sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புக்கு ஆசைப்படு!

/

அன்புக்கு ஆசைப்படு!

அன்புக்கு ஆசைப்படு!

அன்புக்கு ஆசைப்படு!


PUBLISHED ON : ஜன 15, 2012

Google News

PUBLISHED ON : ஜன 15, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருமுனையில் திரும்பும் போது, ஒலி பெருக்கியில் யாரோ, ஒரு பேச்சாளரின் சொற்பொழிவின், சில பகுதிகள், தாமாக வந்து, காதில் விழுந்தன.

அப்படியே நின்றான் ராஜு.

'கல்வியை பெருக்க, ஏழை மாணவர்களுக்கு, மதிய உணவை இலவசமாகத் தந்தார் காமராஜர். அரசு மருத்துவமனைகளில், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை கொடுத்தார்; வேறு எதையும், அவர் இலவசமாக வழங்கியதே இல்லை. அறிவுக்கு கல்வி தந்து, வயிற்றுக்கு சோறிட்ட அந்த மனிதனைத் தோற்கடித்து, காதுக்கு சுகம் அளிக்கும் பேச்சுக் கச்சேரிக் கலைகளுக்கு, நாம் வாக்களித்தோம். அந்த பாவத்திற்கான சம்பளம் தான், திருமங்கலம் உருவில் திரும்பி இருக்கிறது...'

பேச்சு முதலில் கட்டிப்போட்டது. பிறகு நெஞ்சில் அனலை மூட்டியது. மெல்ல மெல்ல, உடலே பற்றி எரிவதைப் போலிருந்தது.

யார் கேட்டனர் இலவசங்களை? எந்த வாக்காளன், சட்டசபை முன் போய் நின்று, மிக்சி கேட்டான்? மொழி மாநாடு நடத்தி, காசைக் கரியாக்குங்கள் என, எந்த அறிஞர்கள் கேட்டனர்?

ஒரு தொழிற்சாலை... ஒரே ஒரு தொழிற்சாலை!

போதாதா அது? செருப்பு தயாரிக்கட்டும், ஆணி செய்யட்டும், காகிதம் தயாரிக்கட்டும், ஏதோ ஒரு தொழில், ஏதோ ஒரு பிழைப்பு. அவனைப் போன்ற ஆயிரம் டிப்ளமா இளைஞர்கள், பிழைத்துவிட மாட்டார்களா? அவனைப் போன்ற திறமைசாலி, ஏழை வாலிபர்கள், வாழ்ந்துவிட மாட்டார்களா? கயிற்றில் மஞ்சளைக் கட்டி, அரை கிராம் தாலித் தங்கத்தையும் அடகுக்கு தந்த, அவன் அம்மாவை போன்ற அம்மாக்களும், கண்ணீர் சொட்டுவதை மறைத்தபடியே, மார்வாடி கடைக்கு கொண்டு போன, அவன் அப்பாவைப் போன்ற, அப்பாக்களும் சந்தோஷப்பட மாட்டார்களா?

''ராஜு... நில்லு,'' என்று குரல் கேட்டது. திரும்பிய போது, இருட்டு சந்திலிருந்து வேகமாக வந்தான் நண்பன் தங்கவேல்.

''என்ன சொல்றான், புது கம்பெனிக்காரன்?'' என்றான் அதட்டுவதைப் போல. ''போன வாரம், அவன் சொன்னதை, இந்த வாரம் இவன் சொல்றான்,'' என்ற போது, வார்த்தைகள் கோபமும், எரிச்சலுமாக விழுந்தன.

''தெரியும்டா ராஜூ... அதனால தாண்டா, விடாம உன்னை தொடர்ந்து வர்றேன். உருப்படாதுடா இந்த நாடு... எந்த தலைவனுக்கும், குடிமக்கள் மேல, அக்கறை கிடையாதுடா... கடைஞ்செடுத்த அயோக்கியர் களடா எல்லாரும்... வா... வாடா எங்க பக்கம், தலைவர் வர்றாரு சனிக்கிழமை. பாத்தா அசந்துடுவ... அவ்வளவு கம்பீரம், மென்மை, உறுதி, அனுமன் மலை காட்டுலதான் கூட்டம்...''

