PUBLISHED ON : மே 02, 2021

'கொரோனா'வால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, ஏழை நாடுகளை மட்டுமல்லாமல், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் சீர்குலைத்துள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முனீச் நகரில், கொரியன் சர்க்கஸ் மிகவும் பிரபலம்.
'கொரோனா' பாதிப்புக்கு முன், 'ஹவுஸ்புல்' காட்சிகளாக அரங்கேறியது, கொரியன் சர்க்கஸ். இப்போது, அதன் ஊழியர்கள், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கின்றனர்.
இந்த சர்க்கசில், சிங்கங்கள் மற்றும் புலிகள் கணிசமாக உள்ளன. இவற்றின் கழிவுகளை சேகரித்து, சிறிய டப்பாவில் அடைத்து விற்பனை செய்கின்றனர், சர்க்கஸ் ஊழியர்கள்.
சிங்கம் மற்றும் புலிகளின் கழிவுகளை, பூச்சி, பூனை, நாய் நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்து விட்டால் போதும். அதன் நாற்றத்துக்கு பயந்து, சிங்கம் மற்றும் புலிகள் அங்கு இருப்பதாக கருதி, பூனை உள்ளிட்ட எந்த விலங்கும் வருவது இல்லை.
அதேபோல், பூச்சிகளின் தொல்லையும் இருக்காதாம். இதனால், பொதுமக்கள் அதிக அளவில் இந்த டப்பாக்களை வாங்கிச் செல்கின்றனர். ஒரு டப்பாவின் விலை, 500 ரூபாய்.
'சிங்கத்தின் கழிவுகளை விற்று, உயிர் பிழைக்க வேண்டிய அவல நிலை, எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் எதிரிகளுக்குக் கூட இந்த நிலை ஏற்படக் கூடாது...' என, கண்ணீர் வடிக்கின்றனர், சர்க்கஸ் ஊழியர்கள்.
ஜோல்னாபையன்
