தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நல்ல மன(ர)ம் வாழ்க!

நல்ல மன(ர)ம் வாழ்க!

நல்ல மன(ர)ம் வாழ்க!


PUBLISHED ON : மார் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் வீசிய, வர்தா புயலில் விழுந்த மரங்களை, மீண்டும் நட்டால் துளிர்க்குமா, துளிர்க்காதா என, 'ஏசி' அறையில் உட்கார்ந்து பேசுவோர் மத்தியில், தனி ஒரு மனிதராக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார், சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த, முல்லைவனம்.

அன்று, விருகம்பாக்கத்தில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில், சில மரங்கள் இலைகள், கிளைகள் வெட்டப்பட்ட நிலையில், தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்க, அதனருகே, ஒரு சட்டியில், மஞ்சள், வேப்பிலைதூள் மற்றும் வேறு பல இயற்கை மருத்துவ தூள்களை கொட்டி, அதில் பாலை விட்டு கலக்கினார் முல்லைவனம்.

கீழே கிடத்தப்பட்டுள்ள மரத்தில், ஏதாவது ஆணி அடிக்கப்பட்டுள்ளதா என்று, கைகளால், தடவிப் பார்த்து, எதுவும் இல்லை என்று உறுதி செய்து, மரத்தின் வெட்டி விடப்பட்ட பகுதியில், அம்மருந்தை பூசி, மஞ்சளில் தோய்த்த புதுத்துணியால் கட்டுகிறார்.

பின், உதவியாளர் துணையுடன், குழிக்குள் மரத்தை இறக்கி, அதைச் சுற்றி, இயற்கை எரு கலந்த மண்ணை போட்டு மூடியவர், 'புயலால் விழுந்த இம்மரங்களுக்கு மருந்து போட்டு நட்டுள்ளேன். 20 நாட்கள் கழித்து வந்து, பாருங்கள். இம்மரம் துளிர்த்து, உங்களை வரவேற்கும்...' என்கிறார்.

சென்னை, விருகம்பாக்கம் பெருமாள் கோவில் தெரு, பிளாட்பாரம் தான், இவரது குடியிருப்பு; சொந்த வீடு கிடையாது. வாடகை கொடுக்கும் அளவிற்கு, வசதி இல்லாததால், ஒதுக்குபுறமான இடத்தில், நாலு கம்புகளை நட்டு, கூரை அமைத்து, அதற்குள் வசித்து வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூரில் வசித்த போது, இவரது தாத்தா சித்திரை, விவசாய வேலைக்கு செல்லும் போது, முல்லைவனத்தையும் கூடவே அழைத்து போவாராம். அப்போது, மரம், செடி, கொடிகள் பற்றி நிறைய சொல்வாராம். அவர் சொன்ன விஷயங்கள், இவரது மனதில் ஆழமாக பதிந்து விட, எட்டாம் வகுப்பிற்கு மேல், படிப்பு வராத நிலையில், தனக்கு பிடித்த தோட்ட வேலைக்கு போக ஆரம்பித்துள்ளார். அத்துடன், யாராவது வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைக்க கூப்பிட்டால், அவ்வேலைகளை செய்து, அதில் வரும் வருமானத்தில், குடும்பம் நடத்தி வருகிறார்.

தனக்கு வரும் சொற்ப வருமானத்தில், மரக்கன்றுகளை, இலவசமாக வாங்கி கொடுப்பதுடன், பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, மரக்கன்றுகளை வழங்கி வருகிறார்.

மரம் நடும் சேவையில் ஈடுபட்டது குறித்து அவர் கூறியது:

விழுந்த மரம் எல்லாமே, இறந்து விடுவதில்லை. சில மரங்கள், ஒரு ஆண்டு ஆனாலும் உயிர்த்துடிப்புடன் இருக்கும். அம்மரங்களை அடையாளம் கண்டு, அவைகளுக்கு மருந்து சாத்தி, இயற்கை எருவுடன், குழியில் நட்டால், பட்டு போனதாக கருதப்படும் மரங்கள், உயிர்த்து விடும்.

என் தாயார் பாப்பாத்தி இந்த பகுதியில், வீடு வீடாக போய், பால் பாக்கெட் போடுகிறவர். எப்படியும், சில பாக்கெட்கள் மீந்து விடும். அப்பாலை, மருந்துக்கு பயன்படுத்துகிறேன்.

அதேபோல, என்னிடம் இலவசமாக மரக்கன்றுகள் வாங்கியவர்கள், அது, துளிர் விட்டு வளர ஆரம்பித்ததும், சந்தோஷத்தில், 'உனக்கு என்ன வேண்டும்...' என்று கேட்பர். நான், மரம் வளர்க்க தேவையான மருந்து பொருள் வாங்கி கொடுக்க சொல்வேன். இப்படிதான், மரத்திற்கு தேவையான மருந்துகள் கிடைக்கிறது.

அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளி மற்றும் பூங்கா போன்ற இடங்களில், புயலில் வீழ்ந்த மரங்களை நடுவதற்கு கூப்பிடுங்கள். நான் வந்து சரி செய்து தருகிறேன். மரங்களை அறுப்பதற்கான ரம்பத்தை, வாடகைக்கு எடுக்க வேண்டியிருக்கிறது; அந்த செலவு தான் சமாளிக்க முடியவில்லை. யாராவது, இது போன்ற பொருட்களை வாங்கி தந்தால் போதும்... அவர்களுக்கு மரங்களின் ஆசிகள் என்றென்றும் உண்டு!

- என்கிறார், மரங்களின் காவலரான முல்லைவனம்.

இவரோடு பேச வேண்டுமா... மொபைல் எண்: 9444004310

எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us