தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நானா போனதும், தானா வந்ததும்! (10)

நானா போனதும், தானா வந்ததும்! (10)

நானா போனதும், தானா வந்ததும்! (10)


PUBLISHED ON : ஜன 15, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த, காலம். ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான்கு சின்னப் பயல்கள், தனியாக, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஓட்டலில், சாப்பிட்டவாறு, ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தனர். அந்த நான்கு பேரில், நானும் ஒருத்தன். எங்கள் சிற்றூரில் (ஜலகண்டபுரம்), ஹைஸ்கூல் படிப்பு வசதி அப்போது இல்லை. ஆகவே, சேலத்தில் படிப்பு.

புதிதாக ஒரு சப்ளையர், ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். 'பாவம்... சின்னப் பசங்க, ஊரு விட்டு ஊரு வந்து, தனியாக வீடு பிடித்து படிக்கிற, சமத்துக் குட்டிகள்...' என்று எங்கள் மீது தனியாக ஒரு பிரியம்.

எங்களுக்கு எது போட்டாலும், அள்ளி அள்ளிப் போடுவார். எங்கள் மேல் அசாத்தியப் பிரியம்.

அந்த ஓட்டலின் ஸ்பெஷாலிடி பாதாம் அல்வா. தினமும் மாலையில், மணக்க மணக்க பாதாம் அல்வா செய்வது, அந்த ஓட்டல் வழக்கம். குங்குமப்பூ அலங்காரத்துடன், மஞ்ச மசேலென்று பாதாம் அல்வா, எங்களை வெகுவாகவே கவரும். ஆனால், ஒரு ஸ்பூன் விலை எட்டணா. ஆகவே, வாசனை மட்டும் போதுமென்று சிறிது நேரம் அல்வாகிட்ட நின்று விட்டு திரும்புவோம்.

ஒரு நாள், அவர், 'பசங்களா, மிக்சர் ஒரு பொட்டலம் வாங்கிட்டுப் போங்களேன்; நல்லாயிருக்கும். இப்பதான் போட்டது...' என்றார்.

'ஆஹா...' என்றோம். அவர் பொட்டலம் கட்டித் தந்தார். முதலாளியிடம், 'மிக்சர் பார்சல் ஒண்ணு ஓரணா...' என்று கத்தினார். (ஓரணா என்பது, 12 பைசா.) வீட்டுக்கு வந்து பார்சலைப் பிரித்தோம். என்ன ஆச்சரியம்! உள்ளே அத்தனையும் பாதாம் அல்வா. பார்சல் தவறி வந்து விட்டது என்று மகிழ்ந்தோம். அதிர்ஷ்டத்தை நினைத்து வியந்தோம். திருப்பிக் கொடுத்து விடலாம் என்று யாருக்கும் தோன்றவில்லை. அதைப் பற்றி பேச்சே கிடையாது. யாராவது பேசியிருந்தால், அவனை சட்னி செய்திருப்போம்.

மறுநாள் அந்த சப்ளையர் சிரித்தவாறு, ரகசியமான குரலில், 'பசங்களா... நல்லாயிருந்ததா பாதாம் அல்வா?' என்று கேட்டார்.

'ஓ... தெரிந்துதான் அல்வா கட்டிக் கொடுத்திருக்கிறாரா?'

அன்றையத் தினத்திலிருந்து, மிக்சர் பார்சல், தினமும் வழக்கமாகி விட்டது.

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அல்வா மீது கொஞ்சம் மிக்சர் தூவி கட்டித் தருவார்.

முதலாளி தொட்டுப் பார்த்தால் கூட, நறநறவென்று இருக்குமல்லவா?

இந்த இனிப்பான அல்வா திருட்டில், எங்கள் உடம்பு, கொழுக் முழுக் ஆகிக் கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ, பெரிய சோதனை வந்து சேர்ந்தது.

யாரால்?

உலக மகா யுத்தத்தினால்.

