PUBLISHED ON : ஏப் 12, 2015

மகனையும், மகளையும் கராத்தே வகுப்பில் விட்டு, வீடு திரும்பிய வசந்தி, 'இன்னும், ரெண்டு மணி நேரம் கழிச்சு, டான்ஸ் கிளாசுக்கு அழைச்சுட்டு போகணும்.
'பிள்ளைங்களுக்கு கோடை விடுமுறை விட்டதிலிருந்து காலையில கராத்தே, டான்ஸ், சாயந்தரம் கம்ப்யூட்டர் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ்ன்னு பொழுதுக்கும் நேரம் சரியா இருக்கு.
'இந்த மாதிரி பல விஷயங்கள தெரிஞ்சிருந்தாத் தானே, நாளைக்கு அவங்களோட எதிர்காலம் நல்லா இருக்கும். அதுக்காக தானே, இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு...' என்று நினைத்தவாறு வீட்டிற்கு வந்தாள்.
பக்கத்து வீட்டு வாசலில் கார் நின்றிருந்தது. 'ஊருக்கு போன சரளா வந்துட்டா போல...வேலைய முடிச்சுட்டு அப்புறம் போய் பாக்கணும்...' என, எண்ணியவளாக கதவை திறந்தாள் வசந்தி.
தொலைபேசி ஒலித்தது. பெங்களூரிலிருந்து தங்கை சாந்தி பேசினாள்...
''அக்கா... நான் சாந்தி பேசறேன்...''
''சொல்லு சாந்தி எப்படியிருக்கே... பசங்களெல்லாம் நல்லா இருக்காங்களா...''
''எல்லாரும் நல்லா இருக்காங்க; பிள்ளைகளுக்கு லீவு விட்டிருக்குமே... 10 நாட்கள் பெங்களூரு வந்து இருந்துட்டு போகலாம்ல...'' என்றாள்.
''எங்கே சாந்தி வர்றது... சம்மர்கிளாசில சேர்த்துட்டு, பொழுதுக்கும் அலைஞ்சுட்டு, இருக்கேன்; நேரமே இல்ல. இப்பக்கூட பாரு, சமைச்சுட்டு பிள்ளைகள போய் அழைச்சுட்டு வரணும்.''
தங்கையிடம் அலுத்துக் கொண்டாள் வசந்தி.
''சரளா... ஊருக்குப் போய்ட்டு வந்தாச்சா...'' என்று கேட்டபடி, சரளாவின் வீட்டிற்குள் நுழைந்தாள் வசந்தி.
''வா... வசந்தி, சேலத்துல அவரோட அண்ணன் வீட்டில ரெண்டு நாள் இருந்துட்டு வந்தோம். அதுக்கு மேலே அவருக்கு லீவு இல்ல; அதான் புறப்பட்டு வந்துட்டேன்,'' என்றாள்.
''எங்கே பசங்களைக் காணோம்... ஊருக்குப் போய்ட்டு வந்த அலுப்புல படுத்து தூங்கறாங்களா... வீடே அமைதியா இருக்கு,'' என்று கேட்டாள் வசந்தி.
''அவங்க வரல; ஊரிலே அவங்க பெரியப்பா வீட்டில இருக்காங்க. லீவு முடிஞ்சு தான் வருவாங்க,'' என்றாள் சரளா.
வாசலில் கூரியர்காரர் அழைக்க, ''அப்ப நான் வரேன் சரளா. பசங்க கராத்தே கிளாஸ் போயிருக்காங்க; அழைச்சிட்டு வரணும்,'' என்று கூறி, விடைபெற்றாள் வசந்தி.
மாலையில், ஊரிலிருந்து கொண்டு வந்த, டிரை குலாப்ஜாமூன் டப்பாவுடன், வசந்தியின் வீட்டுக்கு வந்த சரளா, ''இந்தா வசந்தி... ஊரிலிருந்து டிரை குலாப்ஜாமூன் வாங்கிட்டு வந்தேன்... எங்க ஊர் ஸ்பெஷல்; பசங்களுக்கு கொடு... சாப்பிடட்டும்,'' என்றாள்.
''எங்கே அவங்களுக்கு சாப்பிட நேரமிருக்கு... கம்ப்யூட்டர் கிளாசுக்கு கிளம்பிட்டிருக்காங்க. ராத்திரி சாப்பிடும் போது கொடுக்கிறேன்,'' என்று வாங்கிக் கொண்டாள் வசந்தி.
''உன் பிள்ளைகளோடு சேர்ந்து நீயும் அலையறே... உன்னை பாத்தால் பாவமா இருக்கு,'' என்றாள் சரளா.
