sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 15, 2012

Google News

PUBLISHED ON : ஜன 15, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோட்டார் சைக்கிள் உற்பத்தியிலும், விற்பனையிலும், ஒரு காலத்தில் பிரிட்டன் தான் பெரிய ஆளாக இருந்தது. 50 வருடங்களுக்கு முன், பிரிட்டனில் நடந்த மோட்டார் சைக்கிள் ரேசில், ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா வண்டிகள் கலந்து கொண்டன...

அப்போது, 'ஜப்பான்காரனுக்கு, ரிக்ஷா செய்யத் தெரியும், மோட்டார் சைக்கிளுமா செய்யத் தெரியும்?' என்று கேலி செய்தது பிரிட்டன்.

ஆனால், அடுத்த இரண்டாண்டுகளிலேயே, 10 பந்தயங்களில் ஹோண்டா தான் வெற்றி பெற்றது. 'மோட்டார் சைக்கிள் உற்பத்தியின் ரகசியங்களை, ஹோண்டா கம்பெனியாரிடம், பிரிட்டிஷ்காரர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்...' என்று எழுதியிருந்தது பிரிட்டிஷ், 'டெய்லி மிரர்' பத்திரிகை என்றார், பைக் பிரியரான நண்பர் ஒருவர்.

'ஹோண்டா என்றால், ஜப்பான் மொழியில், மோட்டார் சைக்கிள் என்று அர்த்தமோ?' என்றேன்.

இல்லை; இந்த மோட்டார் சைக்கிள் கம்பெனியின் சொந்தக்காரர் பெயர் அது. அவர் ஒரு சாதாரண இரும்புக் கொல்லரின் மகன். பள்ளிப்படிப்பை விட்டு விட்டு, தொழிலில் இறங்கினார். 27வது வயதில், சொந்தத்தில் ஒரு பட்டறை வைத்துக் கொண்டார்.

அவர் செய்த கருவியெல்லாம் சரியாக வேலை செய்யவில்லை. 'அதற்கெல்லாம் படிப்பு வேண்டும்; இல்லாவிட்டால் முடியாது...' என்றனர்.

அதனால், பகலெல்லாம் பட்டறையில் உழைத்து, இரவில் முறைப்படி படித்தார். பின்னாளில், பிரிட்டனுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தார் என்றார் நண்பர்.

நண்பரே, இன்னொரு துணுக்கு செய்தியும் சொன்னார்...

பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் நடந்ததாக, ஒரு துணுக்குச் செய்தியை எப்போதோ, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'டில் படித்தேன். பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் ஒரே சலசலப்பு. ஆளும் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர் ஒருவரே பார்லிமென்ட்டில்,

'அரசாங்கத்தின் போக்கு கண்ணைக் கட்டி, காட்டில் விட்டது போலிருக்கிறது!' என்று தாக்கிப் பேசி விட்டார்.

அடுத்த கூட்டத்தில், எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, 'ஆளுங்கட்சி உறுப்பினரே இப்படிப் பேசியிருக்கிறாரே... இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு மாக்மில்லன், 'அந்த மெம்பருக்கு புத்தி கூர்மையும், சுதந்திரமும் உண்டு. அவற்றை அவருக்குக் கொடுத்தது யார் என்று, நான் சொல்லக் கூடாது!' என்றார்.

இந்த பதிலைக் கேட்டு, ஆளுங்கட்சியினர் ஆரவாரித்தனர். ஏன் தெரியுமா? அந்தக் குறிப்பிட்ட உறுப்பினர், மாக்மில்லனின் சொந்த மகனே!

***

வால்ட் விட்மன் அமெரிக்கக் கவிஞர். இவர், தன், 'புல்லின் இதழ்கள்' என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார்:

மண்ணையும், சூரியனையும், பிராணிகளையும் நேசி! பணத்தை லட்சியம் செய்யாதே; கேட்கிறவனுக்கெல்லாம் கொடு! அறிவில்லாத அவர்கள் சார்பாகவும், பித்தர்கள் சார்பாகவும் போராடு! உன் வருமானத்தையும், உழைக்கும் சக்தியையும் பிறருக்காக செலவிடு. யதேச்சதிகாரிகளை வெறு. கடவுள் குறித்து வாதாடாதே.

மக்களிடம் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள். படிக்காத மேதைகளிடமும், தாய்மார்களிடமும் பழகு. பள்ளியிலோ, கோவிலிலோ, புத்தகத்திலோ, உனக்குச் சொல்லப்பட்டவைகளை எல்லாம் மறுபரிசீலனை செய்.

