
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவி தலிமா; இவர் சிறந்த பாடகி. பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் குரலில் பாடி, அவரையே வியக்க வைத்தவர். இசையின் மீது கொண்ட அதீத பற்றால், 'இசைத்துறையில் இருப்பவரை மட்டுமே மணப்பேன்...' என்று உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், இசைக் குழுவுடன் இணைந்து ஜெர்மனி சென்றார். ஆறு பேர் கொண்ட இக்குழுவில், இரண்டு கிறிஸ்துவ பாதிரியார்களும் இருந்தனர். அவர்களில் இள வயது பாதிரியார் ஒருவருடன் தலிமாவுக்கு நட்பு ஏற்பட, அவரிடம் தன் லட்சியத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். ஒரு நாள், அவர், 'நான் உன்னை மணக்க விரும்புகிறேன்...' என்று கூறியுள்ளார். 'எனக்கும் விருப்பம் தான்; ஆனால், நீங்க பாதிரியார் ஆச்சே...' என்று தலிமா கூற, 'நான், உனக்காக பாதிரியார் பட்டத்தை துறக்கிறேன்...' என்றார்.
ஊர் திரும்பிய காதலர்கள் தங்கள் விருப்பத்தை பெற்றோரிடம் கூறிய போது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தங்கள் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி, திருமணத்துக்கு சம்மதித்தனர்.
இப்போது, இரு குழந்தைகளுடன், சந்தோஷமாக இருக்கிறார், தலிமா.
— ஜோல்னாபையன்.

