தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரும்பிப் பார்க்கிறேன்! (6)

திரும்பிப் பார்க்கிறேன்! (6)

திரும்பிப் பார்க்கிறேன்! (6)


PUBLISHED ON : மே 29, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணர்ச்சிவசப்பட்ட பென் கிங்ஸ்லி!

'தினமலர்' கோவை பதிப்பின் வெளியீட்டாளரும், அகில இந்திய செய்தித்தாள்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வடபழனி முருகன் கோவில் தக்காருமான, ஆதிமூலம் அனுமதிபடி, கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து ஏழு ஆண்டுகள், தொகுத்து எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் விமர்சனங்கள், பத்திரிகையாளர் சந்திப்பு, சில வி.ஐ.பி.,களுடனான பிரத்யேகமான சந்திப்பு ஆகியவை, dinamalar.com இணையதளத்தில் விரிவாக வந்தன; சில சிறப்பான விஷயங்கள், 'தினமலர்' நாளிதழிலும் இடம்பெற்றன.

ரிச்சர்டு அட்டன்பரோ இயக்கிய, காந்தி திரைப்படத்தில், காந்தியாக நடித்த, பென் கிங்ஸ்லி, கோவா திரைப்பட விழாவிற்கு விசேஷ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

'நல்ல ஆங்கிலத்தில் அர்த்தமுள்ள கேள்விகள் கேட்க வேண்டும்...' என்று, 'பிரஸ் இன்பர்மேஷன் பீரோ' உயர் அதிகாரிகள் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.

பத்திரிகையாளர்கள், மீடியாக்காரர்கள், 'டிவி' சேனல்கள் என்று, அந்த அறையே நிரம்பி வழிந்தது.

பென் கிங்ஸ்லி இப்படி கூறினார்:

இந்த திரைப்பட விழாவிற்கு வருவதற்கு முன், கோவா கவர்னர் இருந்த ராஜ்பவனுக்கு சென்றிருந்தேன். அங்கு காந்தியின் உருவப்படம் பெரிய அளவில் இருந்தது. அதனருகே சென்று அந்த ஓவியத்தை தொட்டுப் பார்த்தேன். உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு, எப்பேர்பட்ட மனிதர் அவர்!

இவரது கதாபாத்திரத்தை நான் படத்தில் செய்தது, வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்தியாவின் கிராமங்களில் கூட நான் அறியப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது, மிகவும் பெருமையாக இருக்கிறது. உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது, என்றார்.

எம்.ஜி.ஆர்., ஒரு சகாப்தம்!

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த, கே.பி.ராமகிருஷ்ணனிடம், எம்.ஜி.ஆர்., பற்றி நிறைய சுவாரஸ்யமான செய்திகள் இருப்பதை அறிந்தேன்.

'வாரமலர்' இதழ் பொறுப்பாசிரியரின் அனுமதியோடு, கே.பி.ராமகிருஷ்ணனை அவரது வீட்டில் சந்தித்தேன். நான் சந்தித்துப் பேசியவைகளில், 10 விஷயங்களை குறிப்பிட்டு ஒரு தாளில், பொறுப்பாசிரியருக்கு அனுப்பி வைத்தேன்.

ஒரே நிமிடத்தில் அந்த பேப்பர் வெளியே வந்தது. அதில், 'ஓ.கே., 50 வாரங்கள்...' என்று, அனுமதி அளித்திருந்தார்.

50 வாரங்கள் வரக்கூடிய ஒரு தொடர் கட்டுரை பற்றி, ஒரு நிமிடத்தில் முடிவு செய்த பொறுப்பாசிரியரின் திறமையை கண்டு வியந்தேன்.

பின்னர் பல நாட்கள், கே.பி.ராமகிருஷ்ணனை அவரது வீட்டில் சந்தித்து பேட்டி எடுத்தேன். எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் என்ற முறையில், அவர் நடிகராக இருந்த போதும், பின்னர் அரசியலில் வந்து முதல்வர் ஆன பிறகும், ராமகிருஷ்ணன் அவர் கூடவே இருந்ததால், பல முக்கியமான நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்திருக்கிறார். அதுவே இந்த கட்டுரைக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

'தினமலர் - வாரமலர்' இதழில், 2005 - 2006ம் ஆண்டுகளில், 'எம்.ஜி.ஆர்., ஒரு சகாப்தம்' என்ற, தொடர் கட்டுரை வெளியானது.

இந்தக் கட்டுரை, 'தினமலர் - வாரமலர்' இதழில் வெளிவந்த போது, 'ஆனந்த விகடன்' ஆசிரியர் குழுவில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இந்த தொடர் முடிந்ததும், அதை புத்தகமாக வெளியிட, விகடன் பிரசுரம் விரும்புவதாக தெரிவித்தனர்.

இதில் மற்றொரு சிறப்பம்சம், அதுவரை, 'ஆனந்த விகடன், ஜூனியர் விகடன்' ஆகிய பத்திரிகைகளில் வந்த கதைகள் மற்றும் கட்டுரைகளை மட்டுமே, விகடன் பிரசுரம் புத்தக வடிவில் வெளியிட்டன. வெளி பத்திரிகையில் வந்த ஒரு தொடர் கட்டுரையை, விகடன் புத்தகமாக வெளியிடுவது, அதுதான் முதல்முறை.

இந்தப் புத்தகம், 12 பதிப்புகளுக்கு மேல் வெளிவந்து, வெற்றி படைப்பாக அமைந்தது. இந்தப் புத்தகத்திற்கு அந்துமணி அணிந்துரை வழங்கி, கே.பி.ராமகிருஷ்ணனுக்கும், எனக்கும் மிகப்பெரிய கவுரவம் கொடுத்தார்.

விகடன் பிரசுரத்தின், துணை தலைவராக, அப்போதிருந்த அருமை நண்பர் ஆர்.வெங்கடேஷுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நடிகை ஸ்ரீதேவி, பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவை சந்தித்து பேசியது என்ன..

— தொடரும்

எம்.ஜி.ஆர்., நடித்த, அரசிளங்குமரி என்ற படத்தில், விண்வெளியில் ராக்கெட் விட்ட மாதிரி காட்சி வரும். அதைப் பற்றி பேட்டி எடுக்க, பிரபல வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் வீட்டிற்கு சென்றிருந்தேன். பேட்டிக்கு முன், 'அகண்ட விண்வெளியில் பூமிக்கு அருகே உள்ள கோள்கள் எது; பிரபஞ்சத்தில் மிகப்பெரிய கோள் எது?' என்றெல்லாம், என்னிடம் நம்பியார் கேட்க, 'சந்திரன், செவ்வாய்' என்றெல்லாம் நான் பதில் சொன்னேன்.

'அனைத்தும் தவறு. இது கூட தெரியாமல் என்னை பேட்டி எடுக்க வந்து விட்டீர்களே...' என, சிரித்தபடி கூற, நானும் சிரித்து விட்டேன்.

பொது அறிவு மிக்கவர், எம்.என்.நம்பியார். அடுத்த முறை அவரை பேட்டி எடுக்க சென்றால், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படிப்பது போல தயார் செய்து கொள்ள வேண்டும் என, முடிவு செய்தேன்.

எஸ். ரஜத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us