டிருக்கின்றனர்.''

அவன் சொல்வதை யோசித்துப் பார்த்தாள் கவிதா. யோசிக்க, யோசிக்க அவன் சொல்வது சரிதானோ என்ற சந்தேகம் அவளுக்குள் எழ ஆரம்பிக்க, அந்த யோசனையிலிருந்து அவளை விடுவிடுத்துக் கொண்டாள்.

''சரி... உங்களின் இரண்டாவது காரணம் என்ன?''

''நான் சொல்ற இந்த உண்மையை, நீ என்னிடம் ஒப்புக் கொண்டிருந்தால், நமக்குள் இந்த பிரிவே வந்திருக்காது. ஆனால், நீ மூர்க்கத்தனமாக மறுக்கும் ஒரு ஹிப்போகிரட் போல நடந்து, என்னைப் பிரிந்து போய் விட்டாய். உன்மேல் எனக்கு கோபம் வரவில்லை; மாறாக பரிதாபம்தான் எழுந்தது.''

''பரிதாபமா... எதற்காக?''

''உண்மையை ஏற்க தைரியமில்லாமல், ஒரு பொய்யில் மயக்கமுற்று, உன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்ட உன் வீம்பை நினைத்து, என்னை பிரிந்து சென்று நீ, வேறு யாரையாவது ஏற்கும் சூழ்நிலையை நாமே உருவாக்கினால், என்ன என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.''

''எனக்கு நன்மை செய்வதாக நினைத்து, மதுரிமாவிற்கு செய்ய நினைத்த தீமையை நீங்கள் உணரவில்லையா?''

''நான் முன்பே சொல்லி விட்டேன். எனக்கு என்னுடைய ஆராய்ச்சிதான் முக்கியம். இதில் பாவ, புண்ணியம் பார்த்துக் கொண்டிருக்க, நான் சாமியார் அல்ல. ஆணைத் தவிர்த்து வாழ முடியும் என்பது, பெண்கள் காட்டும் ஒரு பாவனை என்பதே என் ஆய்வு.''

''இந்த உண்மையை ஆராய்ந்து, எதை பெரிதாக சாதிக்கப் போகிறீர்கள்?''

''புதிதாய் எதையும் சாதிப்பதற்காக அல்ல என் ஆய்வு. இதுதான் உண்மை என்பதே மிகப்பெரிய சாதனைதான். இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவருமே தங்களுக்குள் ஒளிவு, மறைவு அற்ற ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே என் ஆய்வு. சரி... நரேன் வீட்டில் குழந்தை இருப்பதாக சொன்ன பின்பும், குழந்தையை எடுத்து வர நீ ஏன் செல்லவில்லை கவிதா?''

உடனே பதில் சொல்லாமல், கண்களை மூடிய நிலையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் கவிதா.

''என்ன... பதிலைக் காணோம்?''

''உன்னைக் காட்டிலும் நல்லவரான நரேனும், என்னைவிட சிறந்தவளான மதுரிமாவும் சேர்ந்து வாழும் இடத்தில், அந்தக் குழந்தை இருப்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது; அதனால்தான் போகவில்லை.''

''சரி... விஷயத்திற்கு வருவோம். நரேன் விஷயத்தில் தோற்கப் போவது நீயா, மதுரிமாவா?''

''தோற்கப் போவது நாங்கள் இருவருமே இல்லை. ஆராதிக்க வேண்டிய பெண்மையை, ஆராய்ச்சிக்குள்ளாக்கிய நீதான் தோற்கப் போகிறாய். இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள் என்று உன்னை எச்சரிக்கவே, இன்று உன்னை சந்தித்துப் பேசினேன். குட் பை ஆண்டர்சன்.''

அதற்கு மேலும் அவனோடு அமர்ந்து பேசுவதை விரும்பாத கவிதா, அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அங்கிருந்து வெளியே நடந்தாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு...

மதுரிமாவை சமாதானப் படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்ட நரேன், நேரத்தைக் கொல்வதற்காக அலுவலகத்திற்கு வந்து, அவனது கேபினில் அமர்ந்தான். மேசை மீது, அவன் பார்வைக்கான பைல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அப்போது இன்டர்காம் ஒலிக்க, எடுத்து பேசினான் நரேன். அவனது எம்.டி., கும்பகோணம் வைத்தீஸ்வரனின் குரல்.

'இந்த மனிதர் எப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து சேர்ந்தார்?'

''குட் மார்னிங் சார்... ஆஸ்திரேலியாவிலிருந்து எப்ப வந்தீங்க?''

''நரேன்... அதெல்லாம் இருக்கட்டும். நான் கேள்விப்பட்டது உண்மையா?''

''என்ன கேள்விப்பட்டீங்க சார்?''

''சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. நீயும், மதுரிமாவும் விவாகரத்து பண்ணப் போகிறீர்களாமே... வாட் ஹேப்பண்ட் நரேன்?''

நரேனுக்கு ஒரு வினாடி தூக்கிவாரிப் போட்டது.

''சார்... நாங்க விவாகரத்து பண்ணப் போறதா உங்களுக்கு யார் சொன்னது?''

''வேற யார் சொல்லியிருந்தாலும், நான் நம்பியிருக்க மாட்டேன். இத எங்கிட்ட சொன்னது யார் தெரியுமா? உன் மனைவி மதுரிமாதான்.''

நரேனுக்கு இரண்டாவது அதிர்ச்சி.

''மதுவா... என்ன சொன்னா?''

''ஒரு மணி நேரத்துக்கு முன், மதுரிமாவே போன் சொய்தாள். உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... என் அறைக்கு வா.''

வைத்தீஸ்வரன் ரிசீவரை வைத்து விட்டார். நரேனுக்குள், மதுரிமா கொஞ்சம், கொஞ்சமாக அவனைவிட்டு விலகுவதாக தோன்ற, அவன் வைத்தீஸ்வரனைப் பார்ப்பதற்காக கிளம்பினான்.

— தொடரும்.
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us