தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சின்னப் பறவை அன்னையைத் தேடி!

சின்னப் பறவை அன்னையைத் தேடி!

சின்னப் பறவை அன்னையைத் தேடி!


PUBLISHED ON : ஜூன் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''யாரு நீங்க?'' என, ஸ்ரீரஞ்சனி கேட்டதை நம்ப முடியாமல் திகைத்து நின்றேன்.

''போன் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம், யாரு நீங்க. யாரு வேணும்...'' என, மீண்டும், குயில் குரலில் கேட்டாள், ஸ்ரீரஞ்சனி.

உலகமே இருண்டு விட்டதுபோல தோன்றியது. எத்தனை நாட்கள் இரவு பகலாக பேசி இருப்போம். என் போன் எண்ணை அழித்து இருக்கலாம். என் நினைவுகளையுமா அழித்து விட்டாள்.

ஒரே மாதத்தில் ஒருவரை இப்படி முழுக்க மறந்து விடுவது சாத்தியமா? பேசவே கசப்பாக இருந்தது. ஆனால், அழைத்து விட்டு பேசாமல், 'கட்' செய்வது நாகரிகம் இல்லை.

''மன்னிக்கணும் மேடம். வேறு யாருக்கோ பண்ண வேண்டியது. தவறுதலா உங்க நம்பர் போட்டுட்டேன். சாரி...'' என, இணைப்பை துண்டித்து, தரையில் துவண்டு படுத்தேன்.

நல்ல பாடல்கள் காதில் விழுந்தால், அங்கேயே சில நிமிடங்கள் நின்று, அப்பாடலை கேட்டு ரசிப்பது என் பழக்கம்.

அன்று, ஒரு டீக்கடை வானொலியில், 'ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது... அதன் சிந்தனை எல்லாம், தாய் அவள் அன்பு தேனில் குளிக்கிறது...' என, பாடல் ஒலிபரப்பாகி, என் காதுகளில் தேனென பாய்ந்தது.

பைக்கை நிறுத்தி, பாடலை ரசிக்கலானேன்.

பாடல் முடிந்து சுய நினைவுக்கு வந்ததும், திடுக்கிட்டேன்.

என் பைக் முன், ஸ்கூட்டி ஒன்று செல்ல முடியாமல், நான் கிளம்புவதற்காக காத்து நின்றது. குறுகலான பாதை என்பதை மறந்து, பைக்கை நிறுத்தியது என் தவறு.

'சாரி மேடம்...' மன்னிப்பு கேட்டேன்.

மெல்ல புன்னகைத்து, 'இசை ரசனை நல்லது தான். ஆனா, அது பொதுநலனுக்கு இடையூறா இருக்கக் கூடாதில்லையா?' உறுத்தாமல் கண்டித்த அவள் பண்பு, எனக்குப் பிடித்திருந்தது.

'பொது இடங்களில் சத்தமாக பாட்டு வைத்து கேட்பது போன்ற அநாகரிகங்களுக்கு நானும் எதிரானவன் தான். என் ரசனை பிறருக்கு இடைஞ்சல் இல்லாம, நான் கவனமாத் தான் இருப்பேன். இன்னிக்கு ஏதோ தப்பு நடந்துருச்சு. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கிறேன்...' என்றேன்.

'எனக்கும் இந்த பாடல் பிடிக்கும். நானும் இதை கேட்டுட்டு தான் இருந்தேன். அதனால், மன்னிப்பெல்லாம் வேண்டாம். ஆனால், இனி கவனமா இருங்க. என் இடத்தில் வேற யாராச்சும் இருந்திருந்தா, அவங்க மன நிலையும் கெட்டு, உங்க மனசையும், 'ஹர்ட்' செஞ்சு இருப்பாங்க...' என, கனிவுடன் கூறினாள்.

'அட, உங்களுக்கும் இசை பிடிக்குமா?' என்றேன்.

'வாங்க, கொஞ்சம் தள்ளிப்போய் பேசலாம்...' என்றாள்.

முன்பின் தெரியாமல் இருந்தாலும், சிலரிடம் ஏதோ ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு, நீண்ட நாள் நண்பர்கள் போல பேச ஆரம்பித்து விடுவோம். ஆனால், அது அபூர்வமாகத்தான் நடக்கும். அப்படி ஒரு அபூர்வம் அன்று நிகழ்ந்தது.