தங்கவேல் முகம் பளபளத்தது. தோள்கள் புடைத்து நின்றன.

அப்பாவின் உருவம் எதிரில் வருவதை, அப்போது தான் பார்த்தான் ராஜூ.

''நீ கிளம்பு தங்கவேல்... நாம மறுபடி சந்திக்கலாம்,'' என்றான் அவசரமாக.

''எங்கே, எப்போ?''

''கூடிய சீக்கிரம்... இப்ப நீ கிளம்பு.''

''வருவே ராஜு... நீ கண்டிப்பா வருவே,'' அழுத்தமான குரலில், முகம் பார்த்து சொல்லி விட்டு, அவன் இருளில் மறைந்த போது, அப்பா எதிரில் வந்து விட்டார்.

''என்னப்பா ஆச்சு?'' என்றார். விழிகளின் எதிர்பார்ப்பு, மின்னல் வெட்டை போலிருந்தது.

''இல்லப்பா... கிடைக்கல... தேவையான ஆளுங்கள எடுத்துட்டாங்களாம்.. அடுத்த முறை பாக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க.''

மின்னல் மறைந்தது. அந்த இமைகளில், ஈரம் படிந்த அந்த தருணங்களை, அவன் மனதார வெறுத்தான்.

''சரிப்பா... பொறுத்திருந்து பாப்போம்... ஒரு வேலைப்பா ராசு,'' என்றார் சமாளித்தவரை போல.

''என்னப்பா?''

''பாட்டிக்கு வயிறு நோக்காடு நாலு நாளா இருக்குதாம், பாவம், தாங்க முடியாதப்பதான் வெளிய சொல்லுது... நீ கொஞ்சம், பாலு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறியாப்பா? ரத்னம் வீடு வரை போற வேலை இருக்கு எனக்கு.''

''சரிப்பா... நான் பாத்துக்கிறேன்... நீங்க பொறுமையா வாங்க.''

''கூட்டம் அதிகம் இருக்கும்பா ராசு, கொஞ்சம் பொறுமையா இருந்து கூட்டிட்டு வா.''

''கவலைப்படாம போங்கப்பா,'' என, அவரை அனுப்பிவிட்டு நடந்தான். ரத்னம் எப்பேர்ப்பட்ட கந்துவட்டிக்காரன் என்பது, ஊர் அறிந்த ரகசியம். போன கடனுக்குரிய வட்டி, குட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதோ புதிய கடன் பிறக்கப் போகிறது.

இன்னும் என்ன நம்பிக்கை இழை இருக்கிறது? தலைமுறை ஏழைகள். கூலிக்கு மாரடிக்கவே பிறந்த கூட்டம். இதில் டிப்ளமா வரை வந்ததே, எவரெஸ்ட் சாதனை. இன்னும் வேலை கிடைக்கும் என்று நம்புவதோ, அதில் மிக கண்ணியமாக, மிக வசதியாக என நினைப்பதோ வெறும் முட்டாள்தனம்!

பாட்டி தயாராக இருந்தாள். நல்ல வேளையாக சைக்கிள் இருந்தது, செயின் கழலாமல், அப்பா அவனுக்காக வைத்துவிட்டு நடந்து போயிருக்கிறார்.

''பாட்டி, பின் சீட்டுல உக்காந்துக்குவாங்கப்பா ராசு... மெதுவா ஓட்டு,'' அவன் கையில் காபியை வைத்துவிட்டு நின்றாள் அம்மா.

''கந்துவட்டிக்காரன் கிட்ட போறாரு அப்பா... பாக்கவே கஷ்டமா இருக்குமா, இதெல்லாம், ஒரு வாழ்க்கைன்னு, ஏம்மா மூச்சு விட்டு கிட்டிருக்கோம்? பெரிய அரிவாளா எடுத்து, அத்தனை தலையையும், சீவி எறியணும்ன்னு வருதும்மா ஆத்திரம்,'' என, தரையை காலால் உதைத்தான்.

