
இதுவரை: கவிதாவிடமிருந்து வந்த இ-மெயிலை படித்துக் கொண்டிருந்த மதுரிமாவுக்கு, லேசாக தலை வலிப்பது போல் இருக்கவே, காபி குடிக்க சமையலறைக்கு சென்றாள். அங்கு அவள் அம்மா பாத்திரம் கழுவி கொண்டிருப்பதைப் பார்த்து, வேலைக்காரி பற்றி விசாரித்தாள் மது. கணவன் - மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேச்சு வர, எல்லார் வாழ்விலும் இது தவிர்க்க முடியாததுதான் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டாள் மது. மீண்டும், கவிதாவின் இ-மெயிலை படிக்க, படிக்க, மதுரிமாவுக்கு நரேன் மீதிருந்த தவறான அபிப்பிராயம் மாறியது —
கண்ணீரைத் துடைத்து, தன்னைப் பற்றி நரேன் சொன்னதாக, கவிதா எழுதியிருந்த கடிதத்தின் வரிகளை மீண்டும், மீண்டும் படித்தாள் மதுரிமா.
படிக்க, படிக்க, இந்த வரிகள் மதுரிமாவின் துக்கத்தை அதிகப்படுத்தி, அவள் நெஞ்சில் சுமையை ஏற்றி, அவளை அழ வைத்தது. வாய்விட்டு அழுதாள். அழும் சப்தம் கேட்டு, பதறிப் போய் வேகமாக மதுவின் அறைக்குள் வந்தாள் அவளது தாய்...
''மது என்னாச்சு... ஏம்மா இப்படி அழற?''
''ஒண்ணுமில்லம்மா...''
''ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு நீ அழ மாட்டியே...''
மகள் சொல்வதை நம்பாதவளாய் அவள், மதுரிமாவின் எதிரே இருந்த கம்ப்யூட்டரைப் பார்த்தாள்.
''என்னது இது... நரேன் இ-மெயில் அனுப்பி இருக்கானா... என்னவாம்?''
''இது அவரோட, இ-மெயில் இல்ல;
கவிதாவோட, இ-மெயில்.''
''கவிதாவோட இ-மெயிலா... அந்த சண்டாளியா அனுப்பி இருக்கா. அவ சங்காத்தமே வேணாம்ன்னுதானே நாம இந்தியாவுக்கே வந்துட்டோம். அப்புறம் எதுக்கு இந்த இ-மெயிலும், எழவும்... கட்டையில போறவ...'' மகளின் வாழ்க்கையைப் பாழடித்தவள் என்ற நினைப்பில், அவளது பெற்ற வயிறு கவிதாவைப் பொரிந்து தள்ளியது.
''அம்மா... கவிதாவைத் திட்டாதே... தப்பா எதுவும் பேசாதே.''
''அவ உனக்குப் செய்ததுக்கு, அவளைத் திட்டாம, பாராட்டவா முடியும்?''
''இப்ப கவிதா எனக்கு நல்லதுதான் செய்து இருக்காம்மா.''
''என்ன சொல்ற நீ... எனக்கு ஒண்ணும் புரியல.''
''ஆமாம்மா... நான் புரிஞ்சுக்காத என் கணவனை, எனக்கு இந்த கவிதா புரிய வெச்சிருக்காம்மா.''
''நரேனை கவிதா உனக்கு புரிய வெச்சிருக்காளா... உங்கிட்ட இருந்து, உன் புருஷனை பிரிய வெச்சவ இல்லையா அந்தப் பாவி. அவளப் போய் புரிய வெச்சிருக்கான்னு சொல்றே... குழப்புற மது.''
''உனக்கு குழப்பமாத்தான் இருக்கும். நானே புரிஞ்சுக்காத ஒரு விஷயத்தை, உன்னால் எப்படி புரிஞ்சுக்க முடியும். அந்த கவிதா ரொம்ப நல்லவம்மா.''
''கவிதா நல்லவளா... உனக்கென்ன புத்தி கெட்டுப் போச்சா? போகிற போக்கைப் பார்த்தா, நீயே அந்த கவிதாவை உன் புருஷன் கிட்டே சேர்த்து வெச்சிடுவே போலிருக்கே.''
''அம்மா... வெண்ணை திரண்டு வரும் போது, சட்டியை உடைத்த கதையா, மறுபடியும் நீ எதையாவது சொல்லி, என்னை குழப்பிடாதே. என்னைக் கொஞ்சம் தனியா இருக்கவிடு. கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாயிடும். நான் செஞ்ச தப்பை, நானே சரி செய்துக்கிறேன்.''
