PUBLISHED ON : ஜூலை 31, 2011

இதுவரை: நரேன், மதுரிமாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, மதுரிமாவும், அவள் அம்மாவும் இந்தியா திரும்பினர். இவ்விஷயம் அறிந்த கவிதா, நரேனை சந்திக்க விரும்புவதாக கூறினாள். நரேன் வீட்டுக்கு வந்த கவிதா, அவனுடன், நீண்ட நேரம் ஆண் - பெண் திருமண வாழ்க்கை பற்றியும், அவர்களுக்குள் ஏற்படும் பிரிவு எத்தகையதாக இருக்கும் என்பது பற்றியும் பேசினாள் —
மனித வாழ்க்கை, தன்னுள் நிறைய சுவாரசியங்களை உள்ளடக்கியது. சில நேரங்களில், வாழ்க்கை எங்கே ஆரம்பமாகிறது என்று நாம் எண்ணுகிறோமோ, அங்கே, அது முடிந்து போகும்; சில நேரங்களில், எங்கே முடிந்து போய் விட்டதாக நினைக்கிறோமோ, அங்கிருந்து வாழ்க்கை புதிதாய் ஆரம்பமாகும்.
இந்த ஆரம்பமும், முடிவும் நமக்குத் தெரியாமல் இருப்பதே வாழ்க்கையின் விசித்திரமும், சுவாரசியமும். அப்படி ஒரு மனநிலையில்தான், அன்று அலுவலகத்திற்கு வந்திருந்தான் நரேன்.
'நாளை காலையில் உனக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது...' என்று வைத்தீஸ்வரன் மொட்டையாகச் சொல்லிவிட்டு, போனைத் துண்டித்து விட்டார். அது, என்ன செய்தியாக இருக்கும் என்ற ஆவலுடன், அவன் வரவேண்டிய நேரத்திற்கு சற்று முன்னதாகவே ஆபீசுக்கு வந்து, வைத்தீஸ்வரனின் வருகைக்காகக் காத்திருந்தான் நரேன்.
இன்டர்காமில், பி.ஏ.,வை அழைத்து, சூடாக ஒரு காபி அனுப்பும்படி சொல்லிவிட்டு, சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி யோசனையில் இருந்தான் நரேன்.
பி.ஏ.,வே காபியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
''என்ன... காபியை நீ கொண்டு வருகிறாய்... கேன்டீன் பையன் வரவில்லையா?''
''இல்லை சார்... இன்று நீங்கள் சீக்கிரமாக வந்து விட்டீர்கள். கொஞ்ச நாட்களாகவே நீங்கள் ஏதோ ஒரு மாதிரி... ஐ மீன் வருத்தமாக காணப்படுகிறீர்கள். உடம்பு சரி இல்லையா சார்?''
''அதெல்லாம் ஒன்றுமில்லை... தேங்க் யூ.''
''அப்போ... வேற ஏதாச்சும் பிரச்னையா சார்?''
''நோ... நோ... ஒரு பிரச்னையும் இல்லை. மனைவி ஊரில் இல்லை; அதனால், சீக்கிரமா வந்து விட்டேன்.''
சொல்லிவிட்டு, மெல்ல மீண்டும் புன்னகைத்தான் நரேன்.
''உங்க ரிசப்ஷனில் உங்கள் மனைவியைப் பார்த்தேன்... அவங்க பேர் கூட ஞாபகம் இருக்கு; மதுரிமா... பெயரைப் போலவே அவங்களும் ரொம்ப அழகு. உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி சார்.''
''தேங்க் யூ.''
''சார்... மனைவி வீட்ல இல்லேன்னு காலையில ஆபீசுக்கு வந்துட்டீங்க... ஆபீஸ் முடிஞ்சப் பிறகு போர் அடிக்குமே; இன்னைக்கு ஈவினிங் ஏதாவது புரோகிராம் வெச்சிருக்கீங்களா?''
''ஆமா... போர் அடிக்கும்தான். ஊரையெல்லாம் சுத்திட்டு, வீட்டுக்குப் போய், 'டிவி' பார்த்துட்டே தூங்க வேண்டியதுதான்.''
''நீங்க விரும்பினா என்னோட வீட்டுக்கு வரலாம்... ரொம்ப நாளாவே உங்கள விருந்துக்குக் கூப்பிடணும்ன்னு ஒரு ஆசை; இன்னைக்கு அதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு!''
நரேன் உஷாரானான்... 'இவள் நமக்கு தூண்டில் போடுகிறாள். இவள், இதற்கு முன் வேலை பார்த்த செக்ஷனில், இதே மாதிரி ஏதோ செய்ய முயற்சித்து, அதற்காகவே மாற்றப்பட்டாள்...' என்ற நினைவு தோன்றியது.
''விருந்தா... உனக்கு எதற்கு வீண் சிரமம். நான் எதையாவது ஓட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறேன்...''
''சார்... நான் உங்களைக் கட்டாயப் படுத்தவில்லை. நான் எதிலும் கொஞ்சம் வெளிப்படையானவள். உள்ளுக்குள் ஒன்றாகவும், வெளியே வேறாகவும் என்னால் நடிக்க முடியாது. வருவதும், வராமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.''
