
இதுவரை:
கணவன் - மனைவி தாம்பத்யம் பற்றி, மதுரிமா கூறிய கருத்துக்கள், நரேனின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தின. ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடைபெற இருக்கும் நடன நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றாள் மதுரிமா. விமான பணிப்பெண்ணான கவிதா, நரேனுக்கு போன் செய்து, அவனை சந்திக்க விரும்புவதாக கூறினாள் —
மதுரிமாவுக்கு, டைரி எழுதும் பழக்கம் உண்டு என்பதை, அவர்களது திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே அறிந்து கொண்டான் நரேன். உரிமையில் இருவரும் அறிமுகமாகும் முதலிரவு எனும் சம்பிரதாயம் முடிந்து, இரண்டொரு நாட்களுக்குப் பின், அதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம், அவனுக்கு வாய்த்தது.
அவன் கண் முன்பாக மதுரிமா விட்டுச் சென்றிருக்கும் அவளது டைரி, அவளைப் போலவே சிரித்துக் கொண்டிருப்பதாய் அவன் உணர்ந்தான். அவனுக்குள், உடனே அந்த டைரியை படிக்க வேண்டும் என்ற ஒரு பரபரப்பும், ஆர்வமும் தொற்றிக் கொண்டது.
'பிறர் டைரியைப் படிப்பது, நாகரிகமற்ற செயல் என்று சொன்னது, மனைவியின் டைரியை கணவன் படிப்பதைப் பற்றியது அல்ல...' என்று, அவன் உள்மனம் சமாதானம் சொல்ல, மதுரிமாவின் டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தான் நரேன்.
டைரியின் முதல் பகுதி, நரேனுக்கு அத்தனை சுவாரசியமாகப் படவில்லை.
எல்லாமே, மதுரிமாவின் நாட்டிய நிகழ்வுகள் பற்றிய அவளது சபா அனுபவங்கள், சபா நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்று மற்றும் பாராட்டிய, சில முக்கிய பிரமுகர்களைப் பற்றிய சின்னச் சின்ன குறிப்புகள்.
சில சம்பவங்கள் ஏற்படுத்திய சில தாக்கங்கள்... ஒரு நிகழ்ச்சியின் போது, ஒருவன், ரசிகன் என்ற பெயரில், நாட்டியத்தை விட்டு அவளை ரசித்துப் பேசிய போது, அவன் கன்னத்தில் ஓங்கி அறையலாமா என்று நினைத்தது. 'நாட்டியம் பார்க்க வந்தா, நாட்டியத்தை மட்டும் ரசிக்கணும்... நாட்டியக்காரியை ரசிக்கறது தப்பு... ஓர் உன்னதக் கலையை அசிங்கப்படுத்தாதே...' என்று சொல்லி, அனுப்பியதைப் பற்றி ஒரு குறிப்பு, நரேனை யோசிக்க வைத்தது.
அம்மா, அப்பா சம்பந்தப்பட்ட, தோழிகள் தொடர்பான சில குறிப்புகள். எல்லாமே மதுரிமா - நரேன் திருமணத்திற்கு முன்பான நிகழ்வுகள். பெரியதாய், வித்தியாசமாய் டைரியில் எதுவும் எழுதப்படவில்லை. நரேன் டைரியின் சில பக்கங்களைப் புரட்டித் தள்ளினான்.
இதோ... மதுரிமா நாரதகான சபாவில் முதன் முதலாக நரேனை சந்தித்த அந்த நாள்... நரேனுக்குள் மீண்டும் பரபரப்பு. மதுரிமாவின் எழுத்துக்களின் மீது நரேனின் பார்வை ஓடியது.
நரேன் பற்றி சுருக்கமாக எழுதியிருந்த முதல் விஷயமே, அவனை, மதுரிமா பற்றி விரிவாக யோசிக்க வைத்தது.
பொதுவாக ஆண்களைப் பற்றி அவள் மனசுக்குள் வைத்திருந்த அபிப்பிராயத்தை, நரேன் என்ற ஆணின் முதல் சந்திப்பு, உடைத்து விட்டதாக அவள் எழுதி இருந்தாள்.