''மது... உனக்கு உண்மையிலேயே புரியல. இதுல உன் தப்பு என்ன இருக்கு? நீயா அவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினே... அவன் தானே அனுப்பி வெச்சிருக்கான். அது எப்படி உன் தப்பாகும்?''
''ஏம்மா... நாம கூடத்தான் விவாகரத்து பத்தி யோசிச்சோம்... அவர் அனுப்பலேன்னாலும், நாம நோட்டீஸ் அனுப்பற முடிவுலதானே இருந்தோம். அப்புறம் நரேனை மட்டும் இதுக்காக எப்படி குறை சொல்ல முடியும்?''
''ஒத்துக்கறேன்... நாம யோசிச்சோம்; ஆனா, அனுப்பலையே...''
''அப்படி இல்லம்மா... நோட்டீசை அவர் அனுப்பியது தப்புன்னா... நாம அனுப்ப நெனச்சதும் தப்புதான்.''
''இப்ப முடிவா நீ என்ன சொல்ல வர்ற?''
''இந்தப் பிரச்னையை இத்தோட முடிச்சுடலாம்ன்னு நினைக்கிறேன்.''
''அது புரியுது... எப்படி முடிக்கப் போற?''
''நல்ல விதமாத்தான். நான் நரேன்கிட்ட பேசப் போறேன்.''
''நீ பேசணும்ன்னு நெனச்சா போதுமா... உங்கிட்ட அவன் பேச மறுத்துட்டா...''
''இல்லம்மா... நான் அப்படி நினைக்கல. எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் பேசினா, அவர் நிச்சயம் பேசுவாரு.''
''என்னமோ போ... பொம்மனாட்டி பலவீனமானவன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அதத் தெரிஞ்சுகிட்டும், புரிஞ்சுகிட்டும் தானே ஆம்பளைங்க ஆட்டம் போடுறாங்க.''
''நீ சொல்ற ரெண்டுமே தப்பும்மா. எல்லா பெண்களுமே பலவீனமானவங்களும் இல்ல; எல்லா ஆண்களும்
ஆட்டம் போடுறவங்களும் இல்ல.''
அம்மாவின் அனுபவமே, அவளை அப்படிப் பேச வைக்கிறது என்பது மதுரிமாவுக்கு நன்றாகவே புரிந்தது. அம்மாவைப் பொறுத்தமட்டில், அவளை பலவீனமான பெண்ணாகவும், அப்பாவை ஆட்டம் போடும் ஆணாகவும்
கருதியிருக்கலாம். வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலானோரின் கருத்துக்களும், முடிவுகளும் அவரவர் அனுபவங்களைப் பொறுத்தே அமைந்து விடுவது, வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம்தான்.
இதற்கு மேலும், மகளிடம் வாதம் செய்து கொண்டிருப்பதில் எவ்வித பலனும் இல்லை என்றும், மதுரிமாவின் வாழ்க்கையில் அவள் நம்புகிற மாற்றமும், சந்தோஷமும் வந்தால் சரி என்ற அரைகுறை மனதோடும், அம்மா
அங்கிருந்து சென்றபின், தனியே யோசித்துப் பார்த்தாள் மது...
அம்மா, அவளிடம் கேட்ட கேள்வி, அவளுக்குள் மீண்டும் எதிரொலித்தது.
'உன்னிடம் இல்லாத எது அந்த கவிதாவிடம் இருக்கிறது?'
'மதுரிமாவிடம் இல்லாத எதையும், கவிதாவிடம் நரேன் தேடி அலையவில்லை. தன் கணவன் ஆண்டர்சனிடம் இல்லாத ஒன்றை, கிடைக்காத எதையோ கவிதாதான், நரேனிடம் தேடி வந்திருக்கிறாள். அதுவும் நரேன் என்னை பார்ப்பதற்கும், மணப்பதற்கும் முன்!'
நரேனை நினைத்துப் பெருமை அடைந்தாள் மதுரிமா. இதற்கு மேலும் கவிதாவின், இ-மெயிலை வாசித்துத் தெரிந்து கொள்ள, அதில் பெரியதாய் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டவளாய், கம்ப்யூட்டரை, 'ஆப்' செய்தாள். முதலில், நரேனுடன் பேச வேண்டும்.
'ஒரு சிறிய இடைவெளிக்குப் பின், இருவரின் மனமும், வருந்தும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்து முடிந்துவிட்ட பின், நரேனிடம் பேசப் போகிறேன். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? யோசனையின் பெயரில் தாமதித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இது போன்ற நேரங்களில் கை கொடுக்கும் ஒரே அஸ்திரம், மன்னிப்புக் கோருவது தானே!'