''வேணாம்டா கண்ணு,'' என்றாள் அம்மா, கண்களில் நீர் மல்க. ''மாறும்பா... எப்போதும் வாழ்ந்தவனும் இல்ல, எப்போதும் கெட்டவனும் இல்ல.''

''அதெல்லாம் வெத்து பழமொழி... நடைமுறை வாழ்க்கையில், எந்த புரட்சியும் தானாக வராதும்மா... நாம தான் ஏற்படுத்தணும்... மேல் தட்டு வர்க்கம், யார் எப்படி போனா நமக்கென்னன்னு, சுயநலமா இருந்துடும்... அடித்தட்டு வர்க்கம், அன்றாட வயித்துப் பிழைப்புலயே அலைக்கழிஞ்சு போய்டும்... ஓரளவு வாழ்க்கை உத்தரவாதமும், படிப்பும் இருக்கிற, நடுத்தர மக்களால்தான் புரட்சி உருவாகும்.''

கண்களில் சிவப்பும், பார்வையில் அழுத்தமும், வார்த்தைகளில் உறுதியுமாக, புதிய மனிதனாக நின்ற மகனைப் பார்த்து, திகைத்தாள் அம்மா.

ஓடோடிப் போய், அவன் முகத்தை, புடவைத் தலைப்பால் துடைத்தாள்.

''கோவமே வேணாம்டா ராசு... அது வேலைக்கே ஆகாதுடா... நாம நல்லவங்களா பொறந்தோம்... கடைசி வரை, நல்லவங்களாவே இருந்துட்டு போய்டுவோம்... பாங்கில ஆட்டோ லோன் கொடுக்கிறாங்களாம். அதுலயும், டிப்ளமா படிச்சவங்களுக்கு முன்னுரிமையாம், அப்ளிகேஷன் வாங்கி வெச்சிருக்கேன்... சரியா வரும்பா ராசு,'' என்ற அம்மாவை வெறுமையுடன் பார்த்து, அவன் கிளம்பினான்.

கிளினிக்கில் கூட்டம் அதிகமிருந்தது. டாக்டரின் எளிமையான அறையின், நீலப் படுதாவை ஒட்டி, உட்கார இடம் கிடைத்தது. பாட்டி சாய்ந்த வாக்கில் அமர, அவன் ஓரத்தில் உட்கார்ந்தான்.

அருகிலிருந்த ஜன்னல் வழியாக, சற்று வேகமாக காற்று வீசும் போதெல்லாம், டாக்டரின் குரல் கேட்டபடி இருந்தது. நோயாளிகளுடன் அவர் உரையாடுவது, நோய் பற்றி பேசுவது, என்று வார்த்தைகள் கேட்டன.

ரத்னம் வீடு நோக்கி, அப்பா தளர்வான கால்களுடன் நடந்ததை, கண்கள் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தன. அவரை இடிப்பது போல, மிக அருகில் வந்து, மயிரிழையில் நகர்ந்து போன, பி.எம்.டபிள்யூ., காரின் கண்ணாடியை, அவன் மானசீகமாக உதைத்தான்.

தங்கவேலின் வார்த்தைகள், செவிகளின் மேற்புறத்திலேயே இருந்தன. 'பத்து பண்ணையாரை போட்டுத் தள்ளணும்டா... குறைஞ்சது, அஞ்சு பேரையாவது சுட்டுக் கொல்லணும்... பதுக்கறது, கட்டப் பஞ்சாயத்துல கல்லா கட்டுறது, ஏழ பாழய, ஏழ பாழயாவே வெச்சிருக்க, என்னென்ன செய்யணுமோ, அதையெல்லாம் செய்யறதுன்னு, காலம் காலமா செஞ்சிகிட்டு வர்ற, இந்த நாய்களை, யாருடா, களை எடுக்கிறது? உன்னையும் என்னையும் போல, இருக்கிற, இளைய தலை முறைதாண்டா... இருக்கிறவன் கிட்ட இருந்து, இல்லாதவன் கிட்ட கொடுக்கிறதுக்கு, எவன் கிட்டடா அனுமதி வாங்கணும்?'

