PUBLISHED ON : மார் 26, 2017

நாம் உடுத்தும் உடை துவங்கி, பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை, அனைத்தையும் தீர்மானிப்பது, நாம் தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறோம்; ஆனால், ஒரு குறிப்பிட்ட குழுவினர் தான், நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வங்கிகள் என, இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும், அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன.
திடீரென, ஒரு நாடு திவாலாகலாம்; இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம்; ஒரு நாட்டில், அரசியல் புரட்சி ஏற்படலாம்; உலகின் ஒரு பகுதியில் தீவிரவாதம் தலை விரித்து ஆடலாம்.
- இப்படி, உலக வரலாற்றில் நிகழ்ந்த, நிகழும் பெரும்பாலான சம்பவங்களின் பின்னணியில், இவர்கள் இருக்கின்றனர்.
யார் இவர்கள் என்று கேட்கிறீர்களா? இவர்களுக்கு, 'இல்லுமினாட்டி'கள் என்று பெயர்.
இல்லுமினேட்டர் என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து உருவான சொல், 'இல்லுமினாட்டி!' இதற்கு, ஒளி பொருந்தியவர்கள் என்று பொருள்!
உலகத்தின் மூளை இவர்கள் தான். இந்த குழுக்கள் தான், பல நாட்டு அரசுகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
சுய ஆதாயத்துக்காக, முன் பின் தெரியாதவர் களுக்குள் கூட, இவர்கள் ஊடுருவலாம்.
விஷால் - த்ரிஷா நடித்த, சமர் படம் பார்த்திருக்கிறீர்களா? எங்கிருந்தோ ஒரு சிலர், விஷாலை, அவருக்கே தெரியாமல், பகடை காயாக வைத்து, அவர் வாழ்க்கையில் விளையாடுவர்.
குழந்தைகளின் விளையாட்டு புத்தகத்தில், எலியை பிடிக்க, பூனைக்கு வழிகாட்டுங்கள் என்று வளைந்து, நெளிந்து, சிக்கலான பாதையை வரைந்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அதுப்போன்று, நிஜத்தில் ஒரு பகுதியை உருவாக்கி, அதன், உள்ளே நுழையும் ஒருவர் வழி கண்டுபிடித்து, வெளியே வரும் விளையாட்டு வெளிநாடுகளில் பிரபலம். இதற்கு, 'மேஸ் கேம்' என்று பெயர். இதை அடிப்படையாக வைத்து, சில ஆங்கில படங்களும், 'டிவி' சீரியல்களும் வெளிவந்து சக்கைப் போட்டு போடுள்ளன.
இந்த,'மேஸ்' விளையாட்டை போல், இந்த, 'இலுமினாட்டி'கள், உலக அரங்கில் விளையாடி வருகின்றனர்.
இவர்கள், அடுத்து நிகழ்த்தபோகும் சம்பவங்கள், எது மாதிரியானவை என்பதை, சில ஆராய்ச்சியாளர்கள் சூசகமாக அறிவித்துள்ளனர். அவை:
உலகிலேயே, முதன்முதலில் சூரிய உதயத்தை காணும் நாடு ஜப்பான். அப்பெயர், ஜப்பானுக்கு கிடைக்க கூடாது என்பதற்காக, கிழக்கில் உதிக்கும் சூரியனை, மேற்கில் உதிக்க செய்ய முயன்று வருகின்றனர், இந்த, 'இல்லுமினாட்டி' குழுவினர்.
உலகில், தனக்கு பிடிக்காத நாடுகளின், சீதோஷ்ண நிலையை மாற்றி, கோடை காலத்தில் பனி பொழிவு, மழைக்காலத்தில் கடுமையான வெயில், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு போன்றவற்றை உருவாக்கி, அழிவுகளுக்கு வழிவகுக்க முயன்று வருகின்றனர்.
சிங்கம், புலி போன்ற வன விலங்குகளின் இயல்பை மாற்றி, சாதுவான வீட்டு விலங்குகளாக, வளர்ப்பு பிராணிகளை மாற்றுவதும் நடைபெறும். மான், முயல் போன்ற சாதுவான விலங்குகள் கொடியவைகளாக மாறவும் வாய்ப்புள்ளது.
ஆங்கில படங்களில் வருவது போல், வெளி கிரகத்திலுள்ள, 'ஏலியன்' எனப்படும் வித்தியாசமான உயிரினங்கள், பூமிக்கு வரவழைக்கப்படலாம்.
இல்லுமினாட்டிகளுக்கு, ஒத்துழைக்காத நாடு களின் ஆட்சியாளர்கள், செவ்வாய் கிரகத்துக்கு கடத்தப்படலாம்.
தன்னை வெட்ட வரும் மனிதர்களை, அப்படியே பிடித்து, கபளீகரம் செய்யும் வீரியமிக்க மரங்கள் உருவாக்கப்படலாம்.
ஆப்ரிக்க நாட்டு காடுகளில் வசிக்கும், பழங்குடி இனத்தவர்கள், கத்தி, ஈட்டிகளுடன், உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறி, 'ஜிம்மாரே... ஜிம்மாரே...' என்று பாடி, ஆடலாம்.
- இதெல்லாம் நடைபெற எவ்வளவு காலம் ஆகும் என்கிறீர்களா?
எஸ். பல்ஸானி
'இல்லுமினாட்டி'கள் பற்றி பல காலமாக, பலரும் சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், கற்பனையாக, இயற்கைக்கு மாறான சம்பவங்கள் நிகழப் போவதாக சும்மா, 'ரீல்' சுத்தினோம்.
அவ்வளவு தான்!
ஏப்ரல் 1ம் தேதி வருதுங்களே... அதான்!
ஹி...ஹி...