ஒரு முடிவுக்கு வந்தவளாய், நரேனின் போன் நம்பரை டயல் செய்தாள் மதுரிமா .
நரேனின் போன் ஒலித்துக் கொண்டே இருந்தது.
'நரேன் ஏன் போனை எடுக்கவில்லை? வேண்டுமென்றே போனை எடுக்கவில்லையா... இல்லை வேறு ஏதாவது
காரணமா?'
நரேனுக்கு என்னவாகி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மதுரிமாவின் போன் ஒலித்தது. மது அவசரம், அவசரமாக போனை எடுத்துப் பேச முற்பட்ட போது...
மறுமுனையில், நரேனின் எம்.டி., கும்பகோணம் வைத்தீஸ்வரன் பேசினார்.
''சார்... எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கீங்களா?''
''ஐ ஆம் பைன் மது. நீ எப்படிம்மா இருக்கே... நரேன் போன் செய்தானா?''
''இல்லையே சார்... ஜஸ்ட் நான் ட்ரை பண்ணேன்... நரேனோட லைன் கிடைக்கல. அவர் எப்படி இருக்கார் சார்?''
''நல்லாவே இருக்கான். மது... ஒரு சின்ன பிரச்னை. நீ உடனே அமெரிக்கா புறப்பட்டு வரணும். அடுத்த பிளைட்லேயே வந்தா நல்லா இருக்கும்.''
''என்ன பிரச்னை சார்... அவருக்கு என்ன ஆச்சு?''
''நரேனுக்கு ஒண்ணும் ஆகல... நீ பயப்படாதே... நான் சொன்னது வேற ஒரு மாதிரியான பிரச்னை. நீ இப்ப நரேன் பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்...''
''சார்... எனக்கு ரொம்பவே பயமா இருக்கு... நீங்க ஏன் அப்படி, 'பீல்' பண்றீங்க... எந்த பிரச்னையா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுங்க சார்.''
அவளையும் மீறி வந்த அழுகையைக் கட்டுப்படுத்தியவளாய், வைத்தீஸ்வரனிடம் கெஞ்சுவதைப் போல் கேட்டாள்.
''மது... அமெரிக்கன் போலீஸ், கவிதாவை கைது செய்திருக்காங்க.''
வைத்தீஸ்வரன் சொன்ன விஷயம், மதுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
''கவிதாவை போலீஸ் கைது செய்து இருக்கா... ஏன் சார்?''
''கவிதா, அவ புருஷன் ஆண்டர்சனை கொன்னுட்டா மது... கொலைக் குற்றத்திற்காக போலீஸ் அவளை கைது செய்திருக்கு.''
மதுரிமா ஆடிப் போனாள். கவிதா அவள் கணவனைக் கொன்று விட்டாளா? அவர் சொன்னதை ஏற்க மதுவின் மனம் மறுத்தது.
''சார்... நீங்க சொல்றத என்னால் நம்பவே முடியல...''
''நீ இன்னமும் குழந்தையாவே இருக்கே. சரி... எந்த பிளைட்ல புறப்பட்டு வரேன்னு எனக்கு போன் செய்.''
''சார்... கவிதா ஆண்டர்சனை கொலை செய்ததுக்கும், நான் அமெரிக்காவுக்கு வர்றதுக்கும் என்ன சார் சம்பந்தம்?''
''சம்பந்தம் இருக்கு மது... நரேன் கிட்ட இப்ப போலீஸ் விசாரிச்சுக்கிட்டு இருக்குது. போலீசுக்கு உங்கிட்டேயும் விசாரிக்கணுமாம். நரேன் தான் உனக்கு போன் செய்து உன்னை உடனே அமெரிக்காவுக்கு புறப்பட்டு வரும்படி சொல்லச் சொன்னான்.''
''ஓ.கே., சார்... நான் உடனே புறப்படுறேன். பிளைட் டிக்கட் கம்பார்ம் ஆனதும், நான் இதே நம்பர்ல உங்களை கூப்பிடுறேன். அவரை கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்குங்க சார். இந்த நேரத்துல எங்களுக்கு உதவி செய்ய, உங்களைத் தவிர யாருமில்ல.''
அழுகையை அடக்க முடியாதவளாக, அழுது கொண்டே பேசினாள் மதுரிமா .
''கவலைப்படாதே... நரேனை நான் பாத்துக்குறேன்... அழாம ஆக வேண்டியதைப் பாரு மது... ஓ.கே., உன் போனுக்காக நான் காத்துக்கிட்டிருப்பேன்...''