பிடித்த சினிமா பாடல்களில் இருக்கும் கர்நாடக இசை ராகங்கள், ரசனையும், தமிழறிவும் கொண்ட வானொலி அறிவிப்பாளர்கள் என, முதல் சந்திப்பிலேயே பேச, எங்களுக்குள் பல விஷயங்கள் இருந்தன.

அமைதியான அந்த காபி ஷாப்பின் அமைப்பு, எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி அங்கு சந்தித்து மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்போம்.

ஒருமுறை, 'எல்லா, 'டாபிக்'லயும் உங்களுக்கு நல்ல, 'நாலெட்ஜ்' இருக்கு. நீங்க ஏன் சரியானபடி அதை வெளிப்படுத்துவது இல்லை. நிறைய எழுதுங்க, மேடைகளில் பேசுங்க...' என்றாள்.

'மேடை பேச்செல்லாம் எனக்கு சரிப்படாதுப்பா...' என்றேன் சலிப்புடன்.

மற்றொரு சமயம், 'என் முன்னாடி பேசுங்க, உங்களுக்கு சரிப்படுமா இல்லையான்னு நான் சொல்றேன்...' என்றாள்.

'ஏன் இந்த விஷப்பரீட்சை. சரி, நீ கேட்டு மறுக்க விரும்பல. உனக்காக பேசுறேன். ஆனா, இதுதான், முதலும், கடைசியும் சரியா?' என்றேன்.

'ஓ.கே., சம்மதிக்கிறேன்...' என, சிரித்தாள்.

மேடைப் பேச்சை வெகு கவனமாக தயாரித்தேன். எங்கள் பழக்கம், இன்னும் அவள் பெற்றோருக்கு தெரியாது. எனவே, அடிக்கடி அவளை அழைத்துப் பேச முடியாது. எங்கள் தகவல் தொடர்பு பெரும்பாலும் குறுஞ்செய்தி மூலமே நடந்து வந்தது.

ஒரு நாளைக்கு, 200 குறுஞ்செய்திகள் என, ஒரு மாதத்துக்கு, 6,000 இருக்கும்.

அதை அவளிடம் காட்டி, 'ஒரு நாளில், துாங்குவது, சாப்பிடுவது போன்றவற்றுக்கு, 10 மணி நேரத்தை கழித்து விட்டால், மிச்சம், 14 மணி நேரங்கள். அதாவது, 840 நிமிடங்களில், 200 குறுஞ்செய்திகள். நான்கு நிமிடங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி உன் நினைவின்றி ஒரு நொடியும் கடப்பதில்லை என, தொலைபேசி நிறுவனமே சொல்கிறது பார்...' என்றேன்.

'அப்படீன்னா துாங்கும்போது என் நினைவு வராதா... கனவுகளில் வருவது யாரோ?' என, கேலி செய்தாள்.

மேடைப் பேச்சு முழுக்க, அவளுக்கு குறுஞ்செய்தியாக, நான் அனுப்பியது பெரிய விஷயம் இல்லை. தேவையான மாற்றங்கள் செய்து, அவளும் குறுஞ்செய்தியாகவே முழு உரையையும் அனுப்பியதில், 'இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்' மனம் உருகியது; அசந்து போனேன்.

'பேசும்போது நாக்கை நல்லா மடிச்சு பேசுங்க. கடகடன்னு ஓடாம பொறுமையா பேசுங்க...' என்று சொன்னது மட்டுமின்றி, முதல் பேச்சுக்கு என, பிரத்யேக ஆடை ஒன்றை பரிசளித்தாள்.

அந்த பேச்சு பிரமாதமாக அமைந்ததால், ஊடகத்துறையில் எனக்கு ஒரு அடையாளத்தையும் அளித்தது.

'நேற்று, அந்த சினிமா டைரக்டர் பேசினார்டா. ரொம்ப சந்தோஷம். எல்லாப் புகழும் உனக்குத்தான்...' என்றேன். நெகிழ்ச்சியுடன்.

'இதுக்கே சந்தோஷப்பட்டா எப்படி... நீங்க சாதிக்க வேண்டியது ஏராளம் இருக்கு...' என்றாள்.