'கட்டாயம் செய்யுறேண்டா...' என, அவன் தன்னை அறியாமல், முணு முணுத்தபோது, பாட்டி அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.

''என்னடா ராசு... நீயாவே பேசுற? மொகமும் கறுத்து, இறுக்கமா... ஒன் மொகமாவே இல்லையேடா?''

''ஏதோ யோசன பாட்டி, ஒண்ணுமில்ல,'' என்ற போதுதான் கவனித்தான்.

டாக்டரின் குரல் தெளிவாகக் கேட்டது.

'' காயம் ஆறணும் மொதல்ல... அதுக்கு சில்வரெக்ஸ் போட்டுக்குங்க. தோல் ஆறி, பிரிஞ்சு வந்ததும் ஆலிவ் ஆயில் தடவினா போதும். மார்க் இருக்காதும்மா. பீஸ், பைவ் ஹண்ட்ரடு,'' என்றார் மென்மையாக.

''பெரியவரே பைபாஸ், ஆஞ்சியோ, அது இதுன்னு பயப்பட வேண்டாம். அரித்மியான்னு இதுக்கு பேரு... இதயத்துடிப்புல மாற்றம், ரேடியோ ப்ரீக்வன்சி மூலமா, சரி பண்ணிடலாம். இப்பவே, லெட்டர் தர்றேன், எடுத்துக்கிட்டு, திலகர் மருத்துவமனைக்குப் போங்க, குறஞ்ச, செலவுல முடிஞ்சிடும். பத்து ரூபா பீஸ் கொடுங்க போதும்,'' இப்போதும் அதே மென்மை.

அவன் திகைத்தான். என்ன நடக்கிறது? என்ன செய்கிறார் இந்த டாக்டர்?

வெறும், சூட்டுக் காயத்துக்கு, ஆயின்மென்ட் எழுதிக் கொடுத்து, ஐநூறு ரூபாய் வாங்குகிறார். பெரிய இதய பிரச்னைக்கு, பத்து ரூபாய் என்கிறார். ஒன்றும் புரியவில்லயே...

அவன் மனதைப் புரிந்து கொண்டதைப்போல பாட்டி சொன்னாள்...

''இந்த டாக்டர் வெறும் மனுசன் இல்லப்பா... கடவுள். இவரு, இருக்கிறவங்ககிட்ட இருந்து வாங்கி, இல்லாதவன் கிட்ட கொடுக்கிற, தர்மம் செய்யுறவரு... பாரு கூட்டத்த... சைக்கிள்ல வர்றவனும் இருப்பான், நடந்து வர்றவனும் இருப்பான்... கப்பல் மாதிரி கார்ல வர்றவனும் இருப்பான். தர்மதுரைப்பா, டாக்டரு கலி காலத்துக்கு ஏத்த தர்மதுரை.''

திரும்பி பாட்டியைப் பார்த்தான் ராஜூ, அவள் முறுவலுடன், அவன் கையை அழுத்தினாள்.

இது, இதுதானா சரி? இது தானா நியாயம்?

தத்துவங்கள் மட்டுமல்ல, தத்துவங்களை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளும், நேர்மையானதாக, சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும். இருப்பவனிடமிருந்து வாங்கி, இல்லாதவனுக்கு கொடுப்பது என்கிற தத்துவத்தை, அரிவாளை எடுத்து நிலை நிறுத்த வேண்டாம்; அன்பும், அறிவும் கொண்டு சாதித்தால் போதும்.

''ஆட்டோ வாங்குறேன் பாட்டி, ஏழைங்களுக்கு கம்மி ரேட்டுல ஓட்டுறேன். வசதியானவன் வந்தா, அதிகப்படியா வாங்குறேன்... இப்படி ஆரம்பிக்கிறேன் புதிய வாழ்க்கையை,'' என்றான். புன்னகையுடன் பாட்டியின் கை பற்றினான்.

''புரியலப்பா... ஆட்டோவா என்னப்பா அது?''

''டாக்டர் சொல்லிக் கொடுத்த சிகிச்சை பாட்டி,'' என்றான் புன்னகையை விரிவுபடுத்தி.

***

வி. உஷா






      Dinamalar
      Follow us