மதுரிமா மெல்ல அதிர்ச்சியிலிருந்து விடுபட்டவளாய், அவளது அம்மாவின் அறைக்குள் வந்த போது, அம்மா கட்டிலில் சாய்ந்து படுத்தபடி, ஏதோ ஒரு வாரப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தாள். திடீரென, மகள் தன் அறைக்குள் அழுது சிவந்த கண்களுடன் வந்து நிற்பதைப் பார்த்து, மதுவின் அம்மா படிப்பதை நிறுத்தி, எழுந்து அமர்ந்தபடி மகளையே பாசத்துடன் பார்த்தாள்...
''என்ன மது... எதாச்சும் வேணுமா?''
''அம்மா... நாம உடனடியா அமெரிக்கா போகணும்.''
''அமெரிக்கா என்ன அமிஞ்சிகரையா; நெனச்சா உடனே போறதுக்கு... என்ன விஷயம், நரேன் கிட்ட பேசினியா?''
''நரேன் லைன் கிடைக்கல... நரேனோட எம்.டி., வைத்தீஸ்வரன் போன் செய்து, என்னை உடனே புறப்பட்டு வரச் சொல்லி இருக்கார்.''
''எம்.டி., சொன்னதுக்கெல்லாம் உன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சுட முடியுமா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.''
''அம்மா... புரியாமல் பேசாதே... இப்ப நரேன் எங்கே இருக்கார் தெரியுமா?''
''எங்கே இருக்கப் போறான். கழுதை கெட்டா குட்டிச்சுவர்ன்னு அந்த கவிதா வீட்டுகே போயிட்டானா?''
''இல்லம்மா... நரேன் இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காரு. போலீஸ் அவரை விசாரிச்சுக்கிட்டு இருக்காம்!''
இதை சற்றும் எதிர்பார்க்காத மதுவின் அம்மாவிற்குத் தூக்கிவாரிப் போட, அவள் பதறியபடி கேட்டாள்...
''நரேனை போலீஸ் விசாரிக்குதா; எதுக்கு மது... நரேன் என்ன செய்தான்?''
''நரேன் ஒண்ணும் செய்யல; அந்த கவிதாதான் செய்திருக்கா...''
''கவிதா செய்திருக்காளா...என்ன செய்தாள்?''
''அவளோட புருஷன் ஆண்டர்சனை கொலை செய்துட்டா!''
மதுரிமா நிதானமாகவும், அழுத்தமாகவும் சொன்ன பதிலில், மதுவின் அம்மா நிலை குலைந்து போனாள்...
''என்னது... கவிதா அவளோட புருஷனை கொன்னுட்டாளா?''
''ஆமா... வைத்தீஸ்வரன் அப்படித்தான் போன்ல சொன்னாரு.''
''ஏன் மது... கவிதா அவ புருஷனை கொலை செய்ததுக்கு, போலீஸ் எதுக்காக நரேனை விசாரிக்கணும்?''
''என்னைக் கேட்டா... எனக்கென்னம்மா தெரியும். அங்கே போய் பார்த்தாதான் தெரியும். அதுமட்டுமில்ல. போலீஸ்
என்னையும் விசாரிக்கணுமாம். அதுக்காகத்தான் உடனடியா என்னை அமெரிக்காவுக்கு புறப்படச் சொல்லி அவரோட எம்.டி., போன் செய்திருக்காரு.''
''என்னது... உன்னையும் போலீஸ் விசாரிக்கப் போவுதா. உனக்கும், கவிதா செய்த கொலைக்கும் என்னடி சம்பந்தம்? எனக்கு பயமா இருக்கு மது.''
''அம்மா... பயப்பட வேண்டிய நானே பதறாம இருக்கேன். நீ எதுக்கு இப்படி பயந்து நடுங்குற. என்னமோ நீ சொல்லித்தான் இந்தக் கொலையே நடந்த மாதிரி!''
''மது... எனக்கொரு சந்தேகம். இப்ப நீ சொன்ன மாதிரி, ஒரு வேளை நரேன் சொல்லித்தான் கவிதா அவ புருஷனை கொலை செய்திருப்பாளோ...''
''போதும்மா... நீ பேசறதை இத்தோட நிறுத்திக்க... இந்த விஷயத்துல இதுவரைக்கும் உன் பேச்சைக் கேட்டு, நான் பட்டது போதும். இது என்னோட வாழ்க்கை. இனிமே அதை நானே பார்த்துக்குறேன். நான் அடுத்த பிளைட்ல அமெரிக்கா போயே ஆகணும். நான் அதுக்கான ஏற்பாட்டை செய்யப் போறேன். நீ என்னோட துணிமணிகளை, 'பேக்' செய்து ரெடியா வை.''