'என்னருகில் நீ இருந்தால், இயலாதது என எதுவும் இல்லைடா. நீ எப்பவும் என் கூடவே இருக்கணும்...' என்றேன்

'கண்டிப்பா... வீட்ல கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சுட்டாங்க. உங்களைப் பற்றி சீக்கிரம் சொல்ல போறேன்...' என்றாள்.

ஆனால், நினைப்பதெல்லாம் நடக்கின்றவா? இரண்டு நாள் பேசவும் இல்லை; குறுஞ்செய்திகளுக்கு பதிலும் இல்லை.

மூன்றாம் நாள், 'வீட்ல சொன்னேன், சத்தம் போட்டாங்க. பொறுமையா உங்களப் பற்றி, உங்க குடும்பத்தை பற்றியும் சொன்னேன். அதுல அவங்களுக்கு திருப்தி. ஆனா, உங்க வேலை அவங்களுக்கு பிடிக்கல.

'பணக்கார மாப்பிள்ளையா பார்க்கிறாங்க. 'பணம் ஒண்ணும் முக்கியம் இல்லை'ன்னு அவங்களோட சண்டை போட்டேன். கொஞ்ச நாள் காத்திருங்க. எப்படியும் சம்மதம் வாங்கிடுவேன்...' என, தழுதழுத்த குரலில் அவள் பேசும் போதே, எனக்கு பாதி நம்பிக்கை போய் விட்டது.

அதன்பின் சில நாட்கள், எந்த தகவலும் இல்லை.

ஒருநாள் போனில் அழைத்து, கண்ணீருடன், 'வேற வழி இல்லைப்பா. நாம பிரிஞ்சுடலாம். இனி எனக்கு போன் செய்யாதீங்க...' என்றாள்.

என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. அதை விட அதிர்ச்சி, இரண்டு நாளில் எனக்கு காத்திருந்தது.

'என் உயிர் நீதானே...' என்ற வரிகளுடன் யாரோ ஒரு இளைஞன் புகைப்படத்தை முக நுாலில் பதிவிட்டிருந்தாள். வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை போல. சில நாட்களுக்குள்ளாகவே எப்படி அவளால் முழுமையாக மாற முடிந்தது? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு மாதம் அறைக்கே செல்லாமல், அலுவலகம், நண்பர்கள் வீடு, சினிமா என, ஆறுதல் தேடினேன்.

ஒருநாள் அறையை திறந்தபோது, மேஜையிலிருந்த கவிதை நுால் கண்ணில் பட்டது. படித்து விட்டு தருவதாக சொல்லி, அவளிடம் வாங்கிய வெளிநாட்டு நுால். கொடுத்து விடலாம், எப்படி அனுப்புவது.

அவளிடமே கடைசியாக பேசலாம் என நினைத்து, போன் செய்தேன்.

'ஹலோ யார் வேணும்?' அவள் குரல்.

என் எண்ணை அழித்து விட்டாள் போல.

'ஹலோ...' என்றேன்.

'சொல்லுங்க, யார் நீங்க?' என்றாள்.

ஒரே மாதத்தில் என்னை அடியோடு மறந்து விட்டாளா? வாழ்க்கை மீதும், மனிதர்கள் மீதும், அன்பு என்ற வார்த்தை மீதும் எனக்கு கடும் கசப்பு எழுந்தது.

'சாரி மேடம், மிஸ்க்ளிக் ஆய்டுச்சு...' என சொல்லி, இணைப்பை துண்டித்தேன்.

எதன் மீதும் பிடிப்பில்லாமல் போனது. நண்பர்கள் யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. மனித உறவுகள் மீதிருந்த நம்பிக்கை போய் விட்டது. வேலையை விட்டு, சொந்த ஊருக்கு போக முடிவெடுத்தேன்.

யாருக்கும் அடையாளம் தெரிய வேண்டாம் என, தொப்பி, முகக்கவசம், கருப்புக்கண்ணாடி அணிந்து தெருவில் தனிமையில் நடந்து கொண்டிருந்தேன். உயிருக்கு உயிராக பழகியவளே, 'யார் நீ?' என்று கேட்ட பிறகு, இனி யாரும் எனக்கு தேவை இல்லை

''தம்பி, நல்லா இருக்கியாப்பா?'' குரல் கேட்டு, திரும்பினேன்.

