தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மோசடியில் இது புதுவிதம்!

உறவினர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் இது:

ஒருநாள், அவருடைய வீட்டிற்கு ஒருவர் வந்து, 'சார், ரமேஷ் இருக்காரா...' என்று கேட்டிருக்கிறார். அவரும், 'ரமேஷ் என் மகன் தான்...' என்று கூறி, தன் மகனை அழைத்துள்ளார். வந்த நபர், ஒரு பர்சை எடுத்துக் காட்டி, 'இது, உங்க பர்சா...' என்று கேட்டிருக்கிறார்.

அவர் மகனும், 'ஆமாம்... இது, என் பர்ஸ் தான். காலையில் எங்கேயோ தவற விட்டுட்டேன்...' என்று கூறி, அதை வாங்கி பரிசோதித்ததில், எதுவும் திருட்டு போகவில்லை என்று மகிழ்ந்திருக்கிறார்.

வந்த நபர், சென்னையிலிருந்து அவருடைய தங்கை வீட்டிற்கு வந்த போது, அந்த பர்சை வீதியில் கண்டெடுத்ததாகவும், அதிலிருந்த முகவரியை பார்த்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். உறவினர் குடும்பத்தினர், அவரை நன்றியுடன் வழியனுப்பி வைத்தனர்.

மூன்று மாதங்களுக்கு பிறகு, அதே நபர், ஒருநாள் இரவு, 8:00 மணிக்கு, என் உறவினர் வீட்டிற்கு வந்து, 'என் தங்கை வீட்டிற்கு வந்தேன். ஆனால், அவர்கள் குடும்பத்தோடு திருச்சி சென்றிருக்கும் தகவல் கிடைத்தது. காலையில் வந்து விடுவர். ஐ.டி., புரூப் எடுத்து வராததால், லாட்ஜில் தங்க முடியவில்லை...' என்று கூறி, நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறார்.

விடிகாலையிலே எழுந்து கிளம்பி விட்டிருக்கிறார். அதன் பின்னரே, வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள், தாலி செயின்கள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர்.

மேலும், அவன் கொண்டு வந்து கொடுத்த பர்சும், அவனே திருடி, நல்லவன் போல் திருப்பிக் கொடுத்து, நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறான். அதை வைத்து, 'லம்ப்'பாக அடித்துச் சென்றதையும் அறிந்து, நொந்து போயுள்ளனர்.

மோசடியில் இது புதுவிதம். மக்களே... உஷாராக இருங்கள்!

- ஆ. தேவதாஸ், புதுச்சேரி.

செய்வோமா தோழா!

புதிது புதிதாக பொருட்கள், வீட்டு சாதனங்கள், ஆடைகள் என, தினமும் அறிமுகம் ஆகின்றன. பார்க்கும்போதே வாங்கும் எண்ணத்தை துாண்டுவதால் தேவையோ, தேவையில்லையோ, ஆசைக்காக வாங்குகிறோம். ஆனால், சில தடவை மட்டுமே உபயோகப்படுத்துகிறோம். அவற்றை சொந்தங்களுக்கோ, நண்பர்களுக்கோ, தேவைப்படுவோருக்கோ கொடுப்பது வழக்கம்.

மற்ற நாடுகளில், இதற்காக ஒரு, 'ஆப்' உருவாக்கி உள்ளனர். தேவை இல்லாதவர்களிடமிருந்து, தேவையானவர்களுக்கு அந்த பொருட்களையோ, ஆடைகளையோ பற்றி, 'ஆப்' மூலம் தெரியப் படுத்துகின்றனர். தேவையானவர்கள் அவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ள முடிகிறது.

தமிழகத்திலும் அப்படி ஒரு, 'ஆப்'ஐ உருவாக்கினால், நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம் தேவையற்ற பொருட்களை மற்றவருக்கு இலவசமாக கொடுப்பதற்கு ஒரு பாலமாக இருக்கும்.

இளைஞர்கள் யாராவது முன் வந்து, இப்படி ஒரு, 'ஆப்' உருவாக்குங்களேன்!

கரோலின் சாரா, கோவை.

சீரியலால் நேர்ந்த விபரீதம்!

சமீபத்தில், நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருக்கு ஒரே பையன், பிளஸ் 2 படிக்கிறான். அவன், தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். கையை அடிக்கடி முறுக்கி கொண்டும், சட்டை பட்டனை திருகிக் கொண்டும் பேசினான். அதுமட்டுமல்ல, பொய் பேசுவது போல, தலையை கோதிக் கொண்டு பேசினான்; படபடப்பாகவும் இருந்தான்.

நண்பரிடம், 'நல்ல டாக்டர்கிட்ட காட்டக் கூடாதா...' என்றேன். 'நீ வேறப்பா... 'டிவி' சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றை தினமும் பார்க்கிறான். அதில், நடிக்கும் கதாநாயகன் திக்கித் திக்கி பயந்தபடி, பொய் பேசுகிறான்.

'அதைப் பார்த்த இவனும், இப்படி செய்ய ஆரம்பித்து விட்டான். இவன் பொய்யே பேசுவதில்லை. உண்மையையே பொய் மாதிரி, அந்த கதாநாயகன் போல பேசுகிறான். அந்த, 'மேனரிசம்' இவனுக்கு பிடித்து போனதால், அப்படியே செய்கிறான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் திருந்த வில்லை. என்ன செய்வது...' என, வருத்தப்பட்டார்.

மருந்து இல்லாத வியாதிக்கு என்ன செய்வது?

பெற்றோர்களே... நீங்கள் மட்டும் சீரியல் பாருங்கள்; சின்ன குழந்தைகளை பார்க்க விடாதீர்கள்!

ஆர். சேஷாத்ரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us