PUBLISHED ON : மார் 13, 2011

இதுவரை: நாட்டிய நிகழ்ச்சி ஒன்றுக்காக, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகருக்கு சென்றாள் மதுரிமா. நரேனை சந்திக்க வந்தாள் விமான பணிப்பெண்ணான கவிதா. நரேனுக்கு, மதுரிமாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, அதை எடுத்து பேசினாள் கவிதா. இது, மதுரிமாவிற்கு எரிச்சலை தந்தது. தனக்கும், மதுரிமாவுக்கும் இடையே கவிதா கலகமூட்டுவதாக நினைத்தான் நரேன். உடனடியாக மதுரிமாவை சந்திக்க, ஆஸ்திரேலியா செல்லவும் விரும்பினான். அதற்காக விடுமுறை கேட்பதற்காக, அவனது சி.இ.ஓ.,வான வைத்தீஸ்வரனை சந்திக்க புறப்பட்டான் நரேன் —
ஆஸ்திரேலியாவிற்குப் போயிருக்கிறார் வைத்தீஸ்வரன். அதுவும், மதுரிமாவின் பரம ரசிகர் எனக் கூறி, அவளது நாட்டிய நிகழ்ச்சியை, கண்டு ரசிக்கப் போயிருக்கிறார்.
வைத்தீஸ்வரனின் பக்கத்து போர்ஷன்காரர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், நரேனின் இதயத்தில் சம்மட்டி அடிகளாய் விழுந்தன. சாதாரணமாக எடுத்துக் கொள்கிற விஷயம் இல்லை இது.
அழகுச் சிலையான தன் மனைவியின் அற்புத நாட்டியத்தை கண்டுகளிக்கப் போய் இருப்பவர், அவனது அலுவலகத்தில், அவனுக்கு மேல் அதிகாரியாக, அவனது, சி.இ.ஓ.,வாக வேலை பார்ப்பவர்.
வைத்தீஸ்வரனோடு அவன் லண்டன் சென்றிருந்த போது, மதுவின் மயக்கத்தில் அவர் பேசிய பேச்சுக்கள், நரேனின் மனதில் தோன்றி நிழலாடின. 50 வயதைத் தாண்டியும், இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு, அவர் கூறிய காரணங்கள்...
திருமணம் பற்றியும், கணவன் - மனைவி பற்றியும், அவர்களுக்குள் எழும் செக்ஸ் பிரச்னைகள் பற்றியும் அவனிடம் அவர் கூறிய கருத்துக்கள்...
அந்த வைத்தீஸ்வரன் தான், இதோ, இப்போது அவனது அழகு மனைவி மதுரிமாவின் நாட்டியத்தைக் காண, அவளது பரம ரசிகர் என்ற போர்வையில் ஆஸ்திரேலியா பயணப்பட்டிருக்கிறார். அவரது ரசிப்பு நாட்டியத்தோடு நின்று விடுமா, இல்லை அதற்கு மேலும் போகுமா?
'நாட்டியம் பார்க்க வந்தால், நாட்டியத்தை மட்டும் ரசிக்க வேண்டும். நாட்டியம் ஆடுபவளை ரசிக்கக் கூடாது. நாட்டியம் என்பது, ஒரு உயர்வான உன்னதக் கலை. அதைக் கேவலப்படுத்தி விடாதே...' என்று, ஒரு ரசிகனின் கன்னத்தில் அறைந்ததாக மதுரிமா சொன்னாளே... அது, இப்போது நரேன் நினைவுக்கு வந்தது.
இந்த வைத்தீஸ்வரனின் ரசனையை மதுரிமா எப்படி எடுத்துக் கொள்வாள். அதுவும், அந்த வைத்தீஸ்வரன் அவளது கணவனின் உயர் அதிகாரி என்பது தெரிந்துவிட்ட ஒரு சூழ்நிலையில், அந்த ரசிகனை அறைந்தது போலவே இந்த வைத்தீஸ்வரனின் கன்னத்திலும் ஒரு அறை விடுவாளா!
