PUBLISHED ON : அக் 20, 2013

''இது என்னுடைய கடைசி விண்ணப்பம்... உழைக்கணும்கற உத்வேகமும், தன்னம்பிக்கையும் உள்ள, பத்து பேர் மட்டும் என் கூட வாங்க. நாம் நம்முடைய கிராமத்தையே, நாட்டின் முன் மாதிரி கிராமமா மாத்திக் காட்டுறேன்.''
மார்புக்கு குறுக்கே, கைகளைக் கட்டியபடி, ஆனந்தன் சொன்ன போது, இது போன்றதொரு இளைஞனை, இதுவரை சந்தித்ததில்லை என்று, வியப்பு உண்டானது அறுப்பூர் கிராம மக்களுக்கு.
பரந்து விரிந்த ஆல மரத்தின் கீழ், அன்றைய, மாலை நேர பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று, ஊர்க்காரர்கள் கூடியிருந்தனர். எல்லாமே உறவுச்சனங்கள். உறவுச்சனம் என்பது, கிராமத்திற்காக பதியம் போடப்பட்ட வார்த்தை! ஒரு ஊரில் வாழுகிற எல்லாருமே ஒருவருக்கொருவர் ஏதாவது ஒரு உறவு முறையாக இருப்பர். அது, கிராமத்து மக்களுக்கான வாத்சல்யம்.
''யப்பா ஆனந்தா... கணம் அறியாம தூக்கிப்போட்டு, கால் நோவுதே, கை நோவுதேன்னு சத்தம் போடக் கூடாது. கிராமங்கறது தொடைச்சு எரியுற கரித்துணி இல்ல. நானூறு குடும்பம் இருக்கு இங்க. ஒவ்வொரு மனுசனும் நம்பிக்கை நரம்பறுந்து கிடக்கான். எம்புட்டோ அரசியல்வாதிங்க, எத்தனையோ அதிகாரிங்க செய்ய முடியாதத, ஒத்தையா நின்னு, நீ எப்படிய்யா சாதிப்பே? சின்னப்புள்ளை வெள்ளாம வீடு வந்து சேராதுய்யா,'' நம்பிக்கையற்று, சொன்னார் நாட்டாமைக்காரர்.
''படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதினவன் ஏட்டை கெடுத்தான்'னு சும்மாவா சொன்னாங்க... உன் படிப்பை, எங்க வாழ்க்கையில காட்டாத. நாமளும் எம்புட்டு நாளைக்குத்தேன், ஆலை இல்லாத ஊருக்கு, இலுப்பை பூ தேன்னு வாழறது...'' நிஜமாகவே வருத்தப்பட்டார் தலையாரி.
''யப்பா ஆனந்தா... நம்ம குடும்பத்துல, எட்டு தலைமுறையா விவசாயந்தேன். எட்டு தலைமுறைக்கு முந்தின, முப்பாட்டன் பேரக் கேட்டா யாருக்கு தெரியும்? ஆனா, அவுக விட்டுப் போன பூமி, காய்ஞ்சு போகாம, இம்புட்டு நாளும் நம்பள காப்பாத்துச்சு. ஆனா, இப்போ, மழையும் இல்லாம, தண்ணியுமில்லாம என்னதான் செய்ய முடியும். மனசு விட்டுப் போச்சுய்யா. அதான் ஊரோட போய்ட்டா, எங்கயும் கூலி வேலையாவது செஞ்சு பொழச்சுக்கலாம். நம்ப புள்ளைகளாவது படிச்சு முன்னேறும் இல்லயா,'' நிதர்சனம் பேசினார் தர்மகர்த்தா .