எங்கள் பள்ளி அருகே மிட்டாய்க்கடை வைத்திருந்த பாட்டி. பள்ளிப் பருவத்திலேயே அவர் பாட்டி தான். இப்போது இன்னும் வயதாகி இருந்தார். வயதான காலத்தில் எப்படி என்னை அடையாளம் கண்டுபிடித்தார்?

''நல்லா இருக்கியாப்பா. அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி எல்லாம் நல்லா இருக்காங்களா?'' என்றார், பாட்டி.

''இத்தனை வருஷங்கள் கழிச்சும் எப்படி என்னை எல்லாம் நினைவு வச்சிருக்கீங்க,''ஆச்சரியமாய் கேட்டேன்.

''எனக்கு ஏதுப்பா குடும்பம். நான் பார்த்து பழகிய ஸ்கூல் பசங்க தான், என் பிள்ளைங்க. உங்களை எல்லாம் எப்படி மறப்பேன்,'' என்றார், பாட்டி.

ஒரு மாதத்தில் என்னை மறந்த, ஸ்ரீரஞ்சனியையும், எப்போதோ பார்த்த சிறுவனை நினைவு வைத்திருக்கும், பாட்டியையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

சற்று இயல்பாக, ''இவ்வளவு பாசம் வச்சு இருக்கீங்களே... பசங்க பிரிஞ்சு போகும்போது வருத்தமா இல்லையா பாட்டி?'' என்றேன்.

''உனக்கு நினைவு இருக்கா. ஸ்கூல் கிணத்துல, குருவிகள், கூடு கட்டப் போய் உள்ளே விழுந்திடும். நாம காப்பாத்துவோம். அழகா குட்டியா இருக்கும் அதன் மூக்கு, கண் எல்லாத்தையும் ரசிப்போம்.

''கொஞ்சம் சக்தி வந்ததும், தன் அன்னை பறவையிடம் போயிடும். அது, தனக்கு வசதியான இடத்துக்கு போறது நல்லது தானே. கொஞ்ச நேரம் நம்மகிட்ட இருந்துச்சு; அதை பக்கத்தில் பார்த்து ரசிச்சோம்; அந்த சந்தோஷம் போதும்.

''அதே மாதிரிதான், பசங்க படிச்சு பெரிய ஆளாகி, பிரிஞ்சு போறது தான் நல்லது. அவங்க என்னுடன் செலவிட்ட சந்தோஷமான நினைவுகள் எனக்கு போதும். என் கணவன் இறந்ததோ, மகன்கள், மகள்கள் பிரிஞ்சு போனதோ, எனக்கு வருத்தம் இல்லை. அவங்க என் கூட இருந்த சந்தோஷமான கணங்களுக்கு நன்றியோட இருப்பது தான் என் கடமை,'' என்றார், பாட்டி.

அவர் சென்ற பின், அந்த சொற்கள் என் மனதில் ரீங்காரமிட்டன.

'ஸ்ரீ பிரிந்து விட்டாள் என, வருந்துவதை விட, என் வாழ்வில் அவள் இருந்த குறுகிய காலத்துக்கு, அவளுக்கு நன்றி சொல்வது தானே முறை. அவள் எனக்கு அளித்த நல்ல விஷயங்களை மெருகேற்றி வாழ்வில் உயர்வது தானே அவள் காட்டிய அன்புக்கு நான் காட்டும் மரியாதை...' என, மனம் தெளிவடைந்தது.

போனில், ஸ்ரீ-தான் அழைத்தாள்.

''அடுத்த வாரம் கல்யாணம்பா. மாப்பிள்ளை நல்லவர். அன்பான குடும்பம். ஆனா, உங்களுக்கு துரோகம் செய்றோமோன்னு ஒரு சந்தேகம். உங்களுக்கு, ஓ.கே.,ன்னா சொல்லுங்க, யாருக்கும் தெரியாம ஓடி வந்து, நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்...'' என்றாள்.

''எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. உன்னை விட அழகான, வசதியான பெண்ணை, எனக்கு, என் வீட்ல பார்த்துட்டாங்க. என்னை இனி தொந்தரவு செய்யாதே...'' என, முதல் சந்திப்புக்கு வழி வகுத்த பாடலை, மொபைல்போனில் ஒலிக்கச் செய்து, தனிமையில் நடக்கலானேன்.

ஜனமேஜயன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us