தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 31, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நோய் நொடியின்றி,தொண்ணூறு வயது வரை திடகாத்திரமாக இருந்த பெரியவரை, நிருபர் ஒருவர் பேட்டி கண்டார்.

'இந்த வயதிலும் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களே... எப்படி?'

'நான் வெற்றிலை போடுவதில்லை, புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை; அதனால்தான், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்...' என்றார்.

அந்த நேரத்தில், மாடியில் நாற்காலி உருளும் சப்தமும், 'ஹோ... ஹோ...' என்ற கூச்சலும் கேட்டது.

'மாடியிலிருந்து என்ன சப்தம்?' என்று கேட்டார் நிருபர்.

'அதுவா, என் தந்தை குடித்து விட்டு, நிதானம் இல்லாமல் இருக்கிறார்!' என்றார், அந்தப் பெரியவர்.

— கண்ணதாசன் சொன்னது...

கோவை அய்யாமுத்து, காங்கிரசிலும், பிறகு சுயமரியாதை இயக்கத்திலும், ஈ.வெ.ரா.,வின் வலது கரமாக விளங்கியவர். கட்சி மாநாடுகளில் இவர்தான் சிறப்புரை ஆற்றுவார்; சிறந்த பேச்சாளர். ஈ.வெ.ரா.,வின், 'குடியரசு' பத்திரிகைக்கு இவர்தான் ஆசிரியர். காந்திஜி, ராஜாஜியோடும் நெருங்கிப் பழகியவர். அவர், 'செல்வமும், அதிகாரமும்!' என்ற கட்டுரையில், தன் நண்பர் ஈ.வெ.ரா.,வை படம் பிடித்துக் காட்டுகிறார்.

என் மதிப்பிற்குரிய நண்பர், ஈ.வெ.ரா., செல்வத்திடமும், செல்வத்தை வைத்திருக்கும் செல்வரிடத்தும் மட்டற்ற மதிப்பு உடையவர்.

அவரிடத்தும் செல்வம் ஓரளவு குவிந்திருக்கிறது. தாம் ஆண்டுதோறும் ஈரோடு நகராட்சி மன்றத்துக்கு, ஐந்தாயிரமோ, அதற்கு அதிகமாகவோ சொத்து வரி செலுத்தி வருவதாகப் பெருமிதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார்.

தாம் செல்வராகையால் தம்மைப் பிறர் மதிக்க வேண்டும். மதிப்பாக நடத்த வேண்டும் என்று எப்போதும் எதிர்ப்பார்க்கிறார். 'செல்வம் இல்லாதவர்கள் கூலி வேலை செய்து, பிழைப்பதற்குத்தான் தகுதியுடையவர்கள்...' என்று கருதுவார். அவர்களை, 'அன்னக் காவடிகள், தகர போனிகள்...' என்றும், 'கீழே பூமியும், மேலே ஆகாசமும் அன்றி வேறெதுவும் அற்றவர்...' என்றும் பரிகாசமாகச் சொல்வார்.

'இவனுக்கு என்ன தகுதி? அவனுக்கு என்ன யோக்கியதை?' என்று பணத்தைக் கொண்டே மனிதனை எடை போட்டுப் பார்ப்பார்.

பனகல், பொப்பிலி, ராஜா சர் அண்ணாமலை, சவுந்திர பாண்டியன், ஆர்.கே.சண்முகம், ஜமால் முகம்மது போன்ற செல்வர்கள் தான் ஆட்சி பீடத்தில் அமரத் தகுதியுடையவர்கள் என்று கருதுவார்.

யாதுமற்ற, 'அன்னக் காவடிகள்' அரியாசனம் ஏறி, அதிகாரம் செய்ய வாய்ப்பளிக்கும், 'ஜனநாயகம்' என்ற சனியனைக் கண்ணால் காண்பதும், வாயால் சொல்வதும், ஈ.வெ.ரா.,வுக்கு துளி கூடப் பிடிக்காது.

உலகில் ஒரு கடவுளைக் கூட ஈ.வெ.ரா., ஏற்றுக் கொள்வாரேயொழிய, அன்னக் காவடிகளை அரசர்களாக்கும் இந்தப் பெருஞ் சனியனாகிய ஜனநாயகத்தை அவர் இப்பிறவியிலும், மற்றெந்தப் பிறவியிலும் நிச்சயமாக, முடிவாக, தீர்மானமாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

ஏதோ வேண்டா வெறுப்பாக, காமராஜரும், அண்ணாதுரையும், கருணாநிதியும் இதர கண்ணீர்த் துளிக்கும், ஆட்சி பீடத்திலிருந்து அதிகாரம் செய்த காரணத்தால், அவர்களை அண்டுவதால் தமக்கு மரியாதையும், மலர் மாலைகளும், சிறப்பு விழாக்களும், பிற சிறப்புகளும் கிடைக்கின்றன என்ற காரணத்தால் அவர்களை, 'பச்சைத் தமிழன்' என்றும், 'கலைஞர் கருணாநிதி' என்றும், தம்முடைய பரிவாரங்கள் என்றும், பரிந்துரைகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கிறார்.

ஆனால், அவருடைய மனதின் அடி ஆழத்தை சோதித்துப் பார்த்தால், 'ஹும்... என்னிடம் மாதம், முப்பது ரூபாய்க்கு இருந்த பயல், இப்போது மந்திரியாகி விட்டான். மந்திரியாவதற்கு அவனுக்கு என்ன யோக்யதை இருக்கிறது...' என்ற பொருமல், பெருமளவில் காணப்படும்.

—'சிவாஜி' மாத இதழ், 1970லிருந்து...

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us