வைத்தீஸ்வரனின் கன்னத்தில் மதுரிமா அறைவதைப் போல ஒரு வினாடி நரேன் நினைத்துப் பார்த்தான். அந்த நினைவு, அவனுக்குள் ஒரு குரூரமான திருப்தியை, சந்தோஷத்தைத் தருவதை அவன் உணர்ந்தான்.
''என்ன சார்... என்ன யோசிக்கறீங்க? வைத்தீஸ்வரன் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும். ரொம்ப முக்கியமான விஷயம்ன்னா போன்ல கான்டக்ட் பண்ணிப் பேசுங்க. போன் நம்பர் இருக்கா; நான் தரட்டுமா?''
கற்பனை உலகில் இருந்த நரேனை, பக்கத்துப் போர்ஷன்காரன் இந்த <உலகிற்குக் கொண்டு வந்ததுடன், அவன் வைத்தீஸ்வரனைத் தொடர்பு கொள்வதற்கு யோசனையும் சொன்னார்.
''தேங்க் யூ பார் தி சஜக்ஷன்... அவரோட நம்பர் எங்கிட்ட இருக்கு. சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்... குட் டே!''
புறப்பட முயற்சித்த நரேனை, அவர் தடுத்து நிறுத்தினார்.
''சார்... ஒன் மினிட்... நீங்க யாருன்னு சொல்லவே இல்லை. யாராவது தேடிக்கிட்டு வந்தா, யாரு, என்னன்னு விசாரிச்சு வைக்கும்படி சார் சொல்லி இருக்கார். மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்...''
தான் யார் என்ற உண்மையை இவரிடம் சொல்வதா, வேண்டாமா? என்று, சில வினாடிகள் யோசித்தான் நரேன்.
''ஐ ஆம் நரேன்... வைத்தீஸ்வரன் என்னோட சி.இ.ஓ., தான். இப்போ நாட்டியம் பார்க்க போயிருக்காரே அந்த டான்சர் மதுரிமாவோட கணவன் நான்!''
அத்தனை உண்மைகளையும் நரேன் அவரிடம் சொன்னதற்கு, அவன் வரையில் வலுவான காரணம் ஒன்று இருந்தது.
''என்ன... உங்க சி.இ.ஓ.,ன்னு சொல்றீங்க; அந்த டான்சர் உங்க மனைவின்னு சொல்றீங்க... வைத்தீஸ்வரன் இதுபற்றி உங்ககிட்ட சொல்லலையா?''
''சொல்லி இருந்தா நான் எதுக்காக சார் அவரை தேடிக்கிட்டு, அவர் வீட்டுக்கு வரணும்?''
''யூ ஆர் ரைட்... ஏன் சொல்லாம போனாரு?''
''தெரியல!''
'ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தும், அதுவும், அவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு அதிகாரியாக இருந்தும், என் மனைவியின் நாட்டியத்தை ரசிக்க, அவளது ரசிகராய், என்னிடம் அது பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல், அனைத்தையும் மறைத்து, வைத்தீஸ்வரன் ஆஸ்திரேலியா போயிருக்கிறார். என்ன காரணம்?
'வைத்தீஸ்வரனுக்குள் மதுரிமா பற்றிய வேறு ஏதோ சிந்தனைகள் நிச்சயம் இருக்க வேண்டும். அவனது திருமண ரிசப்ஷனின் போது, மதுரிமாவின் கைகளைக் குலுக்கி, 'வாழ்க்கை என்ஜாய் செய்வதற்கே... அதை தவற விட வேண்டாம்...' என்று கூறி, வாழ்த்தினாரே...
'சந்தேகமில்லை. வைத்தீஸ்வரன் தனக்குள் தவறான எண்ணங்களை கொண்டவர். அதனால் தான் அவரால் பிரம்மச்சாரியாய் பாவனை செய்து, ப்ரீ-செக்ஸ் பற்றி பேச முடிகிறது; கணவன் - மனைவிக்குள் செக்ஸ் என்பது பிரச்னை ஆகிவிடக் கூடாது என்று, ஆலோசனை கூற முடிகிறது!' என, வைத்தீஸ்வரனின் ஆஸ்திரேலிய பயணம் பற்றி அதிகமாக சிந்தித்தாலும், அதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாத நரேன், அவரிடம் விடைபெற்று, தன் வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டிற்குள் அவனது தனிமை அவனை இம்சை படுத்தியது. இதைத் தானே கவிதா காலையில் அவனிடம் சொன்னாள்.