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நரேன் குழம்ப, நல்ல வேளையாக உள்ளே வந்தார் வைத்தீஸ்வரன். அறைக்குள் தனியே அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை எதிர்பார்க்காதவராய், அவர்களை மாறி, மாறிப் பார்த்தார்.
பிறகு, குறும்பான புன்முறுவலுடன், ''சாரி... தொந்தரவு செய்துட்டேனோ?'' என்று கேட்டார்.
''அதெல்லாம் ஒன்றுமில்லை சார்... சும்மாதான் பேசிட்டு இருந்தோம்.''
அவரசம், அவசரமாக அவர் கேள்விக்கு பதில் சொன்னான் நரேன்.
அவருக்கு முன்பாக மேற்கொண்டு பேச விரும்பாத பி.ஏ., வெளியேற முற்பட்டாள்...
''சார்... நான் சொன்னதை யோசிச்சுப் பாருங்க... வர்றேன்.''
சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து வெளியேறினாள்.
நரேன் முன்பாக அமர்ந்து, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தபடி, ''நரேன்... உனக்கு மதுரிமா பத்தி யோசிக்கவே நேரம் பத்தல... இவ எத பத்தி உன்னை யோசிக்கச் சொல்றா?'' என்று கேட்டார் வைத்தீஸ்வரன்.
''வேற ஒண்ணுமில்ல சார்... ஈவினிங் அவ வீட்டுக்கு டின்னருக்கு வர முடியுமான்னு கேட்டா.''
''உண்மையாவா... நீ என்ன பதில் சொன்னே?''
''என்ன சார் இது... என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா... இதுக்கு, நான் என்ன பதில் சொல்லி இருப்பேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.''
''நீ புத்திசாலியா இருந்தா, வர்றேன்னு சொல்லி இருக்கணும்; முட்டாளா இருந்தா வரமாட்டேன்னு மறுத்திருக்கணும். நீ புத்திசாலியா, முட்டாளா?''
கேட்டுவிட்டு, சப்தமாக சிரித்தார் வைத்தீஸ்வரன். மெல்ல சிரித்தபடி, அவரது கேள்விக்கு பதில் சொன்னான் நரேன்...
''இந்த விஷயத்தில் நான் முட்டாளாகவே இருக்கேன் சார்.''
''வரமாட்டேன்னா சொன்னே?''
''இல்ல சார்... எந்த பதிலும் சொல்லல.''
''அப்புறம் எப்படி நீ முட்டாள்ன்னு சொல்ற... நீ முடியாதுன்னு சொல்லலையே... மதில் மேல் பூனை மாதிரி, நீ இன்னும் முடிவுக்கு வரலியே... நீ புத்திசாலியா மாற வாய்ப்பும், நிறைய நேரமும் இருக்கே நரேன்...''
''இல்ல சார்... நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல. மதுரிமாவுக்கு துரோகம் செய்ய என் மனசு இடம் கொடுக்காது.''
இவரோடு இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தால், இவர் சொல்வதை ஏற்க வேண்டி வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட, திடீரென்று அவர் சொன்ன, 'நல்ல விஷயம்' நினைவுக்கு வர, பேச்சை மாற்றினான் நரேன்...
''சார்... நேற்று எதுவோ நல்ல விஷயம் சொல்றதா சொன்னீங்களே...''
''அதுவா... நேத்து உன் மனைவி மதுரிமாகிட்ட இருந்து எனக்கு போன் வந்தது.''
''மது, என்ன சார் சொல்றா?''
''உன் மேல அவளுக்கிருந்த கோபம் கொஞ்சம், கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வருதாம். அவளால உன்னை மறக்க முடியலையாம். உன்னை நெனச்சு ரொம்பவே வருத்தப்பட்டா. உன்னால அவளுக்கு எப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடிஞ்சுதுன்னு அழறா.''
''நீங்க என்ன சார் சொன்னீங்க?''
''சரி மது... நீ எப்படி நரேனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தேன்னு கேட்டேன்... அதுக்கு அவ, 'சத்தியமா அது என்னோட எண்ணம் இல்ல சார்... எல்லாம் அம்மாவோட ஐடியா... நான் அப்படி நெனச்சுக் கூடப் பார்க்கலே...'ன்னு அழறா... ரொம்ப பாவமா இருந்துச்சு.''
''சார்... உடனே நீங்க, 'இதுவும் நரேனோட எண்ணம் இல்ல... நான் தான் அப்படி ஐடியா கொடுத்தேன்...'ன்னு சொல்லிட்டீங்களா... மது ஏத்துக்கிட்டாளா?'' அவன் கேட்டதில், வாய்விட்டு சப்தமாக சிரித்தார் வைத்தீஸ்வரன்.