உன் ஆன்மாவை, எதெல்லாம் அகவுரவப்படுத்துகிறதோ, அதையெல்லாம் தள்ளி விடு. இப்படியெல்லாம் செய்தால், உன் சொற்கள் மட்டுமல்லாமல், உன் உதடு, முகம், கண்கள், உன் உடலின் அசைவு ஒவ்வொன்றிலும் கவிதை வெளிப்படும்.

***

மத நல்லிணக்கம் குறைந்திருக்கும் இவ்வேளையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முகமாக, ராஜாஜி எழுதிய கடிதம் ஒன்று திகழ்கிறது.

கல்கி இதழில், 'ரகுபதி ராகவ' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை, ராஜாஜி எழுதி வந்தார். அதை படித்து வந்த ஒரு கிறிஸ்துவ வாலிபர், ராஜாஜிக்கு எழுதிய கடிதமும், அதற்கு ராஜாஜி எழுதிய பதிலும்:

ஐயா... முன் பின் அறியாத நான், என் சிறிய வேண்டுகோளுக்குப் பதில் அளிப்பீர்களென்று நம்பி, என் கோரிக்கையை, உங்கள் சமூகத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.

தங்களைப் போன்ற பேரறிஞர்களுக்குக் கடிதம் எழுத நான் பாத்திரனல்லன். ஆயினும், தங்கள் மேலுள்ள அளவற்ற மதிப்பினாலும், அன்பினாலும் தான், நம்பிக்கையுடன் இக்கடிதத்தை எழுத முன் வந்தேன்.

'கல்கி'யில் தாங்கள் எழுதி வரும், 'ரகுபதி ராகவ' கட்டுரையை, நான் ஆரம்பம் முதல் படித்து வருகிறேன். நானும், தங்களைப் போன்று, பாரத நாட்டுப் பிரஜை என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

நான் கிறிஸ்தவ சமயத்தைப் சேர்ந்தவன் என்பதை, என் பெயரைப் படித்ததுமே தெரிந்திருப்பீர்கள். தாங்கள் எழுதும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் உண்மையாகவே, என் மனதைத் தட்டி எழுப்புகின்றன.

இப்பேர்ப்பட்ட உயரிய கருத்துக்கள், எங்கள் மத நூலாகிய பைபிளிலும் காணவில்லை. ஒரு வேளை, அது என் அறியாமையோ, என்னவோ... தெரியவில்லை.

பைபிளைக் காட்டிலும், எத்தனையோ மடங்கு, சிறந்த ஆத்ம போதனையாகவே, நான் தங்கள் கட்டுரையை எண்ணுகிறேன்.

எங்கள் பைபிள், மற்ற மதத்தவர்களைக் குறை கூறுகிறது. கேவலமாகவும் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் நான் வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனாலும், தாங்கள் எழுதியது போல குறைகளை விட்டு விட்டு, நன்மையானவற்றை படிக்க பிரயாசைப்படுகிறேன்.

தாங்கள் நீடுழி காலம் வாழ்ந்து, என் போன்றவர்களுக்கு நல்ல போதனைகள் தருவதற்கும், அழிவுப் பாதையில் செல்லும் எங்களை, நல்வழிப்படுத்திக் காப்பதற்கும், இறைவன் அருள்புரியும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இதற்கு ராஜாஜியின் பதில்:

ஆசிர்வாதம். உம்முடைய கடிதம், என் உள்ளத்தைக் கரைத்தது. ஆண்டவன் உமக்கு அருள்வாராக.

பைபிளில் காணப்படும் கருத்துக்களை குறை கூற வேண்டாம். நன்றாகப் படித்துப் பார்ப்பீராயின், மிகச் சிறந்த கருத்துக்களைக் காண்பீர்.

பிறந்த குலத்தில் மதிப்பு இழக்கலாகாது.

பைபிளையும், இயேசுநாதரையும் நான் மிகவும் மதித்து வருகிறேன்; காந்தியும் மதித்தார்.

சந்தோஷமாகவும், பக்தியுடனும் இயேசுநாதர் சரித்திரத்தை லூக், மாத்யூ, மார்க் முதலிய அத்தியாயங்களில் படிப்பீராக.

ஆசியுடனும், அன்புடனும், ராஜகோபாலாச்சாரி.

***






      Dinamalar
      Follow us