ஆனந்தனும், அவனுடைய மனைவி பூங்கோதையும், மிகுந்த வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
''ஆனந்தா... ஆகுங்கால் ஆகும், போகுங்கால் போகும்யா. நீ படிச்சபய. உனக்கு தெரியாதா என்ன? சுண்டக்கா, காப்பணம் சுமைக்கூலி முக்கா பணம் கொடுக்கற வேதனையான நிலமையில தான் விவசாயி இருக்கான். நாம விட்டுட்டு போவோம். அப்பதான், நம்மோட அருமை. இந்த உலகத்துக்கு புரியும்.'' ஆவேசமாய் சொன்னார் நெல்லையப்பர்.
தீர்க்கமாய் எல்லாரையும் பார்த்தான் ஆனந்தன். வெளிச்சப் பொட்டாய், மேற்கில் நீந்திக் கொண்டிருந்த சூரியன், அடிவானில் பெருமூச்சை பிரசவித்து சென்றது போல், ஒரு வெப்பக் காற்று, 'குப்'பென்று, அனைவரின் மேலும் பட்டுத் தெறித்தது.
''நான், என்னை எப்படி உங்களுக்கு புரிய வைக்கப் போறேன்னு தெரியல. ஆனா, புரிய வச்சாகணும். நான் உங்க மனுஷன்; உங்கள்ல ஒருத்தன்; என்னை நம்புங்க. உங்க மனுஷனா நினைச்சு, எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க. எங்கிருந்தோ வந்து, வாய் நிறைய பொய்யை மட்டுமே பேசிட்டு, நம்முடைய நம்பிக்கையையும், வாழ்வாதாரத்தையும் சுரண்டிட்டு போற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நம்பி, ஒவ்வொரு முறையும் அவுங்களுக்கு, நாம வாய்ப்பை தர்றோம். நான் உங்களில் ஒருத்தன். நான் கேட்குற வாய்ப்பை தர மாட்டீங்களா?'' கூட்டத்தின் முன், கைகோர்த்து நின்றான்.
எல்லாரும் அவனை வினோதமாய் பார்த்தனர். ராக்காயி கிழவி தான், வாய் திறந்து முதலில் கேட்டது.
''நாட்டமகாரய்யா... செல்லப் பாண்டி அண்ணே, அந்தக் காலத்துலேயே விவசாயத்துல சாதனை செய்து, விருதெல்லாம் வாங்கினவரு. அவர் மகன் ஆனந்தன், நிச்சயம் எதுனா நல்லது தான் சொல்லுவான்ய்யா. ஆனந்தா... நீ என்ன கேட்கறன்னு, உடைச்சு கேளு. அப்புறம் அது நமக்கெல்லாம் தோதுப்படுமா, இல்லையான்னு பேசிக்கலாம்.''
''நாட்டமக்காரய்யா... எனக்காக நீங்க, ஒரு வருஷம் தந்தாப் போதும். தரிசாப் போன நம்முடைய பூமியில், தங்கத்தை விளைவிச்சுக் காட்டுறேன்.'' நம்பிக்கை முனை தீட்டிய அவனுடைய வார்த்தைகள், இளைஞர்களை புருவம் உயர்த்தி, நிமிர்ந்து உட்கார வைத்தது.
''என்னவே சொல்ற... ஒரு வருஷத்தை தான்னா என்ன அர்த்தம். தெளிவா பேசுய்யா. இப்பவே தவிச்சுப் போய் கிடக்கோம். இன்னொரு வேதனையை தாங்கற சக்தி, எங்க உடம்புக்கும் இல்ல, மனசுக்கும் இல்ல...'' தளர்ந்த குரலில், சொன்னார் தர்மகர்த்தா.
ஆனந்தன் நிமிர்ந்து நின்றான். கண்களை மூடி, ஒரு கணம், அப்பாவை நினைத்துக் கொண்டான். உடம்பு, ஒரு நொடி அதிர்ந்தது.