மிலிட்டிரியிலிருந்து ஓர் ஆசாமி, சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டார். வந்தவருக்கு, எங்கள் ரூமில் அடைக்கலம் தரும்படி ஆகி விட்டது.

காரணம், அந்த அழகான பேர்வழி, ஓட்டல்காரரின் சொந்த மாப்பிள்ளை!

ஓட்டல்காரர் கெஞ்சினார். 'பசங்களா... அவர் உங்கள் ரூமில் கொஞ்ச நாள் இருக்கட்டும். அவர் இருப்பது, யாருக்கும் தெரியக் கூடாது. நீங்கள் வெளியே போகும் போது, அவரை வீட்டிலேயே வைத்துப் பூட்டிக் கொண்டு போய் விடுங்கள்...' என்று கேட்டுக் கொண்டார்.

ராணுவத்திலிருந்து ஓடி வந்த ஆளை ஒளித்து வைப்பது, சட்ட விரோதமான செயல். அதற்கு தண்டனை உண்டு என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. வீட்டு வாடகையில், மாப்பிள்ளையும் ஒரு பங்கு ஏற்பதாகக் கூறியதும் (இரண்டு ரூபாய்) மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டு விட்டோம். மாப்பிள்ளைன்னா, மாப்பிள்ளை அழகான மாப்பிள்ளை. ஓட்டலிலிருந்து அவருக்கு ஸ்பெஷலாக சாப்பாடு வரும்.

எங்களுக்குத்தான் பிரச்னை.

மிக்சர் பார்சலில் அல்வா கடத்தும் விஷயம் மாப்பிள்ளைக்குத் தெரிந்து விட்டால், ஓட்டல்காரருக்கும் தெரிந்து விடுமே.

நாங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருந்து, ஒருநாள் தெரிந்து விட்டது.

'இப்படியெல்லாம் திருட்டுத்தனம் நடக்கிறதா... கீழே அல்வா, மேலே மிக்சரா?' என்றார் மாப்பிள்ளை. (வந்து ஒரு மாசம் ஆகி விட்டதால், துளிர்த்துப் போய் விட்டார்!)

எங்கள் திருட்டுக் கமிட்டி அவசரமாகக் கூடியது. அடுத்த ஐந்தாவது நிமிஷம், அவருக்குப் பதில் சமர்ப்பித்தது. 'நாங்கள் அல்வாவைத்தான் ஒளித்து வைத்திருக்கிறோம். ஒவ்வொருத்தர் ஆளையே ஒளித்து வைக்கிறாங்க, தெரிஞ்சுக்குங்க மாப்பிள்ளை... இது தெரிந்தா அதுவும் தெரியும்...' என்றோம்.

அப்புறம் மாப்பிள்ளை கப்சிப். கடைசி வரை பூனைக் குட்டிதான். கொஞ்ச நாளில், வேறு ஊர் போய் விட்டார். ஒரே ஊரில் இருந்தால், பதுங்கியிருப்பது தெரிந்து விடுமே!

***

'அண்ணா' என்று அப்பாவை அழைப்பது, சில வீடுகளில் வழக்கம்; எங்கள் வீட்டிலும் அப்படியே!

சில தாய்மார்கள், மூத்த பிள்ளையை, 'தம்பி' என்பர்.

அந்தத் தம்பிக்கு, அசல் தம்பி ஒருத்தர் வந்து விட்டால், வந்தவர், 'சின்னத் தம்பி' ஆகி விடுவார்; ஒரிஜினல் தம்பி, 'பெரிய தம்பி' ஆகி விடுவார்.

அந்த வீட்டு வேலைக்காரர்கள், தங்கள் சவுகரியப்படி, பெரிய தம்பியை, 'தம்பி ஐயா...' என்றும், சின்னத் தம்பியை, 'சின்னத் தம்பி ஐயா...' என்றும் வகைப்படுத்திக் கொள்வர்.

