PUBLISHED ON : ஏப் 10, 2011

இதுவரை:
விமான பணிப் பெண்ணான கவிதாவை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றான் நரேன். அங்கு, எதிர்பாராதவிதமாக கவிதாவின் மாஜி கணவன் ஆண்டர்சனை சந்தித்தான். ஒரு பெண்ணின் மீதான செக்ஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்று, ஆராய்ச்சி செய்து வரும் ஆண்டர்சன், அதற்கு தன் மனைவி கவிதாவையே பயன்படுத்த ஆரம்பித்தான். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரிவினை ஏற்பட்டது. ஆண்டர்சனின் ஆராய்ச்சியின் அணுகுமுறை தவறு என்பதை புரிய வைக்க முயன்றான் நரேன்; ஆனால், அதை பொருட்படுத்தவில்லை ஆண்டர்சன் —
யோசிக்க, யோசிக்க மதுரிமாவிற்குள் குழப்பம் அதிகரித்ததே தவிர, தெளிவு பிறப்பதாகக் காணோம். மீண்டும், மீண்டும் வைத்தீஸ்வரன் சொன்ன அதே வார்த்தைகள்...
'என்ன இருந்தாலும், நரேனை அமெரிக்காவில் தனியே விட்டு, விட்டு, நீ மட்டும் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது தவறு...'
கணவனும், மனைவியும் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தின் அல்லது வேலையின் காரணமாக, ஒரு சில நாட்கள் பிரிந்திருப்பதில் என்ன பெரிய தவறு நிகழ்ந்து விட முடியும்! இந்த கேள்விக்கு பதிலாக என்னவெல்லாம் அமையும் என்று யோசித்துப் பார்த்தாள் மதுரிமா.
ஒரு பெண், தனியே வந்திருப்பது தவறு என்று, அவளது பாதுகாப்பு கருதி சொல்லப்பட்டிருக்குமோ அல்லது அவளுடன் அவளது கணவன் ஏன் வரவில்லை என்ற சந்தேகத்தை எழுப்புமோ அல்லது அவளும், அவளது கணவனும் அத்தனை சந்தோஷமாக இல்லை போலும் என்ற தோற்றத்தை உருவாக்குமோ?
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். அந்தப் பயணம் முழுக்க ஒரு கணவனும், மனைவியும் பிரியாமல், ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது, இன்றைய நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமான ஒன்றல்ல.
இது, மெத்தப் படித்தவரான வைத்தீஸ்வரனுக்குத் தெரியாதா... நிச்சயம் தெரிந்திருக்கும்; பிறகு, ஏன் அப்படி சொன்னார்...
திருமணமான புதிதில், ஒரு சில நாட்களில் இப்படிப் பிரிந்து வந்தது தவறு என்ற அர்த்தத்தில் வைத்தீஸ்வரன் சொல்லி இருப்பாரோ! இதுபோன்ற சமயத்தில் ஏற்படும் பிரிவுகள், அவர்களது உறவை மேலும் பலப்படுத்தும் என்று தானே கேள்விப்பட்டிருக் கிறேன். இந்த உறவை மேலும் இறுக்கிக் கொள்ளத்தானே நான் நரேனைப் பிரிந்து வந்தேன்.
சோ... நான் தனியே வந்ததில் எவ்வித தவறும் இல்லை. அப்படியென்றால், அவனைத் தனியே விட்டு, விட்டு, வந்ததுதான் தவறா! இந்தப் பிரிவில், தனிமையில் நான், அவனைப் பற்றி நினைத்து உருகுவதைப் போல, அவன், என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல்...
சே... இது எத்தனை தவறான எண்ணம். என் நரேன் அப்படிப்பட்டவன் இல்லை. அவனது அன்பும், ஆசையும் என் மீது மட்டும்தான். என்னைத் தவிர்த்து, வேறு எந்த பெண்ணிற்கும் அவன் மனதில் இடமில்லை. கணவன், மனைவிக்குள் இதுபோன்ற சந்தேக நினைவுகள் மிகவும் ஆபத்தானவை.
