PUBLISHED ON : மே 11, 2014

கடவுளின் படைப்பில் அனைத்து உயிர்களும்
சமம் என்று உணராத ஒருவர், எத்தனை தான், தன்னை வருத்திக் கொண்டு தவம்
செய்தாலும், ஞானத்தையோ, கடவுளின் அருளையோ பெற முடியாது என்பதற்கு, ராம
பக்தையான சபரியே சாட்சி!
சீதையை ராவணன் கவர்ந்து சென்ற பின், காடு, மலை,
வனம் என, எல்லா இடங்களிலும் சீதையை தேடி வருகிறார் ராமர். அவ்வாறு வரும்
போது, சபரி இருந்த, மதங்க முனிவரின் ஆசிரமத்தை நோக்கி, வந்து
கொண்டிருந்தார்.
முக்தியை அளிக்கும் மூர்த்தியான ராமரின் வருகையை அறிந்த
முனிவர்கள், அவரை வழியிலேயே சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒரு முனிவர்,
'ராமபிரானே... இங்கு ஒரு குளம் இருக்கிறது. அதன் நீர் முன்பு, தெளிந்து,
சுத்தமாகவும், சுவையாகவும் இருந்தது. ஆனால், என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை
சிறிது காலமாகவே, அந்தக் குளத்து நீர், புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது.
அதைப் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்...' என்றார். அதற்கு
ராமர், 'முனிவர்களே... சில காலங்களுக்கு முன், சபரி என்ற வேடுவ குல பெண்மணி
இங்கு வசித்து வந்தாள். அவள் தினந்தோறும், அதிகாலையில் இருட்டு பிரிவதற்கு
முன் எழுந்து, முனிவர்கள் நீராட வரும் இக்குளக்கரையின் வழியை பெருக்கி,
தூய்மை செய்வாள்.
'ஒருநாள் அவ்வாறு அவள் பெருக்கி கொண்டிருந்த போது,
நீராடி விட்டு வந்து கொண்டிருந்த முனிவர் ஒருவரின் காலில், சபரியின் ஆடை
லேசாக பட்டுவிட்டது.
'உடனே அந்த முனிவர் கோபப்பட்டு, சபரியை ஏளனமாக
பேசி, மறுபடியும் போய் குளத்தில் நீராடினார். தன்னலம் கருதாத, தெய்வ
சிந்தனை மிகுந்த சபரியை ஏசியதால், இக்குளம் அன்றிலிருந்து முனிவர்கள்
பயன்படுத்த முடியாத அளவுக்கு, புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது...' என்று,
ராமர் சொல்லி முடித்ததும், 'ராம பிரானே இக்குளம் தூய்மையாக வழியே
இல்லையா...' எனக் கேட்டனர் முனிவர்கள்.
'உண்டு... பிரதிபலன்
எதிர்பார்க்காத, தூய்மையான பக்தையான சபரியின் கால்பட்ட நீரை,
அக்குளத்திற்குள் விட்டால், சுத்தமாக மாறி விடும்...' என்றார்.
அதன்படி, சபரியின் கால்பட்ட நீரை குளத்தில் விட, குளம் தூய்மையானது.
குலத்தால்
மட்டுமே ஒருவர், கடவுளுக்கு பிரியமானவர் ஆகிவிட முடியாது; நற்பண்புகளும்,
நல்லொழுக்கமும், தெய்வ சிந்தனையும், பிறருக்கு தீங்கிழைக்காத மனமும்,
தன்னலம் கருதா உள்ளம் கொண்டோரே, பகவானுக்கு பிரியமான பக்தர்கள். அவர்களை
இறைவனே தேடி வருவார்.
பி.என்.பரசுராமன்
விதுர நீதி!: பிறரால்
தாக்கப்பட்டு காயமடைந்தவனும், தன் நெருங்கிய நண்பனுக்கு துரோகம்
செய்தவனும், தன் சொத்து, சுகத்தையெல்லாம் இழந்தவனும், இரவு நேரத்தில் தூங்க
முடியாமல், புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அதுபோலவே, ஒருவன் தான் அறிந்த
உண்மையை துணிச்சலாக வெளியிடாவிடில், தன் வாழ்நாள் முழுவதையும், துயருடன்
கழிப்பான்.
— என்.ஸ்ரீதரன்.
