தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாழ்க தலைவனே!

வாழ்க தலைவனே!

வாழ்க தலைவனே!


PUBLISHED ON : டிச 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச., 21 - அனுமன் ஜெயந்தி

சராசரி மனிதர்கள் கடவுளிடம் அருளையும், ஆசியையும் வேண்டி நிற்பர். ஆனால், ஆண்டவன் மேல் அன்பு கொண்டு சதா அவன் நினைப்பில் உருகித் தவிக்கும் ஆன்மிக பெரியோர், அவனிடம் எதையும் யாசிக்காமல், பக்தி பெருக்கில் வாழ்த்துவர்.

அழியும் உடலை சுமந்து கொண்டிருக்கும் நாம், நிலைத்த தன்மை கொண்ட பரம்பொருளை எப்படி வாழ்த்துவது என்ற எண்ணம் ஏற்படலாம். கடவுளை நாம் எந்த வடிவில், எந்த நிலையில் காண்கிறோமோ அந்த நிலையிலேயே அவன் நம்மை ஆட்கொள்வான்.

அவ்வகையில், கடவுளின் மேல் கொண்ட அன்பின் மிகுதியால், நம் ஆன்மிக பெரியோர் பலர், அவனை, தந்தையாக, குழந்தையாக, காதலனாக பாராட்டி, புகழ்ந்து, வாழ்த்தி பாடியுள்ளனர்.

ஒருமுறை, மதுரை - கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு பெரியாழ்வார் சென்றார். அவருக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தந்தார். அவரால், அங்கு கூடியிருந்த மக்களும் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர்.

உடனே, பெரியாழ்வார், 'எல்லாரும் பெருமாளின் திவ்ய ரூபத்தை பார்க்கின்றனரே... இவர்களின் பார்வையால், அவருக்கு திருஷ்டி ஏற்பட்டு விடுமே...' என்று பயந்து, 'இறைவா... நீ, பல்லாண்டு வாழ வேண்டும்...' என்ற அர்த்தத்தில், 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா...' என்று வாழ்த்தி, பாடினார்.

இதே போன்று, ராமபிரான் மீது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத பக்தி கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். பொதுவாக, மனிதர்கள், கடவுளை வணங்கும் போது, 'நீ, எனக்கு இதைக் கொடு; நான், உனக்கு அதைச் செய்கிறேன்...' என்ற அளவில் தான், அவர்களுடைய பக்தி இருக்கும்; இதை, தவறு என்று சொல்ல முடியாது. இது, எதிர்பார்ப்புள்ள பக்தி.

ஆனால், அஞ்சனை மைந்தனான ஆஞ்சநேயர், முன்பின் தெரியாத ராமனை சந்தித்தார். அவரது மனைவி காணாமல் போனதை அறிந்து, அவருக்காக கடல் தாண்டிச் சென்று கண்டுபிடித்து வந்ததுடன், போரிலும் உதவினார். இவ்வளவும் செய்தவர் அவரிடம் எதையுமே கேட்கவில்லை.

உலகிலேயே ஆஞ்சநேயர் ஒருவரிடம் தான் நேர்த்திக்கடன் எதுவுமே இல்லாமல், நம் கோரிக்கைகளை வைக்கலாம். ஏனெனில், அவர், தன் பக்தனிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டார். வெற்றிலை மாலை, வெண்ணெய், வடை என்பதெல்லாம் கூட, அன்பின் காரணமாக நாம் செய்வது தான். இதனால் தான் அவர், தன் பக்தர்களின் உள்ளங்களில் சிரஞ்சீவியாய் வாழ்கிறார்.

உலகில் ஏழுபேர் சிரஞ்சீவிகளாய்(என்றும் நிலைத்திருப்பவர்களாய்) இருக்கும் தகுதி பெற்றவர்கள். அவர்களில், விபீஷ்ணன், தன் அண்ணன் என்றும் பாராமல் ராவணனுக்கு நியாயத்தை உணர்த்தியதற்காகவும்; மகாபலி, தன்னையே தானமாக இறைவனிடம் ஒப்படைத்ததற்காகவும்; மார்க்கண்டேயர், இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக, எமனையே வென்றதாலும்; வியாசர், மகாபாரதம் எனும் அழியா காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்களைப் போக்கி அருள் செய்ததாலும்; பரசுராமர், கொண்ட கடமையில் இருந்து விலகாமல், தந்தை சொல் கேட்டதாலும்; துரோணரின் மகன் அஸ்வத்தாமன், கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக, தன் விசுவாசத்தைக் காட்டியதாலும், சிரஞ்சீவி எனும் நிலையை அடைந்தனர்.

இந்த வரிசையில் முதலாவதாக இடம் பெறுபவர் அனுமன். இவர், தன்னலம் பாராமல், பிறருக்காக சேவை செய்ததால், சிரஞ்சீவியாய் போற்றப்படுகிறார். பெரியாழ்வார் பெருமாளை வாழ்த்தியது போல், தன்னலமற்ற அந்த ராம தொண்டனுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வோம்.



தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us