'ஆண்களைப் பற்றிய மதுரிமாவின் பொதுவான எண்ணம் எதுவாக இருந்திருக்கும்? நல்ல விதத்தில் இருந்திருக்குமா அல்லது தவறான விதத்தில் இருந்திருக்குமா?
'பொதுவாக ஆண்களைப் பற்றி மதுரிமா என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும். அது, என் கவலையில்லை. மொத்த ஆண்களுக்குமாக மதுரிமாவிடம் வக்காலத்து வாங்குவது என் வேலையல்ல. அவளது எண்ணத்தை நான் உடைத்து விட்டதாக எழுதி இருக்கிறாளே... எந்த விதத்தில்? என்னைப் பற்றி அவளது முதல் நினைவு என்ன? மதுரிமா ஆஸ்திரேலியாவிலிருந்து, வந்தவுடன் முதல் வேலையாக இது பற்றி பேசித் தெரிந்து கொள்ள வேண்டும்!'
அதன் பிறகு டைரியில் வந்த அடுத்தடுத்த பக்கங்களில்...
அவர்களின் திருமணம் பற்றி, முதலிரவு நிகழ்வுகள் பற்றி, நெருக்கம் பற்றி, அவளிடம் இயல்பாய் குடிகொண்டிருந்த வெட்க சுபாவம் மெல்ல, மெல்ல காலைப் பனியாய் கரைவது பற்றி, அவனது தீண்டலிலும், தழுவலிலும் அவள் கண்கள் மூடி லயித்த தருணங்கள் பற்றி...
நரேனுக்கு வியப்பாகவும், பிரமிப்பாகவும் இருந்தது.
'இதற்கு மேல் எழுத முடியும்...' என்று அவள் சொன்னதில் தவறோ, பொய்யோ இல்லை. வெளிப்படையாக உண்மையைத்தான் சொல்லி இருக்கிறாள் மதுரிமா. இதோ அவளது எழுத்துக்களே அதற்கு சாட்சியாய் நிற்கின்றன.
அதற்காக இந்த அளவிற்கு எழுதி இருப்பாள் என, எதிர்பார்க்கவில்லை நரேன். ஒருவேளை அவன், அவளோடு இல்லாத சமயங்களில், இதை எடுத்து வாசித்துப் பார்ப்பதையே அவள் ஒரு சுகமாகக் கருதி இருக்கலாம்.
மதுரிமாவின் டைரியை மேலே தொடர்ந்து படித்தான் நரேன்.
நரேனை அவளது வாழ்நாள் முழுக்க பிரியக் கூடாது என்று கடவுளிடம் முறையீடாக அல்லது வேண்டுதலாக சில பிரார்த்தனைகள்...
அவன், அவளிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில், நரேனுக்காக அவள் இயற்றிய சில கட்டுப்பாடுகள்...
'எதற்காகவும், யாருக்காகவும், அவனை எந்த நேரத்திலும், விட்டுக் கொடுக்க மாட்டேன்...' என்ற, அவளது பயத்தின் காரணமான சங்கல்பம்...
அவர்களது எதிர்கால குழந்தைகள் மற்றும் குடும்பம் பற்றிய கனவுகள்...
அவர்களது திருமணம் முடிந்த இந்த குறுகிய காலத்திற்குள் மதுரிமா எத்தனை யோசித்திருந்கிறாள்?
மதுரிமா சாதாரணப் பெண்ணல்ல... கணவனைப் பற்றிய எதிர்பார்ப்புகள்... கணவன் மீதான கட்டுப்பாடுகள்... அதே நேரத்தில் வாழ்க்கை பற்றி, அதன் சுவை பற்றி அடங்காத ஆசைகள்... அளவிலா கனவுகள்...
