PUBLISHED ON : ஏப் 12, 2015

'நீர் வாழ்வன' நூலிலிருந்து: மனிதனைப் போலவே நுண்ணறிவு கொண்டவை இரண்டு. ஒன்று, சிம்பன்சி; மற்றொன்று, டால்பின். இரண்டுமே குட்டி ஈனும் பாலூட்டி இனம். டால்பின் உடலின் முன் பக்கத்தில், துடுப்புகள் போல் இருப்பது, அதன் முன்னங்கால்களே! பின் கால்களும், இடுப்பெலும்பும் அதற்கு கிடையாது. வால் முனையில், துடுப்பு போல் இரண்டாகப் பிரிந்திருக்கும். இதன், ஆயுட்காலம், 25 ஆண்டுகள்.
ஏதேனும் ஒரு டால்பின் நோய் வாய்ப்பட்டாலோ, காயம் பட்டாலோ, மற்ற டால்பின்கள், அது மூழ்காமல் இருக்க, தாங்கிப் பிடிக்கும். பெண் டால்பின் குட்டி போடும் போது, மற்ற பெண் டால்பின்கள், அதைச் சுற்றி பாதுகாக்கும்; பிறந்த குட்டி, முதல் சுவாசம் செய்ய, நீர்ப்பரப்பிற்கு மேல் கொண்டு செல்லும். டால்பினின் உணவு, சின்னச் சின்ன மீன்கள். கூட்டமாகச் சென்று, இரையைக் கண்டதும், அதைத் தப்ப விடாமல் சுற்றி வளைத்து, பின், ஒவ்வொன்றாக இரையை பிடித்து தின்னும்.
இவை, விசில் ஒலி, 'கிரீச்' மற்றும் 'கிளிக்' ஒலி - என பலவிதமான ஒலிகள் மூலம் ஒன்றோடொன்று பேசிக் கொள்கின்றன.
'எம்.கே.தியாகராஜ பாகவதர்' நூலிலிருந்து: ஒருமுறை திருச்சி வானொலி நிலையத்தில், தியாகராஜ பாகவதரின் கச்சேரி, நேரடி ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அறிவிப்பும் முன்னதாக வெளியாகி விட்டது. திருச்சியில் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து, 'ரெக்கார்டிங்'கிற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பி விட்டார் பாகவதர்.
ஆனால், அவர் கார் வரும் போது, ரயில்வே, 'கேட்' மூடப்பட்டிருந்தது. ரயில் வருவதற்கு, நேரம் இருந்தது. ரயில் கடந்த பின், கேட் திறந்து, அதன் பின் வானொலி நிலையம் சென்றால், அறிவித்தபடி குறிப்பிட்ட நேரத்தில் ஒலிபரப்பு செய்ய முடியாது.
காரை விட்டு இறங்கி நடந்து, தண்டவாளத்தைக் கடந்து, 'கேட்'டுக்கு மறுபுறம் வந்தார் பாகவதர்.
அங்கு, ஒருவர் சைக்கிளுடன் நின்றிருப்பதைப் பார்த்தார். அவருக்கு, பாகவதரை நேரில் பார்த்ததில் பரசவம். பாகவதர் அவரிடம், வானொலி நிலையம் வரை செல்ல, அவரது சைக்கிளைக் கேட்டார். அவர் பூரிப்போடு சைக்கிளைக் கொடுக்க, 'நான் முதல்ல வேகமா சைக்கிள்ல வானொலி நிலையத்திற்கு போறேன்; நீ அங்க வந்து, சைக்கிளை எடுத்துக்க...' என்றார்.
பாகவதர் சைக்கிளில் ஏறி, தானே ஓட்டி, சரியான நேரத்திற்கு, வானொலி நிலையம் சென்றடைந்தார். அன்று, அவரது கச்சேரியும் பிரமாதமாக ஒலிபரப்பு ஆயிற்று!
'சிலேடை விருந்து' நூலிலிருந்து: அகத்தியர், தன் கமண்டலத்தில் சமுத்திரத்தை அடக்கினார்; அது, அவரது தவ வலிமை.
காளமேகப் புலவர், குடத்திலே கங்கையை அடக்கிக் காட்டுகிறார். இது, அவரது தமிழ் வலிமை.
'குடத்திலே கங்கை அடங்கும்...' என்ற ஈற்றடி கொடுத்து, வெண்பா தருமாறு காளமேகத்திடம் கேட்டனர் மற்ற புலவர்கள்.
குடத்திலே, கங்கையை எப்படி அடக்குவது? காளமேகம், மறுநொடியே தம் தமிழ் மந்திரத்தால் அடக்கிக் காட்டினார்.
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த ஈசன், சடாம
குடத்திலே கங்கை யடங்கும்.
பொருள்: விண், மண் மற்றும் மலை என்று எதற்கும் அடங்காத கங்கை, இறைவனின் சடாமுடியில் (சிவபெருமான் தலையில்) அடங்கியிருக்கிறது!
நடுத்தெரு நாராயணன்