''என்ன செய்யறது... போட்டி யுகத்துல வாழ்ந்திட்டிருக்கோம். அதுக்கு ஏத்த மாதிரி பிள்ளைகள தயார் செய்ய வேண்டியிருக்கு. ஆனா, உன்னை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. லீவு நாள்ல எந்த கிளாசிலும் பிள்ளைகள சேர்க்காம, ஊரில விட்டு வந்துட்டியே...'' என்றாள்.
''என் பிள்ளைக இதையெல்லாம் கத்துக்கிறத விட, அன்பு, பாசம், சகோதரத்துவம், விட்டுக் கொடுக்குறது, உறவுகளோடு உள்ளன்போடு உறவாடுறதுங்கிற கலைகளை எல்லாம் கத்துக்கட்டும்ன்னு தான் விட்டுட்டு வந்திருக்கேன்,'' என்றாள்.
''என்ன சொல்ற சரளா... எனக்கு புரியலையே...'' என்றாள் வசந்தி.
''அந்தக் காலம் மாதிரி வீடு நிறைய பிள்ளைங்க கிடையாது. வீட்டுக்கு ஒண்ணோ, ரெண்டே பிள்ளைங்க தான் வச்சுருக்கோம். இதுல, அண்ணன் பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்கன்னு சேர்ந்து பழகுறதுக்கும் நாம சந்தர்ப்பம் கொடுக்கறதில்ல. எப்பவாவது கல்யாணம், காட்சின்னு முக்கியமான விசேஷங்கள்ல, ரெண்டு மணி நேரம் சந்திக்கிறோம். அதனால, பிள்ளைங்களுக்குள்ள உணர்வுபூர்வமா எந்தவித ஒட்டுதலும் ஏற்படறதில்ல. மற்ற குழந்தைகளோடு பழக விடாம வளக்கிறதாலே, சுயநலம், பிடிவாதம், தனக்கு வேண்டியதை உடனே செய்யணுங்கிற வேகம் தான் இப்ப இருக்கிற பிள்ளைங்ககிட்டே அதிகமாக இருக்கு.
''அந்தக் காலத்தில நாலைஞ்சு பேரோடு பிறந்து, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி வாழ்ந்தோம். அதைப் போல, நாளைக்கு நம்ப பிள்ளைகளும் வளரணுங்கிறதுக்காக தான் இந்த ஏற்பாடு.
''லீவு நாட்கள்ல பிள்ளைங்க எல்லாம் ஒரே இடத்தில் இருக்கணும்ன்னு, அவரோட அண்ணன், தம்பிக மூன்று பேரும் சேர்ந்து முடிவு செய்துருக்காங்க. இதனால, பிள்ளைங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பழகி, விளையாடி தங்களுக்குள் பல விஷயங்களை பகிர்ந்து, தாங்களெல்லாம் சகோதர, சகோதரிங்கறத உணர்வுபூர்வமாக புரிஞ்சுக்கிறாங்க.
''வளரும் போதே ஏற்படுகிற இந்த அன்னியோன்யம், கடைசி வரை அவங்கிட்டே இருக்கும். நாளைக்கு பெரியவங்களானதும், ஒரு சிறு வட்டத்துக்குள்ள இருக்காம, தங்கள் உறவுகள விரிவுப்படுத்தி, ஒருத்தருக்கொருத்தர் பக்கபலமா துணையா வாழ்வாங்க. அதனால, முதல்ல பிள்ளைங்க, வாழும் கலைய கத்துக்கட்டும்; அப்புறம் படிப்பு, மற்றதெல்லாம் தெரிஞ்சுக்கட்டும்.
''ஆளுக்கொரு இடத்துல வாழ வேண்டிய கட்டாயத்தில, குழந்தைகளுக்குள் அன்பைப் பலப்படுத்தணும்; உறவுகளைப் புரிஞ்சுக்கணும்ன்னு நாங்க செய்த ஏற்பாடு தான் இது,'' என்றாள் சரளா.
இரவு —
தொலைபேசியில், தன் தங்கையிடம், ''சாந்தி... நாளைக்கு பிள்ளைகளைக் கூட்டிட்டு பெங்களூரு வரேன்; 10 நாட்கள் குழந்தைகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து இருக்கட்டும். ஆண்டுக்கணக்கா ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாக்காம வளருதுங்க. அவங்களுக்குள்ள அண்ணன், தங்கைங்கிற ஒற்றுமையும், புரிதலும் ஏற்படணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள் வசந்தி.
''ஆமாம்க்கா. அந்தக் காலத்தில நாம எல்லாம் அண்ணன், தம்பிகளோடு சேர்ந்து சந்தோஷமாக இருந்த மாதிரி, நம்ப பிள்ளைகளும் ஒற்றுமையா சேர்ந்து வாழட்டும்க்கா,'' என்றாள் சாந்தி.
பரிமளா ராஜேந்திரன்