டைரியின் கடைசி பக்கத்திற்கு வந்தான் நரேன். ஒரு விநாடி ஆடிப் போனான்... மதுரிமாவின் டைரியில் எழுதியிருந்த கடைசிப் பக்கத்தை ஆக்கிரமித்திருந்தது கவிதா; ஏர் ஹோஸ்டஸ் கவிதா...
அதுவரையில் டைரியில் எழுதப்பட்டிருந்த, 'பாசிட்டிவான' விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி, கவிதா பற்றி மதுரிமா எழுதி இருந்த, 'நெகட்டிவான' விஷயம், அவனை நெற்றி சுருக்கி, யோசிக்க வைத்தது.
மதுரிமாவின் டைரியை மூடி வைத்த போது, உடல் முழுக்க லேசான <உஷ்ணம் பரவி இருப்பதைப் போல் உணர்ந்தான் நரேன். இதற்குக் காரணம் மதுரிமாவின் எழுத்தா, கவிதா பற்றிய நினைப்பா என்பதை, அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. மதுரிமா மற்றும் கவிதா பற்றிய நினைவுகளிலேயே தூங்கிப் போனான் நரேன்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. காலை எட்டு மணி, கடிகாரத்தில் இசையாக ஒலித்தது. கண் விழித்த பின்பும் எழுந்திருக்க மணமின்றி, இன்னமும் கட்டிலில் படுத்துக் கிடந்தான் நரேன்.
பஸ்சர் ஒலிக்கும் சப்தம் கேட்டது.
'யாராக இருக்கும்? நிச்சயம் பணிப்பெண் ஜெசிகாவாக இருக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று அவள் பணிக்கு வர மாட்டாள். வேறு யாராக இருக்கும்?'
நரேன் அவசரமாக கட்டிலை விட்டு எழுந்து, லு<ங்கியை சரி செய்து, வாசற்கதவை திறந்து பார்த்த போது, வாட் எ சர்ப்ரைஸ்! விழிகளிலும், இதழ்களிலும், சிரிப்பை ஏந்தியபடி, வாசலில் ஓவியமாய் நின்று கொண்டிருந்தாள் கவிதா.
''ஐ ஆம் சாரி... நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... நான் போன் பண்றதா சொல்லி இருந்தேனே...''
''அதனாலென்ன... போன் பண்ணாத்தான் வரணும்னோ, போன் பண்ணிட்டுத்தான் வரணும்னோ நான் நினைக்கல... அதான் கிளம்பி வந்துட்டேன்... தப்பா நரேன்?'' கேட்டுவிட்டு சிரித்தாள் கவிதா.
தப்பு என்று பதில் சொல்ல முடியாத மாதிரியான ஒரு சிரிப்பு.
''நோ... நோ... நாட் அட் ஆல். நீ இவ்வளவு சீக்கிரமாக வர்றது தெரிஞ்சிருந்தா நான் குளிச்சு முடிச்சு, ரெடியா இருந்திருப்பேன்.''
''நத்திங் ராங்... நீங்க குளிச்சுட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்,'' சொல்லிக் கொண்டே அந்த வீட்டிலும், அவனிடத்திலும் உரிமை உள்ளவளாய், உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள் கவிதா.
''வித் எக்ஸ்கியூஸ்... ஒரு அஞ்சு நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துடுறேன்.''
''ஒன் மினிட் நரேன்...'' குளிக்கப் போனவனை தடுத்து நிறுத்தினாள் கவிதா.
''பால் எங்கே இருக்கு? நீங்க வர்றதுக்குள் சூடா டீ போட்டு வைக்கிறேன்.''
''நீ டீ போடறீயா... நோ.. நோ... யூ ஆர் மை கெஸ்ட்.''
''நோ நரேன்... நமக்குள்ள இந்த கெஸ்ட், ஹோஸ்ட் பார்மாலிட்டி எல்லாம் வேணாம். வீ ஆர் பிரண்ட்ஸ். ஆமா.. கிச்சன் எங்கே இருக்கு?''
''அதோ அந்த பக்கம்.''
சமையல் அறையைக் காட்டிவிட்டு, குளியல் அறைக்குப் போனான் நரேன்.