இந்த மண் மீது, அவருக்கிருந்த பிடிப்பினால் தான், இவனை விவசாயம் படிக்க வைத்தார். கல்வியை வைத்து, காசு பார்க்க விரும்பாமல், கழனியை மேம்படுத்தும் கலையை கற்றுக் கொடுத்தார். 'உலகத்திலேயே மிகச் சிறந்த பொதுநல வியாபாரி, விவசாயி தான்' என்ற பால பாடத்தை, அவனுள் உருவாக்கியவர் அவர் தான். அவர் மட்டும் இன்று இருந்திருந்தால், விவசாய நிலத்தை மேம்படுத்தும் வழியற்று, ப்ளாட் போட கம்பெனிக்காரரிடம் விற்கத் துணிந்த, இந்த மக்களின் முடிவைக் கேட்டு, இன்னொரு முறை செத்திருப்பார்.
''ஐயா, ஒரே ஒரு வாக்கு; ஒரேயொரு உறுதி; எல்லாரும் சேர்ந்து எனக்கு தந்தாப் போதும். இந்த வருஷம் மட்டும், நம்முடைய ஊரை, நான் தன்னிச்சையாய், நிர்வாகம் பண்ற அதிகாரத்தை குடுங்க. நான் எடுக்குற முடிவுகளை, எந்த விவாதமும் இல்லாமல் ஏத்துகிட்டு, ஒரே ஒரு வருஷம், கிராம மக்கள் எல்லாரும், என்னோட ஒத்துழைச்சு செயல் படணும். ஆணோ, பெண்ணோ முனைப்பான பத்து பேர், என் கூட வரணும். தங்களுடைய சொந்தக் காரியங்களை மறந்து, முழுக்க முழுக்க, என் கூட இருந்து களப்பணி செய்யணும்.''
புதுசாய் இருந்தது அவன் கோரிக்கை. நம்பலாமா, வேண்டாமா என்று, அனைவரும் குழப்பத்தோடு அமர்ந்திருந்தனர். நாட்டாமைக்காரரின் மச்சினன் பாண்டித்துரை தான், முதலில் கரம் நீட்டினான்.
''மாமோய்... ஆனந்தன் படிச்ச பய. புத்திக்காரன். நிச்சயம் ஏதாவது புதுசா செய்வான். நாம கொஞ்சம் தாமதிக்கறதால விவசாயம் வாழும்னா, அதை விட சந்தோஷம் என்ன இருக்கு. ஆனந்தா, நான் வர்றேன்டா முதல் ஆளா.''
ஆனந்தன் திக்குமுக்காடிப் போனான். ஒருவனுக்கு அவனை புரிய வைக்க முடிந்ததென்றால், நிச்சயம் மற்றவர்களுக்கும் புரியும். பத்து பேருக்கு புரிய வைத்தால், அவனுடைய காரியம் சுலபமாகும்.
நிறைய ஆலோசனைகள் அங்கே நடந்தேறியது. அவ நம்பிக்கையுடன் தான், நாட்டாமைக்காரர் உட்பட, எல்லா பெரிய தனக்காரர்களும் சேர்ந்து, ஊர் கிணத்து தண்ணீரை கையில் ஊற்றி, ஆனந்தனுக்கு உறுதி தந்து அனுப்பினர்.
''பாண்டியா... நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் அடிப்படையில், இப்போ, நம்ப ஊர் குளங்களை தூர் வாரும் பணி, நடந்திட்டு இருக்கு. நீ என்ன பண்ற... அங்க போய் அவங்க எல்லாரையும், சரியா வேலை செய்ய வை,'' ஆனந்தனின் முதல் கட்டளையே, வித்தியாசமாக இருந்தது. புரியாமல் பார்த்தான் பாண்டியன்.
''என்னய்யா ஆனந்தா இதென்ன வேலை. நான் சொன்னா அவுக எல்லாம் கேட்பாங்களா?''
''கேட்பாங்க. கேட்கறதா அன்னைக்கு தண்ணீல அடிச்சு, சத்தியம் பண்ணி இருக்காங்க.''
