
ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் வரை, அதன் அருமை பெருமைகள் நமக்கு தெரியாது. அதை இழந்து விட்டாலோ அல்லது சில நாட்கள் அப்பொருள் நம் பயன்பாட்டுக்கு கிடைக்காமல் போனாலோ, மனம் படும் பாடு சொல்ல முடியாது.
சாதாரண பொருளுக்கே இப்படியென்றால், மிகவும் உயர்ந்த ஒன்றை இழந்தவர் நிலை என்ன என்பதை விளக்கும் கதை இது...
மிகவும் துாய்மையான பக்தர், வில்வமங்கள். கண்ணனிடம் எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் பக்தி செலுத்திய உத்தமர். இவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு, அவ்வப்போது நேரில் காட்சியளித்து, வில்வமங்களுடன் விளையாடுவார், கண்ணன்.
ஒருநாள், சிறு குழந்தை வடிவில், வில்வமங்களுடன் விளையாட வந்தார், கண்ணன். அவ்வப்போது நமஸ்காரம் செய்யவும் முயற்சித்தார்.
'வேண்டாம்... வேண்டாம்...' என்று, புறங்கையால் தடுத்தார், வில்வமங்கள்.
அதே வினாடியில், வில்வமங்களின் பார்வையிலிருந்து மறைந்தார், கண்ணன். அதுமட்டுமல்ல, கண்ணன் வருவதும், வில்மங்களோடு விளையாடுவதும் அன்றுடன் நின்று போயின. அனுபவித்து வந்த ஆனந்தம் நின்று போனதும், பைத்தியம் பிடிக்காத குறையாக, கண்ணனை தேடி அலைந்தார்.
'புறங்கையால் என்னை தள்ளிய பின், நான் உனக்கு எப்படி தரிசனம் தர முடியும்...' என்று, அசரிரீயாக பதில் சொன்னார், கண்ணன்.
'கண்ணா... முன் போல் நீ என் கண்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் வாழ்ந்து தான் என்ன பலன்...' என்றார், வில்வமங்கள்.
'நீ என்னை காணத்தான் வேண்டுமென்றால், அனந்தங்காட்டில் வந்து பார்...' என்று கூறியது, அசரிரீ.
கண்ணனை தரிசிப்பதற்காக, அனந்தங்காட்டை தேடி புறப்பட்டார்.
அடர்ந்த காட்டு பகுதியில் போய்க் கொண்டிருந்த நேரம், 'குழந்தாய்... நீ இப்படி அடம்பிடித்துக் கொண்டிருந்தால், உன்னை அனந்தங்காட்டில் அழைத்து போய் விட்டு விடுவேன்...' என, ஒரு குரல் கேட்டது.
குரல் வந்த திசையை நோக்கி ஓடினால், அங்கே ஒரு பெண் இருந்தாள்.
அவளிடம், 'அம்மா... பாலகிருஷ்ணன் எங்கே இருக்கிறான்... அனந்தங்காடு எங்கே இருக்கிறது...' என கேட்டார், வில்வமங்கள்.
'எனக்கு, பாலகிருஷ்ணனை தெரியாது. இங்கிருந்து கொஞ்ச துாரத்தில் இருக்கிறது, அனந்தங்காடு. இந்த பக்கம் செல்லுங்கள்...' என, கை காட்டினாள், அப்பெண்.
அப்பெண் சொன்ன வழியில் ஓடினார், வில்வமங்கள்.
அங்கே, அனந்தங்காட்டில், ஏராளமான பாம்புகள் இருந்தன. கதறினார், வில்வமங்கள்.
'கண்ணா... நான் எங்கு செல்வேன், என்ன செய்வேன், என்னை ஏமாற்றி விட்டாயா...' என, கதறியவர், உடலும், மனமும் களைத்து போய், ஓரிடத்தில் உட்கார்ந்தார்.
அப்போது ஒரு குரல், 'வில்வமங்கள்... பாற்கடலில், அனந்த சயனத்தில் இருப்பதை போல, இங்கேயிருந்து அடியார்களை கரையேற்ற கருதினேன். 32 ஆயிரம் ஆண்டுகள் இப்படி இருப்பேன். பக்தர்கள் பலர், பூலோக வைகுண்டமான குருவாயூரில், நான் இருக்க வேண்டுமென விரும்பினர்.
'பூமியில், அனந்த சயனத்திலும், குருவாயூரில், நான் பிரத்யட்சமாக தங்கியிருக்கிறேன். இதை காணவே, உன்னை இங்கு அழைத்து வந்தேன். பார் என்னை...' என்றது.
கண்களை மூடி அமர்ந்திருந்த, வில்வமங்கள், சுறுசுறுப்பாகி எழுந்து, கண்களை திறந்து பார்த்தார்.
குருவாயூரப்பனும், அனந்தசயனனும் ஒன்றாகவே காட்சியளித்தனர்.
மெய்சிலிர்த்த வில்வமங்கள், அங்கேயே அப்போதே, இறைவனின் திருவடிகளில் கலந்து முக்தியடைந்தார். தேவர்கள், மலர் மாரி பொழிந்தனர்.
பி. என். பரசுராமன்

