தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்பிற்கும் உண்டோ...

அன்பிற்கும் உண்டோ...

அன்பிற்கும் உண்டோ...


PUBLISHED ON : மே 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாரம் என்ற சொல்லுக்கு, அன்பு என்றும் தமிழில் ஒரு பொருள் உண்டு. 'வாரமலர்' என்றால், 'அன்பில் மலர்வது' என்று அர்த்தம். வாரந்தோறும், வாசகர்களுக்காக, அன்பில் மலரும் நம், 'வாரமலர்' இதழைப் போன்று, அன்பில் மலர்ந்த ஒரு மனிதரைப் பற்றிய சம்பவம் இது:

ஈஸ்வர்லால் என்பவர், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார்.

தினந்தோறும் அந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு ரயில் வண்டி தான் வரும்; கோதுமை மூட்டைகளை இறக்கி விட்டுப் போய் விடும். அவற்றைப் பாதுகாத்து, வியாபாரிகளிடம் ஒப்படைப்பது, ஸ்டேஷன் மாஸ்டரான ஈஸ்வர்லாலின் வேலை; அவருக்கு உதவியாளர் ஒருவரும் இருந்தார்.

பெயருக்கு ஏற்றாற்போல், மனத்துாய்மையும், நற்குணங்களும் நிறைந்தவர், ஈஸ்வர்லால். பக்கத்து ஊரில், 'ஹரிகதா' காலட்சேபம் நடக்கும்; அங்கு சென்று, பின், இரவு 9:00 மணிக்கு ஸ்டேஷனுக்கு திரும்புவது அவரின் வழக்கம்.

ஒருநாள், அவ்வாறு போய் திரும்புகையில், அவரது உதவியாளர், கோதுமை மூட்டைகளில் இருந்து, -15 கிலோ கோதுமையை தனியாக எடுத்து வைத்து, மூட்டையின் வாயைத் தைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார். அவர் பார்த்ததை, உதவியாளரும் பார்த்து விட்டார்.

தன் குட்டு வெளியானதை எண்ணி, நடுங்கிய உதவியாளர், 'காலையிலிருந்து வீட்டில் அனைவரும் பட்டினி; சம்பளமும் செலவாகி விட்டது. அதனால் தான் இப்படி ஈனத்தனமாகச் செய்து விட்டேன்; மன்னியுங்கள்... இனி, இப்படிச் செய்ய மாட்டேன்...' என்று அழுதார்.

'சரி... எடுத்த கோதுமையை மறுபடியும் மூட்டையில் போடு...' என்றார், ஈஸ்வர்லால். அவ்வாறே செய்தார், உதவியாளர். அதன்பின், உதவியாளரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஈஸ்வர்லால், தன் மனைவியிடம், 'நான்கு பேர்களுக்கு வேண்டிய கோதுமை மாவு, பருப்பு முதலானவைகளை இவரிடம் கொடு...' என்றார். பின், உதவியாளரிடம்,'நாளை காலை ஒன்பது மணிக்கு என்னை வந்து பார்...' என்று சொல்லி, அனுப்பி வைத்தார்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு வந்த உதவியாளரிடம், ஒரு கடிதத்தை தந்த ஈஸ்வர்லால்,'இதை, இந்த ஊரில் உள்ள மளிகைக்கடை வியாபாரியிடம் கொடு...' என்றார். உதவியாளரும் அப்படியே கொண்டு போய் கொடுக்க, ஒரு மாதத்திற்குத் தேவையான தானியத்தைத் தந்து அனுப்பினார், வியாபாரி.

ஒரு மாதத்திற்கு பின், அந்த மளிகைக்கடைக்கு சென்ற ஈஸ்வர்லால், 'என் கணக்கில், பற்று எவ்வளவு இருக்கிறது, பார்த்துச் சொல்லுங்கள்...' என்றார்.

'என்ன இது... நீங்கள் எதை வாங்கினாலும் பணம் கொடுத்துதானே வாங்குவீர்கள்; பின், எப்படி உங்கள் கணக்கில் பற்று இருக்கும்...' என்றார், வியாபாரி.

குழம்பிய ஈஸ்வர்லால், 'என் உதவியாளருக்குப் பொருள் தரச்சொல்லி கடிதம் கொடுத்து அனுப்பினேனே...' என்றார்.

'ஆமாம்... ஒரு மாதத்திற்குத் தேவையானவற்றை தரச்சொல்லி, அதை உங்கள் கணக்கில் எழுதிக்கொள்ளும்படி கடிதம் கொடுத்திருந்தீர்கள்...' என்றார்.

'அதற்குண்டான பணத்தைக் கொடுக்கத்தான் வந்தேன்...' என்றார் ஈஸ்வர்லால்.

'ஐயா... நடந்ததை எல்லாம் உங்கள் உதவியாளர் சொன்னார். இனி, நீங்கள் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் கடிதம் கொடுத்தனுப்புங்கள்... தெரியாமல் நிறைய திருடு போவதை விட, இவ்வாறு கொடுப்பதன் மூலம் தீயவர்களும் திருந்துவார்களல்லவா... உங்கள் புண்ணியத்தில் நானும் பங்கு கொள்கிறேனே...' என்று சொல்லி, பணம் பெற மறுத்து விட்டார்.

அடுத்தவரிடம் உள்ள குறைகளை பட்டியல் போடுவதை விட, அவர்களின் நிலையறிந்து அன்பு செலுத்தினால், தவறு செய்பவரும் திருந்தி விடுவார்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

சோமாஸ்கந்தர் அமைப்பு என்பது என்ன?

ஒரே பீடத்தில் அம்மன், கந்தன், சிவன் மூவர் சேர்ந்திருக்கும் அமைப்பிற்கு, 'சோமாஸ்கந்தர்' என்று பெயர். இதில் கந்தனுக்கு இடப்பக்கம் அம்மையும், வலப்பக்கம் சிவனும் அமர்ந்திருப்பர். சிவன் கோவில்களில், செப்பினால் ஆன சோமாஸ்கந்தர் சிலை அமைக்கப்பட்டிருக்கும். சோமாஸ்கந்தரை வழிபட்டால், மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us