''அது சரி ஆனந்தா. இதுக்கும், நீ சொல்றதுக்கும் என்னய்யா தொடர்பு,'' என்றான் புரியாமல்.
''பாண்டியா, நம்ப ஊர்ல மட்டுமில்ல எல்லா இடத்துலயும் இதே பிரச்னை தான். கூலியை வாங்கிட்டு, வேலையை சரி வர செய்யாம நாம ஏமாத்தறது, அரசாங்கத்தை இல்ல. நம்மை நாமே தான் ஏமாத்திக்கறோம்ன்னு அவங்களுக்கு புரிய வைக்கணும்.''
சுரீரென்று நிமிர்ந்து பார்த்தான் பாண்டி.
''ஆமாம்டா மாப்ள... காசு வாங்கிட்டு, வேலை பாக்கலேன்னு நாம பெருமையா பேசிக்குறோம். அங்கே வேலை நடக்காததால, நமக்கு தான்டா நஷ்டம். நீ கவலையை விடுய்யா. நம்ம சனங்களுக்கு, நான் புரிய வைக்குறேன். அது மட்டுமல்ல... பக்கத்துல இருந்து நானே வேலை வாங்குறேன். அது என்னோட பொறுப்பு.''
முதல் அம்பு புறப்பட்டு விட்டது.
அடுத்த நாள், வேறொரு பிராது வந்தது. புகாரைக் கொண்டு வந்தது பேச்சியாத்தா.
''இந்தா புள்ள கோதை... புருஷனும், பொண்டாட் டியும் ஊரை குழப்பிட்டு திரியறீகளா... கொஞ்சம் கூட இது நல்லதுக்கில்லை,'' பேச்சி, நாலைந்து உறவுப் பெண்களுடன், வீட்டு முன் வந்து, கூப்பாடு போட்ட போது, போட்டது போட்டபடி, உள்ளிருந்து ஓடி வந்தாள் கோதை.
''குளக்கரையில் இருக்கிற என்னோட கோழிப் பண்ணைக்கு, ஆனந்தன், இன்னைக்கு காலையில நாலஞ்சு பேரோட வந்து, பண்ணைய காலி செய்ய சொன்னானாம். என்ன புள்ள கூத்து இதெல்லாம்,'' பேச்சியாத்தா கோபமாய் கேட்டாள்.
கோதை அருகில் வந்து, பேச்சியின் கைகளை, அன்புமேவ பற்றிக் கொண்டாள்.
''அக்கா... அது குளக்கரை இல்ல. குளத்தோட ஒரு பகுதி. அதை நாம ஆக்கிரமிச்சு நம்முடைய தேவைக்கு எடுத்துக்கிட்டா, நீர் ஆதாரத்தை எப்படிக்கா சேமிச்சு வைக்கறது,'' தன்மையாய் கேட்டாள். பேச்சியிடம் பதிலில்லை.
''நம்மோட முப்பாட்டன் கிட்டயெல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வை இருந்தது. அதனால்தான், குளத்தை வெட்டியும், மரத்தை நட்டும் இந்த சமூகத்தின் மீது, தங்களுக்கு இருந்த பொறுப்பை காட்டிட்டு போயிருக்காங்க. நமக்கு இப்போது அதுக்கெல்லாம் நேரமில்லாது போனாலும், அந்த ஆதாரங்களை பாதுகாக்கிற கடமை, நம்ம எல்லாருக்கும் இருக்கு இல்லயா...''
தன்னை விட, இருபது வயது சின்னவள். அவளுக்கு இந்த ஊரின் மீதும், சமூகத்தின் மீதும் இருக்கிற பொறுப்பு, தனக்கில்லையே என்ற நினைப்பே, பேச்சியாத்தாவிற்கு, அவமானமாய் இருந்தது.