மதுரிமாவின் நேரான, நேர்மையான சிந்தனையை அவள் மனசாட்சி அதட்டி கேள்வி கேட்டது...
'அதெப்படி... நீ நரேனுக்கு போன் செய்த போது, அவனது போனில், உன் வீட்டிலிருந்து உன்னோடு பேசியது யார்? நரேனா... இல்லையே! உன்னுடன் கவிதா தானே பேசினாள்; அவள் ஒரு பெண்தானே! நீ இல்லாத நேரத்தில், உன் வீட்டிற்குள் பிரவேசித்த கவிதா, உன் நரேனின் மனதிலும்...'
'நோ, நோ... நிச்சயம் அப்படி எதுவும் இருக்காது.'
'ஏசி' அறைக்குள் அமர்ந்திருந்த போதிலும் லேசாக வியர்ப்பதை உணர்ந்தாள் மதுரிமா.
அதற்கு மேலும் யோசிக்க விருப்பம் அற்றவளாய், நரேனுக்கு போன் செய்தாள் மதுரிமா.
மறுமுனையில் பேசினான் நரேன்.
''ஹாய் மது டார்லிங்... ஹவ் ஆர் யூ?''
''ஐ ஆம் பைன்... நீங்க எப்படி இருக்கீங்க?''
''டபுள் ஓ.கே., என்னைப் பற்றி கவலைப் பட்டுக்கிட்டிருக்காதே... நான் நல்லாவே இருக்கேன். மது, உனக்கு நூறு வயது...''
''ஏன்... என்னைப் பற்றி நினைச்சுக்கிட்டிருந் தீங்களா?''
அதுவரையில் இருந்த மனநிலை முற்றிலும் மாறிப் போக, கொஞ்சலோடு கேட்டாள்.
''என்ன கேள்வி இது. உன்னைப் பற்றி நினைக்காம, வேற யாரைப் பற்றி நான் நினைக்கப் போறேன்? ''
''நிஜமாவா... என்னைப் பற்றி என்ன நினைச்சீங்க?''
''சொல்லட்டுமா... சொன்னா கோபப்பட மாட்டியே?''
''இதென்ன கண்டிஷன்... கோபம் வர்ற மாதிரி சொல்லாதீங்க.''
''இப்ப நீதான் எனக்கு கண்டிஷன் போடற... அப்ப நான் சொல்லல; சொன்னா உனக்கு நிச்சயம் கோபம் வரும்.''
வாய்விட்டு சப்தமாக சிரித்தான்.
''எனக்கு கோபம் வந்தா, உங்களுக்கு சிரிப்பு வருமா?''
''ஆமா... உன்னைப் பற்றி நான் நினைச்ச விஷயம் அந்த மாதிரி.''
''அந்த மாதிரின்னா... எந்த மாதிரி?''
நரேன் பேசுகிற விதத்திலேயே அவன், அவளைப் பற்றி எதையோ வித்தியாசமாக யோசித்துப் பார்த்திருக்கிறான் என்பதை மதுரிமாவால் உணர முடிந்தது. அது, என்னவென்று அறிந்து கொள்ளும் குறுகுறுப்பு அவளுக்குள் ஏற்பட்டது.
''உத்சவ்'ன்னு ஒரு பழைய இந்திப் படம். சசிகபூரும், ரேகாவும் நடிச்சது; அந்தப் படத்தை நீ பாத்திருக்கியா?''
''இந்திப் படமா... நான் தமிழ்ப்படமே சரியா பாத்ததில்லை. சரி... என்னைப் பற்றி நினைச்சதுக்கும், அந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம்?''
''சம்பந்தம் இருக்கு... அந்த படத்துல கதாநாயகி ரேகா, உன்னை மாதிரியே ஒரு சீன்ல டான்ஸ் ஆடுவா.''
''ரியலி.... ரேகா ஈஸ் எ குட் டான்சர்... நடனம் நல்லா இருந்ததா?''
''நான் சொல்ல வந்தது ரேகா ஆடின டான்சைப் பற்றி இல்ல; அவங்க போட்டிருந்த டிரஸ்சைப் பற்றிதான். அந்த சீன்ல அவங்க டிரஸ்சே போட்டுக்கல.''
