
** ஆர்.அன்பழகன், மாடம் பாக்கம்: எதை நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது உங்களுக்கு?
அரசியல்வாதிகள் வருவர்; போவர்! ஆனால், அரசை நிரந்தரமாக நடத்தி செல்வது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள். இவர்களிடம் லஞ்சம் மலிந்து விட்டதை எண்ணும் போது, மனம் வலிக்கிறது... 'நல்லவர்... சிலர்...' என்று நம்பிக்கை வைத் திருந்த, பல அதிகாரிகளின் இன்னொரு முகம் வெளிப்படும்போது, அதிர்ச்சியில் உறைந்து போகிறேன்!
***
*கா.குருதேவி, சாத்தூர்: பெண் என்பவள் ஒருவனுக்கு எப்போது முள்ளாகத் தெரிகிறாள்?
தன் சொல்படியே நடக்க வேண்டும்; தான் நினைத்த படியே செயல்பட வேண்டும் என்ற ஆணின் எதிர்பார்ப்பு எல்லையைத் தாண்டும் போது முள்ளாகத் தெரி கிறாள்!
***
*பா.கஸ்தூரி, ஆலந்தூர்: பணம் இருப்பவர்களும், இல்லாதவர்களும் கூட, 'கஷ்ட மாக இருக்கிறது...' எனக் கூறுகின்றனரே... கஷ்டமே இல்லாதவர் யார்?
சிக்கனமாக இருக்கத் தெரிந்தவர், சேமிக்க தெரிந்தவர்களே பணக் கஷ்டமில்லாதவர்கள். ஆடம்பரம் தேவை இல்லை எனத் தெரியாமலே இருப்பவர்களும், இல்லாதவர்களும் செலவு செய்வதால் தான், 'கஷ்டமாக இருக்கிறது...' என்கின்றனர்.
***
** ஆர்.சபரி, கே.புதூர்: ஒரு மனிதனுக்கு இந்த காலத்தில் மிக முக்கியமாக தெரிய வேண்டியது என்ன?
எது, எதற்கு பர்சை திறக்கலாம்... எது, எதற்கு திறக்கக் கூடாது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு சோப்பு - சீப்பு வாங்குவதானால் கூட, 'அவசியத் தேவை தானா அது?' என, ஒரு முறை யோசித்துத் தான் வாங்க வேண்டும்... சிக்கனமாக வாழ கற்றுக் கொண்டு விட்டால் எப்போதுமே இன்பம்தான்!
***
*கு.செந்தில், நாட்டரசன்கோட்டை: தனி மனித சுதந்திரம் என்றால் என்ன?
இந்த செயல்கள் எல்லாம், மற்றவர்கள் நமக்கு செய்து விடக் கூடாது என்று, எச்செயல்கள் பற்றியெல்லாம் எண்ணுகிறீர்களோ, அவற்றை நீங்கள், அடுத்தவர்களுக்கு செய்யா திருப்பதே, தனி மனித சுதந்திரம்!
***
** எஸ்.சுதர்சனன், குஞ்சன் விளை: பெண்கள் சம்பாதித்து, தன் காலில் நிற்காதவரை, ஆணாதிக்கம் ஒழியாது என்ற கூற்று சரிதானா?
மிக, மிக சரிதான்... காசுக்காக கணவனையோ, பெற்றவளையோ, சகோதரனையோ எதிர்பார்த்து இருக்கும் வரை, எந்த பெண்ணும் சுதந்திரமாக இருக்க முடியாது... ஆணாதிக்கம் தலை விரித்து ஆடத்தான் செய்யும். ஆனால், ஒரு பெண், பொருளாதார ரீதியில், யாரையும் சார்ந்து இருக்க வில்லை எனில், சமூகத்தில், ஆண்கள் மத்தியில் அவள் மதிப்பு, பல மடங்கு அதிகரிக்கவே செய்யும். ஆணாதிக் கம் போன்ற அல்டாப்புகள் அங்கே செல்லுபடியாகாது!
***
*கா.சாத்தப்பன், தசரதபுரம்: நான் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை... மாதக் கடைசியில் ஓட்டாண்டி யாகவே நிற்கிறேன்...
ஒவ்வொரு நாள் இரவிலும் படுக்க போகும் முன், அன்றைய செலவுகளை கணக்கு புத்தகத்தில் எழுதப் பழகுங்கள்... பணம் எப்படி பறக்கிறது என்பது தெரிய வரும்... 'கணக்கு எழுதாதவனுடைய நிலைமை, கழுதை புரண்ட இடம் மாதிரி...' என,பெரியவர்கள் சொல்வதை கேட்டதில்லையா?
***
*ரா.விஜயராஜன், கப்பலூர்: என் நண்பன் எப்போதும் பதவி, பட்டம், புகழுக்காக அலை கிறானே...
பட்டம், பதவி, புகழ் ஆகியவைகளில் எப்போதும் நாட்டம் கொண்டுள்ள உள்ளங்கள் உயரியதாய் இருக்காது. எனவே, உங்கள் நண்பனுடன் ஜாக்கிரதையாக பழகுங்கள்!
***