''அது வந்து கோதை... ஆனந்தன் வந்து, திடீர்ன்னு பண்ணைய காலி செய்யச் சொன்னதும், கோபப்பட்டுட்டேன் புள்ளே. நீயும், ஆனந்தனும் இந்த ஊரை பத்தி, இம்புட்டு சிந்திக்கயிலே, நான் மட்டும் சும்மா இருப்பேனா... நானும் வர்றேன் புள்ளே உங்க கூட வேலை செய்ய. என்னையும் சேர்த்துக்கங்க.''
இரண்டாவது அம்பு, நம்ப முடியாத இடத்தில் இருந்து, தயாரானது.
பேச்சியாத்தவைத் தொடர்ந்து பொன்னி, தங்கராஜ், கார்க்கோடன் என்று நிறைய பேர், களப்பணி ஆற்ற, கை கோர்த்தனர்.
சொந்த விருப்பு, வெறுப்புகள் மறந்து போனது. ஆடம்பர பொருள் ஈட்டும், ஆசைகள் ஒத்திப் போடப்பட்டது. உழைப்பு உழைப்பு என்ற போர்க்கொடி, அறுப்பூரில் பட்டொளி வீசத் துவங்கியது.
முன்னிருப்பவனின் உற்சாகம், பின்னிருப்பவனையும் தொற்றிக் கொள்ளும் என்பது, மிகச் சரியான கூற்று தான். எல்லாரும் உற்சாகமாய், உத்வேகமாய் வேலை செய்தனர். அதிகாரிகள் வியந்து போயினர்; அரசியல்வாதிகள் தலை சொறிந்தனர்.
மூன்று மாதத்திலேயே, ஊருக்குள் நல்ல மாற்றம் தென்பட்டது. நாட்டாமைக்காரர் வியந்தார்.
''ஐயா, எல்லா காரியங்களுக்கும், அரசாங்கத்தை எதிர்பார்க்கிறது தப்பு இல்லையா... எப்பவும் அரசியல்வாதிகளை குறை சொல்லிட்டு, நாம பொறுப்பில்லாம இருக்கிறது முட்டாள்தனம். அரசாங்கத்தை நடத்தறதும் நம்பளை மாதிரி மனிதர்கள் தான். அவங்களால் மட்டும், அற்புதங்களை நிகழ்த்த முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும், அவனளவில், சுயநல கலப்பில்லாமல், வேலை செஞ்சாலே போதும்,'' என்றான் ஆனந்தன்.
சாலைகள் சரியாய் செப்பனிடப்பட்டன. மண் பாதைகள், வரப்புகள் உரிய முறையில் மேம்படுத்தப்பட்டன. களப்பணி செய்யும் கிராமத்தான், பொதுநலத்தோடு, வேலை செய்தான். இதற்குள்ளாகவே, ஆறு மாதம் ஓடி விட்டது.
''ஆனந்தா... என் மவ கல்யாணத்தை, ஆறு மாசம் தள்ளிப் போட்டுருக்கேன். வீட்டை பத்தி சிந்திக்கிறது இல்லை. என் வாழ்க்கையில, ஒரு வருஷத்தை, நம்ம ஊருக்காக தர்றதா உறுதி செஞ்சிருக்கேன். இப்போ லேசா பயமாயிருக்கு,'' களப்பணி செய்யும், ஆறுமுகம் கவலைப்பட்டார்.
ஆனந்தன் ஆதரவாய் அவர் தோளில் கைப் போட்டு, 'அண்ணே... நம்ம எல்லாருடைய தியாகமும் வீணாகாதுண்ணே. ஒரு தகப்பனா செய்ய வேண்டிய கடமையை மறந்துட்டு, ஒரு விவசாயியா பூமியை காப்பத்துற வேலையில இறங்கி இருக்கீங்க. நிச்சயம் ஆண்டவன் நம்பளை கை விட மாட்டாருண்ணே...கண்டிப்பா ஜெயிப்போம்.''