தம்பியும், அண்ணாவும் இப்படி என்றால், 'அப்பா' இன்னும் விசேஷம்.

நம் மகன்களுக்கு மட்டுமல்ல, நம் மீது பிரியம் காட்டும் தொழிலாளர்களுக்கும் நாம், 'அப்பா' தான். நமக்கு ஒரு, 'அப்பா' அளவுக்கு வயதோ, தோற்றமோ இருக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை.

ஜன்னல் வைக்கவோ, வேறு மராமத்து வேலைக்கோ கட்டட மேஸ்திரி வந்து, அப்போது தான், முதல் தினம் பேசுகிறார். எவ்வளவு ஆகும் என்று எஸ்டிமேட் கேட்கிறோம்.

அவர் ஒன்று சொல்ல, நாமொன்று கேட்க, பேரம் கடைசியில், 14 ஆயிரம் ரூபாயில் முடிகிறது.

தொகையை மேஸ்திரி அழகாக சொல்லும் விதமே அலாதி.

'அப்பா சொன்னால் சரி... அப்பா பேச்சுக்கு நான் மறுபேச்சு பேச மாட்டேன். அப்பாக்கிட்ட நான், அட்வான்ஸ் கிட்வான்ஸ் வாங்க மாட்டேன். நாளைக்கு காலைல, 8:00 மணிக்கு, ஆளுங்களோடு வந்துடறேன். நான் புறப்படட்டுமா... அப்பா, அம்மாகிட்டே சொல்லிடுங்க...'

ஒரு நாளில், சில மணி நேரங்களில், ஒரு அப்பா - அம்மா குடும்பம் உண்டாக்கி, அதில், பாசத்தை பெய்து, நிரப்பி விட்டு போய் விடுவார் மேஸ்திரி.

நமக்கும், அவர் போட்ட, 'அப்பா' ரீங்காரம், காதில் இன்பமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நான் சென்னை வந்த புதிதில், ஒரு சிலோன்காரர் வீட்டின் கீழே, ஒண்டிக் கொண்டிருந்தேன். (ஒண்டுக் குடித்தனம்.)

வீட்டின் சொந்தக்காரர்கள் மாடியிலும், என் குடும்பம் கீழ் போர்ஷனிலும் இருந்தது. அவர்கள் பெரிய குடும்பம். அப்பா, அம்மா, நான்கு பெண்கள், இரண்டு பையன்கள்.

எங்களுடையது பால பாடம். மனைவி, நான், ஒரு குழந்தை மட்டுமே!

அவர்கள் எல்லாருக்கும், எங்கள் குழந்தையின் மீது வெகு பிரியம். ஆள் மாற்றி ஆள், மாடிக்கு தூக்கிக் கொண்டு போய் விடுவர். பயலும், புஷ்டியாக, கன்னமும், கதுப்புமாக இருப்பான்.

அவனை, அவர்கள் விசாரித்து வருகிற அழகே அழகு.

'ஜெகன் இருக்காரா? உறங்கறாரா? எழும்பிட்டாரா? உணவு எடுத்துக்கிட்டிருக்காரா? குளிச்சிக்கிட்டிருக்காரா?' எனபது போல, ஒரு வயசுக் குழந்தையை, 'அவர், இவர்' என்று, மரியாதையாகவே குறிப்பிடுவர்.

அவர்கள் வீட்டு பாட்டி, சற்று வித்தியாசமாக கொஞ்சுவார். 'வாங்கடா ஜெகன்...' என்று அள்ளிக் கொள்வார். 'ஒரு முத்தம் கொடுங்கடா ஜெகன்...' என்பதாக, 'ங்க'வும் போட்டு, 'டா'வும் போட்டுக் கொஞ்சுவார்.

'அப்பா'ன்னா என்ன, 'அடா'ன்னா என்ன? பாசமும், பிரியமும், மனிதாபிமானமும் இருந்தால் சரி.

தொடரும்.

பாக்கியம் ராமசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us