''என்ன... டிரஸ்சே போட்டுக்கலையா?''
''வெயிட், வெயிட்... அவசரப்படாதே. டிரஸ்ன்னு எந்தத் துணியும் போட்டுக்கல... அவங்க உடல் முழுக்க நகைகளை போட்டு, டிரஸ் போடாத உணர்வே இல்லாத அளவுக்கு அலங்கரிச்சி இருந்தாங்க. உன்னை அந்த மாதிரி கற்பனை செஞ்சு பார்த்தேன். எப்படி என்னோட கற்பனை?''
''நீங்களும், உங்க கற்பனையும். ஆமா... கற்பனை அத்தோட நின்னு போச்சா, அதுக்கு மேலேயும் போச்சா?''
''மது... இதுக்கப்புறம் தான் சுவாரசியமே இருக்கு. ரேகா உடம்புல இருந்த அத்தனை நகைகளுக்கும் லிங்க் கொடுத்து ஒரு இடத்துல கண்ணுக்குத் தெரியாத அளவுல ஒரு சின்ன கொக்கி. அந்த கொக்கியைக் கண்டுபிடிச்சு, அதப் பிடிச்சு இழுத்தா உடம்புல இருக்கற அத்தனை நகையும் கழண்டு கீழே விழுந்துடும்.''
வெட்கத்தில் அவள் உடல் முழுக்க குப்பென்று வியர்த்தது... என்ன மாதிரியான ஒரு கற்பனை. இப்படி ஒரு கற்பனைக்கு, அவன் வேறு எந்தப் பெண்ணையும் நினைக்காமல், தன்னை நினைத்துப் பார்த்ததில், அவளுக்குப் பெருமையாக இருந்தது.
'இவனையா தவறாக நினைத்தோம்?'
''அப்புறம்... ரேகாவோட மொத்த நகையும் கழண்டு விழுந்துடுச்சா?''
''இல்ல... சாமர்த்தியமாக ஊக்கை கண்டு பிடிச்சுடறார் சசிகபூர். அவர் கொக்கியில கையை வெச்சதும் சீன் முடிஞ்சு போச்சு. ரேகாவோட காலுக்கடியில மொத்த நகையும் விழுந்து கிடக்குது... ரேகாவோட பாதங்களையும், நகைகளையும் காட்டி, காட்சியை முடிச்சிட்டாங்க.''
''அடப்பாவமே... படம் பார்த்தவங்க ரொம்பவும் ஏமாந்து போயிருப்பாங்களே!''
''இல்ல மது... அந்தக் காட்சியோட அழகே, அப்படி எதையும் காட்டாமல் விட்டதுதான்... சொல்லப் போனால், வாழ்க்கையோட எல்லா அம்சங்களுமே இந்தக் காட்சி மாதிரிதான் இருக்கணும். எல்லாத்தையும் நம் கண், முன் கொண்டு வந்து கொட்டி விடக் கூடாது. 'இதுல இன்னும் கூட ஏதோ இருக்கு'ன்னு அதப்பத்தி நம்பள யோசிக்க வைக்கணும்.''
''பரவாயில்லையே... இப்படியெல்லாம் கூட நீங்க யோசிப்பீங்களா? உங்கள நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு.''
''தேங்க் யூ டார்லிங்.''
அவர்கள் இருவருக்குமான போன் உரையாடல் மிகவும் சந்தோஷமாகவும், ரம்மியமாகவும் இருப்பதை இருவருமே உணர்ந்தனர். அந்த உரையாடலை அத்துடன் முடித்திருந்தால், இருவரின் அன்றைய பொழுது சந்தோஷமாகவே கழிந்திருக்கும்; ஆனால்...
அவர்களது சந்தோஷத்தைக் குலைக்கும் படியான ஒரு சம்பாஷணையை ஆரம்பித்தான் நரேன்.
''மது டியர்... இன்னைக்கு ஒரு விசேஷம்... ஒரு வித்தியாசமான கேரக்டரை சந்திச்சேன்.''