திரியை நசுக்கி, சுடரை சரியாய் சுண்டி விட்டான். நெருப்பு நீர்த்து போகாமல், பற்றிக் கொண்டது.
மழைநீர் சேகரிப்பு குறித்த, இலவச பயிற்சி வகுப்புக்கு, வீட்டிற்கு ஒருவரை அழைத்துப் போனான்.
மண்ணின் கணமும், வளமும் சரியாக கணிக்கப்பட்டு, பயிர் இட்டு காத்திருந்தனர்; மழையும் வந்தது.
உடைப்பெடுத்தது வானம்; உழைப்பை ஆசீர்வாதம் செய்தது. ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர் வாரப்பட்டு நின்ற குளங்களில், நீராதாரம் பத்திரமாய் சேகரம் செய்யப்பட்டது. மழைநீர் கால்வாய்களால், நிலத்தடி நீர்மட்டம், கணிசமாய் உயர்ந்தது.
அடி சரியானால், நுனி சரியாகும் என்பது சரி தான். இருபது ஆண்டுகளுக்கு பின், இப்போது தான் பூமி, இப்படியொரு விளைச்சலை பார்க்கிறது. விளைந்து நின்ற பூமியை பார்த்து, மண்டியிட்டு, தேம்பியழுதார் நாட்டாமை.
''ஆனந்தா, மனசு வேகுதடா. அவனவன், அவனவன் இடத்தில நின்னு ஜெயிக்கணும். விவசாயத்துல ஜெயிச்சா தான், விவசாயி ஜெயிக்கிறதா அர்த்தம். இதை விட்டுட்டு போக நினைச்சது, ஆடம்பரமாக வாழ இல்லை... இயலாமை. மறுபடியும் நம்ம கண்ணு பூக்கிறத, என் கண்ணுள்ள போதே பாக்குறது, எவ்வளவு ஆசையா இருக்கு தெரியுமா...'' என்றவாறு, மண்ணை எடுத்து, முகத்தில் பூசிக் கொண்டார்.
அவனுடைய வேலை, அதோடு முடிந்து போனதாய் அவன் நினைக்கவில்லை. விளைச்சல் மிகச் சரியாய் சந்தைப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், இடைத்தரகர்களின் கைகளில் சிக்கி, விவசாயி அழிந்து போவான். அரசுப் பாதுகாப்பு கிடங்குகள் மற்றும் தனியார் பாதுகாப்பு கிடங்குகளில், விளைச்சல்கள் பாதுகாக்கப்பட்டன. கையளவு தானியமும் வீணாகாமல், மிகச் சரியாய் விற்கப்பட்டது. அழுகும் முன் தக்காளியும், காயும் முன் கரும்பும் காசாக்கப்பட்டது.
குப்பனும், சுப்பனும் தங்களுடைய உழைப்புக்கான சரியான விலையை, அவர்களே நிர்ணயித்தனர்.
''நாங்க கேட்கிற காசுக்கு குடுக்காட்டி, இத்தனை தக்காளியும் வச்சு என்ன செய்வீங்க... உங்க மூணு மாச உழைப்பு, மூணே நாளில் அழுகிப் போயிடும்யா,'' என, பத்து விரல்களிலும் மோதிரம் போட்ட ஏஜென்ட், சவடால் பேசினான்.
''அதெப்படி போகும். எத்தனை ஜாம் கம்பெனி இருக்கு. எங்க விளைப் பொருட்களை மூலப்பொருட்களா கொண்டு, தயாரிக்கப்படற உணவு நிறுவனங்கள் இருக்கு. அவங்களை பத்தின விவரத்தை, கம்ப்யூட்டர்ல தேடுவோம். அவங்களை நேரடியாக பார்த்து, அவனையும் ஏமாத்தி, எங்களையும் ஏமாத்துற உன்னை கழட்டி விட்டுட்டு, நாங்களே பொருளை நேரடியா வித்துடுவோம். இதுல அவனுக்கும் லாபம்; எங்களுக்கும் லாபம்,'' பத்தாவது படிக்கும் பொன்னி, வியாபார சூட்சுமம் பேசிய போது, ஆடிப் போனான் ஏஜென்ட்.