மதுரிமாவிற்கு போன் செய்து, வைத்தீஸ்வரன் பற்றி அவளிடம் சொல்லி, எச்சரிக்கலாமா என்ற யோசனை அவனுள் எழுந்தது.
'வேண்டாம். காலையில் கவிதா என்னுடன் இருந்ததற்காக மதுரிமா சந்தேகமாகவும், கோபமாகவும் பேசி இருக்கிறாள். இப்போது, வைத்தீஸ்வரன் பற்றி நான் பேசுவது, அவளை பற்றி சந்தேகிப்பதாக ஒரு வேளை மதுரிமாவை எண்ண வைத்து விடும்.
'அதுதான் சரி... இப்போதைக்கு வைத்தீஸ்வரன் பற்றி எதுவும் மதுரிமாவுடன் பேசாமல் இருப்பது தான் நல்லது!' அத்துடன், எனக்குள் வந்துவிட்ட வைத்தீஸ்வரன் பற்றிய சந்தேகம் எப்படி ஆரம்பிக்கிறது, எப்படி தொடர்கிறது, எப்படி முடிகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...' என்று, நினைத்துக் கொண்டான்.
அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவில் மதுரிமாவின் மனநிலை வேறு மாதிரியாக இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில், சிட்னியின் மிகப்பெரிய ஆபரா ஹவுஸ் கலை அரங்கத்தில், அவள் ஆடப் போகிறாள் என்ற நினைப்பே அற்றவளாய் அமர்ந்திருந்தாள்.
''மது... அமெரிக்காவை விட, ஆஸ்திரேலியா நல்லா இருக்கில்ல!'' அவள் மனநிலையை புரிந்து கொள்ளாமல், அவள் அம்மா கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லாமல், அமைதியாக அமர்ந்திருந்தாள் மதுரிமா.
''என்ன மது... நான் கேட்டது காதுல விழவில்லையா... அப்படி என்ன யோசனை?''
'' ஒண்ணுமில்ல!''
''ஒண்ணும் இல்லாதத பத்தியா யோசிச்சுக்கிட்டிருக்க... உடம்பு சரி இல்லையா?''
''உடம்புக்கென்ன... அது கல்லு மாதிரி நல்லாத்தான் இருக்கு.''
''என்ன மது... ஒரு மாதிரியா பேசற... அப்போ மனசு சரியில்லையா?''
''அம்மா... கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா!''
''இல்ல... நீ எதையோ மறைக்கிற... காலைல இருந்தே நீ என்னமோ மாதிரி நடந்துக்கற. என்ன... வீட்டுக்காரரைப் பற்றிய நினைப்பா?''
அம்மா பாசத்துடன் செல்லமாக கேட்ட கேள்விக்கு, மதுரிமாவின் பதில், வேறு மாதிரியாக இருந்தது.
''ஆமா... வீட்டுக்காரரைப்பத்தி நினைக்காம, வேற யாரைப்பத்தி நினைக்கச் சொல்ற?''
''என்ன மது... நான் சாதாரணமா கேட்ட ஒரு கேள்விக்கு, நீ இத்தனை சீரியசா பதில் கேள்வி கேக்குற!''
''அம்மா... என்னை கொஞ்சம் தனியா விடு. எதையாவது கேட்டு, என் கோபத்தை கிளறாதே!''
''கோபமா... எதுக்கு கோபம் வரணும். கோபம் வர்ற அளவுக்கு இப்ப என்ன ஆயிடிச்சு?''
எதுவுமே ஆகவில்லை என்பது அம்மாவின் நினைப்பு; ஏதாவது ஆகிவிடுமோ என்பது, மதுரிமாவின் பயம். அம்மாவின் கேள்விக்கு, அவள் பதில் சொல்லவில்லை.
''நரேன் கிட்டேயிருந்து போன் வந்ததா... அவர், ஏதாச்சும் சொன்னாரா மது?''
''ஆமா... சொன்னார்!''