''குழந்தை மாதிரி கேள்வி கேட்குற... நீயும், மதுவும் உங்க விவாகரத்து விஷயத்துக்கு ஒரே மாதிரி காரணமா, மத்தவங்க மேல பழியைப் போட்டா எப்படி? அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்துல, ரெண்டு பேருக்குமே சுயமா சிந்திக்கிற புத்தி இல்லேன்னு ஆயிடும்; அதனால, நான் அப்படி சொல்லல...''
''அப்போ மது என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டிருப்பாளே சார்...''
''நீ சொல்வது தவறு... இங்கே தான் நீ மாத்தி யோசிக்கணும். அவளுக்கு உம்மேல, கவிதா விஷயமா வந்த சந்தேகம், உன்னை கோபப்பட வெச்சிருக்குன்னு அவ உன்னை சரியாவே புரிஞ்சுக்கணும். அதுக்குக் காரணம், மது மேல நீ வெச்சிருக்கிற அளவு கடந்த அன்புதான் நாம அவளை யோசிக்க வெச்சிருக்கோம்... இந்த சூழ்நிலையில், நான் உண்மையை சொன்னா, மதுவுக்கு உம்மேல அன்பு வர்றதுக்கு பதிலா, கோபமும், வெறுப்பும்தான் வரும்.''
வைத்தீஸ்வரன் சொன்னதை நரேனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கெட்டதை செய்து, நல்லதை பெறுவதற்கு அறிவும், அனுபவமும், சாமர்த்தியமும் வேண்டும்; அவை, அவரிடம் இருப்பதாக உணர்ந்தான்.
கண்கள் கலங்க, அவரது கைகளைப் பற்றிக் கொண்டான் நரேன்.
''சார்... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... நான் இப்பவே மதுவுக்கு போன் போட்டு பேசட்டுமா?''
''தப்பு செய்யாதே... இப்ப நீயா மதுகிட்ட பேசிடக் கூடாது. மதுவை, உன்னைப் பத்தி இன்னும் கொஞ்சம் யோசிக்க வைக்கணும். மதுவே உனக்கு போன் பண்ற சூழ்நிலைக்கு அவளைக் கொண்டு வரணும். நான் சொல்றது நிச்சயம் நடக்கும். இன்னைக் கோ, நாளைக்கோ மதுகிட்டே இருந்து நிச்சயம் உனக்கு போன் வரும்.''
''இப்பதான் சார் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு.''
''ஆறுதலா இருக்கா... சந்தோஷமா இருக்கா?''
''ரெண்டும்தான் சார்.''
''சரி... இந்த சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டாமா நரேன்?''
''சொல்லுங்க சார்... கொண்டாடிடுவோம். இன்னைக்கு ஈவினிங் எந்த ஓட்டல்ல பார்ட்டி வெச்சுக்கலாம்... நான் ரெடி.''
வைத்தீஸ்வரன் ஒரு குறும்பான புன்னகையுடன், நரேனைப் பார்த்து சொன்னார்...
''ஓட்டல்ல பார்ட்டியா... எப்பவும் பெரிசா நினைக்கப் பழகிக்க நரேன். இப்ப உனக்கு என்னோட, 'அட்வைஸ்' என்ன தெரியுமா?''
''சொல்லுங்க சார்.''
''கொஞ்ச நேரத்துக்கு முன் ஒரு பார்ட்டி; ஐ மீன் உன்னோட பி.ஏ., உன்னை விருந்துக்கு கூப்பிட்டிருக்கா இல்ல... இன்னைக்கு இந்த சந்தோஷத்தை உண்மையிலேயே அனுபவிக்கணும்ன்னா, நீ பி.ஏ., வீட்டுக்குத்தான் பார்ட்டிக்குப் போகணும்.''
சொல்லிவிட்டு, கண்களை சிமிட்டியபடி சிரித்தார் வைத்தீஸ்வரன்.
அதன் பிறகு, அவர் வெளியேறிய வெகு நேரத்திற்கு பிறகும், மதுரிமா பற்றிய யோசனையிலேயே அமர்ந்திருந்தான் நரேன்.
அதே நேரத்தில் —
இந்தியாவில், சென்னையிலுள்ள மதுரிமாவின் வீட்டில், மதுரிமா சற்றும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை அணுகும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான் பாஸ்கரன்.
மதுரிமா குளித்து முடித்து, ஈரக் கூந்தலை அள்ளி செருகியபடி, நரேன் அவளை மிகவும் பார்த்து ரசித்த, நீலநிற மெல்லிய மேக்சியில், கட்டிலின் மையப் பகுதியில், முழங்காலை இரு கைகளாலும் கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருப்பதை, ஜன்னல் வழியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் பாஸ்கரன்.
பாஸ்கரனின் பார்வையில், மதுரிமா கஜுராஹோ சிற்பம் ஒன்று கோவில் கோபுரத்தை விட்டு இறங்கி வந்து, கட்டிலில் அமர்ந்து, அவனை கண்சிமிட்டி அழைப்பதைப் போல் உணர்வு ஏற்பட, மூடியிருந்த அறைக் கதவை நோக்கி மெல்ல நடந்தான்.
உண்மையிலேயே பெண் தனித்திருப்பது ஆபத்தான ஒரு விஷயம்தான்.
— தொடரும்.
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்