'ஆனந்தா, உன்னை படிக்க வைக்க நினைக்கிறது, நீ போய் பட்டணக்கரையில வேலை பார்க்ககிறதுக்கு இல்லை. இந்த மண்ணை நீ காப்பாத்தணும். நம்மூர்க்கு ஏன் அறுப்பூர்னு பேர் வந்துச்சு தெரியுமா... அந்த நாளையில, வருஷம் முப்போகம் விளையும். எந்நாளும் அறுப்பும், விதைப்புமா இருக்குமாம். அதான் அறுப்பூரானது. மறுபடியும், அதே நிலைமை வரணும். விவசாயம் செத்துப்போக, நாம் விடவே கூடாது...' என, நெக்குருக பேசிய அப்பாவின் வார்த்தைகள், இன்னும் அவன் நினைவில் இருக்கிறது.
அரங்கு நிரம்பி வழிந்தது...
அறுப்பூரின் பாதி சனம், அங்கு தான் இருந்தனர்.
நாட்டின் முன் மாதிரி கிராமம் என்ற பட்டயம் அறுப்பூருக்கும், மண்ணின் மைந்தன் என்ற பட்டம் ஆனந்தனுக்கும் வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற ஆனந்தன், முதன் முறையாக நெகிழ்ந்து போனான்.
''நான் ஜெயிச்சுட்டதா நினைக்கல. விவசாயம் மறுபடியும் ஜெயிச்சிடுச்சு. இதேப் போல, நம் நாட்டுல எல்லா கிராமமும் ஜெயிக்கணும். அதுக்கு, அங்க இருக்குற இளைஞர்கள் சரியா உழைக்க முன் வரணும். நிச்சயமா வரப்பு உயர, நீர் உயரும். என்னை மாதிரி இளைஞர்கள், எழுச்சியோடு கிளம்பும் போது, எங்க ஊர் மக்களை போல நம்பி, பொறுப்பை தரணும். அப்பத்தான் மாற்றம் வரும். நம்ப மண்ணு, நம்பளை ஏமாத்தாது. அடுத்து வர்ற ஐந்தாண்டு திட்டங்களில், மறுபடியும் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கும். கிட்டத்தட்ட நூத்தம்பது கோடி மக்களின் பசியை தீர்க்கிற பொறுப்பும், அற்புதமும், ஒரு பிடி மண்ணுக்குள்ளே தான் ஒளிஞ்சிருக்கு.
''இப்போ கேட்கறேன். உழைக்கணும்கற உத்வேகமும், தன்னம்பிக்கையும் மிகுந்த, சாதிக்க துடிக்கிற நூறு மனிதர்களை, என் கூட அனுப்புங்க. நான், நம்ம நாட்டையே வேளாண்மையில் கோலோச்ச வைக்கிறேன்...'' என்று, மார்புக்கு குறுக்காய், கைகளை கட்டிக் கொண்டு, கூட்டத்தை பார்த்து அவன் கேட்ட போது, கரகோஷம் விண்ணைப் பிளந்தது. நிச்சயம் வருவர்... நூறு பேர் என்ன ஆயிரம் பேர் கூட வருவர்... மாற்றம் வரும்!
***
எஸ். ஷேக் முகம்மது
வயது: 60. இவர் எழுதிய, முதல் சிறுகதை இது. முதல் சிறுகதையே, பரிசு பெற்றது குறித்து, மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும். 'வாரமலர் இதழில், என் கதையை படிக்கும் நொடிதான், என் வாழ்க்கையில், உச்சபட்ச சந்தோஷமான தருணம்...' என்கிறார்.