''என்ன சொன்னார்... தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு... நீ புறப்பட்டு வர்றீயா... இல்லை, நான் புறப்பட்டு வரவான்னு கேட்டாரா?''
'அம்மா எத்தனை வெகுளித்தனமாக இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள். நரேன் மேல் இவள் வைத்திருக்கும் நம்பிக்கை!'
''அம்மா... நீ நினைக்கிற மாதிரி உன்னோட மாப்பிள்ளை என்னையும், வரச் சொல்லல; அவரும் வர்றதா சொல்லல... அதைவிட வேற முக்கியமான வேலை அவருக்கு இருக்காம்!''
''உன்னை விட அப்படி என்ன அவருக்கு முக்கியமான வேலை மது?''
''எதுவோ ஒரு வேலை... இத்தோட விடும்மா...''
''அதெப்படி விட முடியும்? அசடு மாதிரி, அந்த மாதிரியெல்லாம் விட்டுடாதே மது. கல்யாணம் ஆகி, கொஞ்ச நாள் தானே ஆவுது. நீங்க பிரிஞ்சு இருக்கறதே தப்பு. அவர் உன்னையே பூனைக்குட்டி மாதிரி சுத்தி, சுத்தி வர வேணாமா... சொல்லப் போனா நீ இந்த புரோகிராமுக்கு ஒத்துக்கிட்டதே தப்பு; அவரை விட்டுவிட்டு தனியா வந்தது அதைவிட தப்பு!''
அம்மா பேசிய விதம், மதுரிமாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அம்மா இப்படி பேசுவாள் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அம்மா அப்படி ஒன்றும் கட்டுப்பட்டி இல்லை. விஷயம் அறிந்தவள் தான்; விவரம் புரிந்தவள் தான்.
'இவள் நினைக்கிற மாதிரியும், ஆசைப்படுகிற மாதிரியும் நரேன் என்னை சுற்றி வரவில்லை. மாறாக, கவிதா என்ற மிகப்பெரிய திருட்டுப்பூனை நரேனையே சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கிறது!'
மதுரிமாவிற்குள் தோன்றிய பொறியை, அம்மாவின் பேச்சு ஊதி ஜுவாலை ஆக்கியது.
''ஒரு அம்மா, பொண்ணுகிட்ட பேசறதுக்கு ஒரு அளவு இருக்கு. நான் கோடு போட்டுத்தான் காட்ட முடியும். நீதான் புத்திசாலியா புரிஞ்சு நடந்துக்கணும். மனசை போட்டுக் குழப்பிக்காதே. நேரமாவுது, புறப்படு. இன்னைக்கு உன்னோட டான்ஸ் அற்புதமாக இருக்கணும்; ஆஸ்திரேலியாவே அசந்து போயிடணும்!''
ஒரு அன்பான தாயின் எச்சரிக்கையும், ஆசையும், அவளது பாசமான குரலில் ஒலிப்பதை உணர்ந்தாள் மதுரிமா.
சிட்னி மாநகரம். ஆறு மணி —
உலக பிரசித்தி பெற்ற ஆபரா ஹவுஸ் கலை அரங்கத்திற்கு, அம்மாவுடன் காரில் வந்து இறங்கினாள் மதுரிமா. அவளை மரியாதையுடன் வரவேற்று, அரங்கத்திற்குள் அழைத்துச் சென்றார் சபா செக்ரட்டரி.
கிரீன் ரூமில் மேக்-அப்பை சரி செய்து, காலில் சலங்கைகள் குலுங்க, நாட்டிய மேடையின் நடுவே வந்து நின்று, அனைவரையும் அபிநயத்துடன் நமஸ்கரித்து, நாட்டிய முடிவுக்கு பின், ஆரம்பமாக போகும் பிரச்னைகளை அறியாதவளாய் நடனமாடினாள் மதுரிமா.
அரங்கத்தின் முதல் வரிசையில் கால் மேல் கால் போட்டு, கம்பீரமாக மதுரிமாவை அகலக்கண் விரித்து பார்த்தபடி, இதழோர புன்னகையுடன் அமர்ந்திருந்தார் வைத்தீஸ்வரன்.
— தொடரும்.
-தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன்