கலிபோர்னியா மாகாணம் போலீஸ் ஸ்டேஷன்.
ஆண்டர்சனை கொலை செய்த குற்றத்திற்காக கவிதாவும், அது சம்பந்தமான விசாரணைக்காக நரேனும் அருகருகே
நாற்காலியில் அமர்ந்தபடி, மேல் அதிகாரியின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
நரேன் லேசான பதற்றத்துடன் காணப்பட, எந்த விதமான சலனமும் இல்லாதவளாக கவிதா மவுனமாக அமர்ந்திருந்தாள். கவிதா எதற்காக இப்படி ஒரு பாவத்தை செய்தாள் என்பதை புரிந்து கொள்ள முடியாமல், நரேன்
யோசனையில் அமர்ந்திருக்க, ஏதோ ஒரு புண்ணிய காரியத்தை செய்து முடித்த திருப்தியில், மன நிறைவோடு இருப்பவளைப் போல காணப்பட்டாள் கவிதா.
அவர்கள் இடையே உள்ள மன அழுத்தத்தை மாற்ற, யாராவது முதலில் பேசியே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தவனாக, நரேனே முதலில் பேசினான்...
''ஏன் இப்படி செஞ்சே கவிதா, அவசரப்பட்டுட்டியே...''
''இல்ல நரேன்... ரொம்பவும், 'லேட் ' பண்ணிட்டேன். இத நான் எப்பவோ செஞ்சிருக்கணும். பெட்டர் லேட் தென் நெவர்.'' சொல்லிவிட்டு, விரக்தியுடன் சிரித்தாள் கவிதா; தொடர்ந்து அவளே பேசினாள்...
''நரேன்... இப்பவும் நான் குற்றம் செஞ்சிருப்பதா நினைக்கல... பெண்களுக்கு எதிரான ஒரு குற்றத்தை தொடர்ந்து செய்ய நினைச்ச ஒரு குற்றவாளியை நான் தண்டிச்சிருக்கறதா நினைக்கிறேன்... ஆமா, நான் குற்றவாளி இல்ல; ஒரு விதத்துல நீதிபதி. அத நெனச்சு நான் சந்தோஷப்படுறேன் நரேன்.''
கவிதாவின் பார்வையில், அவள் சொல்வதில் ஒரு விசித்திர நியாயம் இருப்பதாகத் தோன்றினாலும், நரேனால் அவள் சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
''நரேன்... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும். நான் சொல்லல, பகவத் கீதை சொல்லுது.'' சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள்
கவிதா. அவள் சிரிப்பு ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் இவளால் எப்படி சிரிக்க முடிகிறது?
''அது எப்படி கவிதா... இனிமேல், நல்லதாக நடக்க என்ன இருக்கிறது? நீதான் எல்லாத்தையும் முடிச்சிட்டியே...''
''இல்ல... நான் முடிக்கல... புதுசா ஆரம்பிச்சிருக்கேன். இனிமே கண்டிப்பாக நல்லது நடக்கும்.''
''சரி... ஏன் இப்படி செஞ்சே கவிதா. உன்னை கொலைகாரியா மாத்தற அளவுக்கு ஆண்டர்சன் அப்படி உனக்கு என்ன
செய்துட்டார்...?''
''எனக்கு செய்ய வேண்டியதெல்லாம், ஆண்டர்சன் எப்பவோ செய்துட்டார். அப்படியே புதுசா எனக்கு எதையாவது
செய்திருந்தாலும், நான் இந்த அளவுக்குப் போயிருக்க மாட்டேன்; என் பாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்திருப்பேன். ஆனா, அவர் வேறு ஒருத்தருக்கு எதிரான செயல்ல இறங்கினார். அத என்னால ஏத்துக்கவும் முடியல; தாங்கிக்கவும் முடியல.''
''வேற ஒருத்தரா... யார் கவிதா அந்த வேறு ஒருத்தர், நானா?''
''இல்ல... அது நீங்க இல்ல. அந்த வேற ஒருத்தர் மதுரிமா. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல. மதுவுக்கு எதிரா அவர் என்ன செய்ய நெனச்சார் தெரியுமா?'' சொல்லிவிட்டு கவிதா குலுங்கி அழுதாள். அதிர்ச்சியில் நரேன் அவள் அழுவதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
— அடுத்த இதழில் நிறைவுறும்.
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்