''இன்ட்ரஸ்ட்டிங்... யார் அந்த கேரக்டர்?''
''மிஸ்டர் டேவிட் ஆண்டர்சன்.''
''டேவிட் ஆண்டர்சன்; கேள்விப்படாத பெயராக இருக்கே... யார் அது?''
''நானே இன்றைக்குத்தான் முதன் முதலாய் பார்த்தேன்.''
''ஈஸ் இட்... ஹூ ஈஸ் ஹீ?''
''ஏர் ஹோஸ்டஸ் கவிதாவின் கணவன்... ஐ மீன் மாஜி கணவன்.''
அதுவரை அவனோடு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த மதுரிமாவின் குரல், அடைபட்டு நின்று போனது. மதுரிமாவின் நினைவில் கவிதா திருமணம் ஆனவள் என்பதோ, இப்போது அவள் கணவனுடன் இல்லை என்ற அர்த்தத்தில் நரேன் சொல்லிய மாஜி கணவன் என்பதோ தோன்றாமல், தன் கணவன் எதற்காக கவிதாவின் கணவனை சந்தித்தான் என்ற கேள்வியே மிகப் பெரிதாக எழுந்து, அவளை யோசிக்க வைத்தது.
''என்ன மது... நான் சொன்னது அதிர்ச்சியாக இருக்கிறதா?''
''அதெல்லாம் ஒன்றுமில்லை... நீங்கள் எதற்காக மிஸ்டர் ஆண்டர்சனைத் தேடிப் போனீங்க?''
''நான் அவனைத் தேடிப் போகவில்லை; அவன்தான் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், என்னை சந்தித்தான்.''
''எதிர்பார்க்காத சூழ்நிலை என்றால், என்ன சூழ்நிலை?''
அவளின் சந்தேகம் கேள்விக் கணையாய் பாய, ஒரு வினாடி திடுக்கிட்டுப் போனான். தான் சொன்னதை மதுரிமா வேறு ஒரு கோணத்தில் யோசித்துப் பார்க்கிறாள் என்பது அவனுக்கு தாமதமாகப் புரிந்தது.
''மது... நீ பயப்படுகிற மாதிரியான எந்த சூழ்நிலையும் அல்ல அது; ரிலாக்ஸ்.''
''நான் ஏன் பயப்பட வேண்டும்; ரிலாக்சாகத்தான் இருக்கிறேன். சொல்லுங்க... என்ன சூழ்நிலையில் ஆண்டர்சன், உங்களை சந்தித்தார்?''
''அது வந்து மது... இன்றைக்கு நான், கவிதாவின் வீட்டிற்குப் போயிருந்தேன்.''
''கவிதாவின் வீட்டுக்கு நீங்கள் எதற்காகப் போனீங்க?''
''சும்மாதான்... வீட்டில் தனியே இருக்க என்னவோ போல் இருந்தது. நேரத்தைக் கொல்வதற்காக சும்மா பேசிவிட்டு வரலாம் என்று போனேன்.''
''ரியலி... சும்மா பேசிவிட்டு வந்து விட்டீர்களா?''
மதுரிமாவின் கேள்வியின் தொனி வித்தியாசமாக ஒலிப்பதை உணர்ந்தான் நரேன்.
''மது... என்ன ஆச்சு உனக்கு. ஒரு குற்றவாளியை குறுக்கு விசாரணை செய்வதைப் போல் இருக்கிறது உன் கேள்விகள். நான் உன் கணவன்.''
''நான் உங்கள் மனைவி; அதனால்தான் இந்தக் கேள்விகள்.''
''மது... புரிந்து கொள். நான், உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை. நடந்த உண்மையை உன்னிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறேன்.''
''நான், உங்களை நம்புகிறேன்... இதைப் பற்றி பிறகு நேரில் பேசுவோம். ஆண்டர்சனைப் பற்றி எதுவோ சொல்ல வந்தீர்களே!''
''யெஸ்... ஆண்டர்சன் ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் மனோவியல் பேராசிரியராக வேலை பார்க்கிறார்; அத்துடன், சில ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்...''