அவன் தலை ஷவரின் தூறலில் நனைந்து கொண்டிருக்க, மனதுக்குள் வீட்டிற்குள் நுழைந்த கவிதாவின் உருவம் மின்னலாய் தோன்றி, தோன்றி மறைந்து கொண்டிருந்தது.
குட்டை ஜீன்சும், கையில்லாத இறுக்கமான பனியனும் அணிந்து, மதுரிமா டைரியில் எழுதி இருந்ததைப் போலவே...
'இவளை நினைத்து மதுரிமா பயந்ததில் அர்த்தம் இருக்கிறதோ... இவள் என்னை வீழ்த்தி விடுவாளோ?'
பெண் - நிராயுதபாணியாக நின்றாலும், உடல் முழுக்க ஆயுதம் தரித்து இருப்பவள்தான்; உடலே ஆயுதமாய் நிற்பவள்.
நீரில் நனைந்த தலையை, நரேன் ஒரு உலுக்கு உலுக்க, நீர்த்திவலைகள் குளியலறையில் தாறுமாறாய் தெளித்தன.
அடுத்த பத்து நிமிடங்களில், நரேனும், கவிதாவும் சோபாவில் அமர்ந்தபடி, அவள் போட்ட டீயைக் குடித்துக் கொண்டிருந்தனர்.
''ஏதாவது வித்தியாசம் தெரியுதா... ரெண்டுல எது பெட்டர்?'' நரேனை உற்றுப் பார்த்தபடியே, மிகவும் சாதாரணமாக கேட்டாள் கவிதா.
''வித்தியாசமா... வாட் டூ யூ மீன்?''
''ஐ மீன் தி டீ... மதுரிமா போடும் டீக்கும், நான் போடும் டீக்கும் ஏதாவது வித்தியாசம் தெரியுதான்னு கேட்டேன்!''
சில விநாடிகள் மவுனத்திற்குப் பின் , ''ஒரு வித்தியாசமும் தெரியல... ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கு!'' என்றான் நரேன்.
அவன் சொல்லிய பதிலைக் கேட்டு, கலகலவென சிரித்தாள் கவிதா.
''நீங்க பொய் சொல்றீங்க... ரெண்டு சிப்ல வித்தியாசம் தெரியாது நரேன்... முழுசா குடிச்ச பிறகு சொல்லுங்க... நிச்சயம் வித்தியாசம் தெரியும்.''
கவிதாவின் பேச்சு, நரேனுக்கு புதிராக இருந்தது. மதுரிமா வீட்டில் இல்லை என்ற தைரியத்தில், இன்று ஏதோ திட்டத்துடன் வந்திருக்கிறாள் இவள். இந்தப் பேச்சை மேலும் வளர்ப்பதா அல்லது இத்துடன் நிறுத்துவதா?
''அதிருக்கட்டும்... என்ன விஷயமா நீ வந்திருக்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''
அவன் பேச்சை மாற்றுவதைப் புரிந்து கொண்ட கவிதா, கொஞ்ச நேரத்திற்கு எந்த பதிலும் சொல்லாமல், மவுனமாய் இருந்தாள்.
''ஹலோ... நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல...''
''சொல்றேன் நரேன்... பர்சனலா, சீரியசா உங்கள ஒரு கேள்வி கேட்கலாமா?''
''ம்... பரவாயில்ல... தைரியமா கேளு...''
''தனிமை... இந்த தனிமைங்கறத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க நரேன்?''
தேங்காய் உடைப்பதைப் போல், படீரென்று அவன் சற்றும் எதிர்பார்க்காத ஒரு கேள்வியைக் கேட்டாள் கவிதா. இருப்பினும் சுதாரித்து, ''தனிமை... சில நேரங்கள்ல சுகமானது; பல நேரங்கள்ல சோகமானது!'' என்று, அவள் கேள்விக்கு பதில் சொன்னான் நரேன்.
''ஓ.கே., எந்த நேரங்கள்ல சுகமானது, எந்த நேரங்கள்ல சோகமானது?''
''இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. இந்த சுகமும், சோகமும் அவரவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், சூழ்நிலைகள் மற்றும் மனசைப் பொறுத்தது.''
அவனது சாமர்த்தியமான பதிலை ரசித்தபடியே அடுத்த கேள்வியைக் கேட்டாள் கவிதா.
''ரொம்ப கரெக்ட்... என்னைப் பற்றி, என் மனசைப் பற்றி உங்களோட அபிப்பிராயம் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''
''அதத் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போற? நாட் ஒன்லி தட்... உன்னைப் பத்தியோ, உன் மனசைப் பத்தியோ, அபிப்பிராயம் சொல்றதுக்கு நான் யாரு? ஐ நோ மை லிமிட்டேஷன்ஸ்!'' என, அவள் கேள்விக்கு பதிலாக, அவளைத் திருப்பி கேள்வி கேட்டான் நரேன்.
அவனிடமிருந்து, இப்படி ஒரு பதிலை எதிர்ப்பார்க்கவில்லை கவிதா. அழகான பெண் என்பதற்காக, அசடு வழிகிற ஆண் இவனில்லை. மனசுக்குள் லேசான சோகத்தை உணர்ந்தாள் கவிதா. கண்களில் துளிர்த்த கண்ணீர்த்துளிகளை இரு விரல்களால் அழுத்தித் துடைத்தாள்.
ஒரு விநாடி ஆடிப் போனான் நரேன்.
''ஐ ஆம் சாரி... என்னோட பதில் உன்னை கஷ்டப்படுத்திடுச்சா?''
''நோ... ஒரு விதத்துல உங்களோட வெளிப்படையான பதில், என்னை சந்தோஷப்படுத்தி இருக்கு. என்னோட தனிமை என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்திக்கிட்டே இருந்தது. இந்த ஒரு வாரத்திற்கு நீங்களும், தனியா இருக்கப் போறீங்களே... நல்ல நண்பர்களாக நாம ரெண்டு பேரும் இந்த நேரத்தை பயனுள்ளதாகவும், சந்தோஷமாகவும் கழிக்கலாமேன்னு நெனச்சேன். நீங்க என்னை சரியா புரிஞ்சுக்கல.''
''இல்ல... நீதான் என்னோட பதிலை சரியாப் புரிஞ்சுக்கல... தனிமை உன்னை கஷ்டப்படுத்தறதா இருந்தா, அதுல இருந்து தப்பிக்க எத்தனையோ வழி இருக்கு...''
''எத்தனையோ வழிகள் இருக்கா... எங்கே... ஒரு வழி சொல்லுங்க பார்க்கலாம்...''
''ஒரு பெண், அவளோட தனிமையிலிருந்து சுலபமா விடுபெறணும்னா...''
அவன் தயங்கி முடிக்காமல் நிறுத்த, அவள், அவனை ஊக்குவித்தாள்.
''சொல்லுங்க நரேன்... விடுபெறணும்ன்னா... என்ன பண்ணனும்?''
''ஒரு நல்ல ஆணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்!''
நரேன் சொல்லியதைக் கேட்டு, வாய்விட்டு சத்தமாக சிரித்தாள் கவிதா.
''இதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?''
''இருக்கு... ஒரு பொண்ணு எத்தனை தடவை கல்யாணம் பண்ணிக்கலாம்?''
''இதென்ன கேள்வி... ஒரு தடவை தான்!''
''அப்ப, நான் எப்படி ரெண்டு தடவை கல்யாணம் பண்ணிக்க முடியும்?''
''புரியல...ரெண்டு தடவையா?''
''ஆமா நரேன்... எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு!''
''நிஜமாவா சொல்ற?''
அவள் சொல்வதை நம்பாதவனாக நரேன் சத்தமாகக் கேட்ட கேள்விக்கு, நிதானமாகவும், அழுத்தமாகவும் பதில் சொன்னாள் கவிதா.
அவள் சொன்னதைக் கேட்டு, அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான் நரேன். 
— தொடரும். 

