PUBLISHED ON : ஏப் 10, 2022

அகத்தியரைப் பற்றி தெரிந்த அளவுக்கு, அவரது மனைவி லோபமுத்ராவை அறிந்தவர்கள் குறைவு. சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு தினத்தில், இமயத்தில் நடந்த சிவ - பார்வதி திருமணத்தை, லோபமுத்ராவுடன் பொதிகை மலையில் தரிசித்தார், அகத்தியர்.
லோபமுத்ராவின் பிறப்பு குறித்து, ராமாயணமும், மகாபாரதமும் வெவ்வேறு மாதிரியாக குறிப்பிடுகின்றன. ஒருசமயம், ஒரு பெண் குழந்தையை உருவாக்கினார், அகத்தியர். சில விலங்குகளும், தாவரங்களும் தங்கள் அழகில் ஒரு பகுதியை அந்தக் குழந்தைக்கு தந்தன.
குழந்தைக்கு தன் கண்களைத் தந்தது, மான்; தன் தைரியத்தைக் கொடுத்தது, புலி; எலும்புகள் ஆயின, தாவரங்களின் பலம் மிக்க கிளைகள்.
இப்படியாக அகத்தியரால் உருவாக்கப்பட்ட குழந்தை முத்ரா, விதர்ப்ப நாட்டு மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தலைநகரம் குந்தினாபுரி. தற்போது, கவுன்டன்யபூர் என்ற பெயரில், மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.
லோபமித்ரா வயதுக்கு வந்ததும், விதர்ப்ப நாட்டு மன்னனிடம், அவளை மணந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார், அகத்தியர். முத்ராவும் சம்மதிக்க, திருமணம் நடந்தது. அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு வந்து அவருக்கு சேவை செய்தாள். இந்த வரலாறு, மகாபாரதத்தின் வனபர்வத்தில் உள்ளது.
குஜராத்தை சேர்ந்த கிரிதரர் எழுதிய ராமாயணத்தில் உள்ள வரலாறு, வேறு மாதிரியாக உள்ளது.
உ.பி., மாநிலத்தின் கான்பூர் அருகே, கன்னாஜ் என்ற ஊர் உள்ளது, கன்யாகுப்ஜ நாடு என, இதை அழைத்தனர். இந்நாட்டு மன்னருக்கு பல பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களில் ஒருவரை அகத்தியருக்கு மணம் முடித்து வைப்பதாக, வாக்களித்தான் மன்னன். ஆனால், எல்லாருக்கும் திருமணம் செய்து விட்டான்.
அகத்தியர் வந்து கேட்ட போது, அவரது கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்குமே எனக் கருதிய மன்னன், தன் மகன் லோபமுத்ரனுக்கு பெண் வேடமிட்டு, அவருடன் அனுப்பி விட்டான். உண்மையறிந்த அகத்தியர், அவனையே பெண்ணாக்கி மணந்ததாக ஒரு சரித்திரம் இருக்கிறது.
லோபமுத்ரா மிகப்பெரிய ஞானி. ரிக் வேதத்தில், ஒரு பகுதியை எழுதியவள். அகத்தியருக்கும், லோபமுத்ராவுக்கும் சிவ - பார்வதி திருமணக் காட்சி கொடுக்கும் வைபவம், சித்திரை விசுவன்று, இரவில் பாபநாசத்தில் நடக்கும். இங்குள்ள கல்யாணி தீர்த்தத்தில், லோபமுத்ரா கோவில் உள்ளது.
பாபநாசம், பாபநாசநாதர் கோவில் பிரகாரத்தில், சிவ - பார்வதி திருமணத்தை, அகத்தியரும், லோபமுத்ராவும் தரிசிக்கும் காட்சியைக் கொண்ட பிரம்மாண்ட சன்னிதி உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம், 45 கி.மீ., துாரத்தில் உள்ளது.
தி. செல்லப்பா