''நல்ல விஷயம் தானே... இதில் நீங்கள் வித்தியாசமாய் நினைக்க என்ன இருக்கிறது?''
''ஆண்டர்சன் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி...''
''அப்படி என்ன ஆராய்ச்சி அது?''
''பெண்கள் மீதான பாலியல் தாக்கம். ஆண்டர்சன் ஈஸ் ரிசர்ச்சிங் தி இம்பாக்ட் ஆப் செக்ஸ் ஆன் விமன்.''
ஒரு வினாடி ஆடிப் போனாள் மதுரிமா. 'நான் சந்தேகப்படும், ஏன் பயப்படும் கவிதாவின் கணவன் ஆண்டர்சன், ஒரு பாலியல் ஆராய்ச்சியாளன். தற்சமயம், ஆண்டர்சன் கவிதாவின் மாஜி கணவனாக மாறிப் போனதற்கு அவனது இந்த பாலியல் ஆராய்ச்சியே ஒரு காரணமாக இருக்குமோ!'
''அது சரி... ஆண்டர்சன், கவிதாவின் முன்னாள் கணவன் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?''
''இந்த ஆராய்ச்சிதான் அவர்கள் வாழ்க்கையை முடித்து விட்டது; இருவரும் விவாகரத்து வாங்கிக் கொண்டனர்.''
நரேனின் ஒவ்வொரு சொல்லும் மதுரிமாவின் இதயத்தில் நெருப்புத் துண்டுகளாய் வந்து விழுந்தன.
கவிதாவை முதன் முதலாக சந்தித்ததிலிருந்து, இன்று வரை நிகழ்ந்திருக்கும் அனைத்தும், மனதில் மீண்டும், மீண்டும் நிழலாடி, மதுரிமாவைத் துன்புறுத்தின.
தான் இல்லாத நேரத்தில் நரேனை சந்திக்க, கவிதா தன் வீட்டிற்கு வருவதும், கணவனைப் பிரிந்து வாழும் கவிதாவை, அவள் வீட்டிற்கு இவன் சென்று சந்திப்பதும்...
கூடவே, 'நரேனைப் பற்றி உன்னிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது...' என்று வைத்தீஸ்வரன் சொன்னது அவள் நினைவில் தோன்ற...
''நரேன்... உங்கள் எம்.டி., வைத்தீஸ்வரனைப் பற்றி நீங்கள் என்னிடம் சொன்னது நினைவில் இருக்கிறதா?''
''ஓ... யெஸ்...'அவரை மீண்டும் சந்திக்காதே... டிரை டு அவாய்டு ஹிம்...' என்று சொன்னேன்.''
''இப்போது நான் ஒன்று சொல்லட்டுமா... தயவு செய்து கவிதாவை மீண்டும் சந்திக்காதீர்கள்; டிரை டு அவாய்டு ஹர்.''
அதற்கும் மேலே பேச முடியாதவளாய் மதுரிமா குலுங்கி அழும் ஓசை நரேனுக்கு கேட்டது.
''மது... ஏன் அழற... எது எதையோ நினைச்சு உன்னைக் குழப்பிக்காதே, ப்ளீஸ்...''
''என் பயமும் அதுதான் நரேன். நான் குழம்பல; ஆனா, மத்தவங்க உங்களை குழப்பிடுவாங்களோன்னு பயமா இருக்கு.''
அத்துடன் மதுரிமா போனைத் துண்டிக்க, மகள் அழுவதைப் பார்த்த அதிர்ச்சியில் மதுரிமாவின் அம்மா, கையில் காபியுடன் வேகமாக வந்தாள்.
''என்ன ஆச்சு மது... ஏன் அழுவுற... யாரு போன்ல?''
''அம்மா... உடனடியா நாம அமெரிக்கா புறப்படறோம்.''
''இன்னும் ரெண்டு புரோகிராம் இருக்கே?''
''நோ மோர் புரோகிராம்; ரெண்டையும் கேன்சல் பண்ணப் போறேன்.''
மகளைப் புரிந்து கொள்ள முடியாமல், நின்றிருந்தாள் மதுரிமாவின் தாய்.
— தொடரும்.
- தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன்
