தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மகா சங்கராந்தி!

மகா சங்கராந்தி!

மகா சங்கராந்தி!


PUBLISHED ON : ஜன 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரியன், தன் பயணத்தில், மகர ராசிக்கு நகரும் நாளே, மகா சங்கராந்தி. பகல் நேரம் கூடும். சூரியன் வடக்கு நோக்கி, தன் பயணத்தை திருப்பும் நாள்.

சமஸ்கிருதத்தில், சங்கரமண என்றால், நகரத் துவங்குகிறது என பொருள். அதுவே, சங்கராந்தி என, காலத்தால் மாற்றம் பெற்றுள்ளது.

ஹிந்துக்கள், ஜெயினர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு முக்கிய பண்டிகை, சங்கராந்தி.

இனி, சிறப்பாக கொண்டாடப்படும் இடங்களை காண்போம்.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவார்:

பிரவாகமாக ஓடும் கங்கையில், குறிப்பிட்ட நேரத்தில் ஸ்நானம் செய்வர். இதற்கு, ஆயிரக்கணக்கில் மக்கள் வருவர். சூரியனை வணங்கி, நதியிலிருந்தபடியே பிரார்த்திப்பர். மாலையில் நடக்கும் சிறப்பு ஆரத்தி ரொம்பவே விசேஷம்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்:

மகா சங்கராந்தி, பஞ்சாபியர்களால், 'மகி' என அழைக்கப்படுகிறது

* குருத்துவார் மற்றும் கோவில்களில் மக்கள் கூடுவர்

* இச்சமயம் கண்டிப்பாய், பால் கஞ்சி செய்து சாப்பிடுவர். விளையாட்டு போட்டி, பட்டம் விடும் திருவிழா நிச்சயம் உண்டு

* வேர்க்கடலை, பாப்கார்ன், எள், தேங்காய் கலந்த கலவையை தயார் செய்து, தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர். இதை காணிக்கை எனவும் கூறுவதுண்டு. குறைந்தது, 10 பேருக்காவது தருவர்

* ராபி பயிர் அறுவடைக்கு பின் நடப்பதால், டிரம்ஸ், பாங்கரா நடனங்கள் நிச்சயம் இருக்கும்.

உ.பி., மாநிலம், அலகாபாத் -பிரயாக்ராஜ்:

இங்கு, கிச்சிடி ஸ்பெஷல். திருவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, தானம் தருவர். மாக்மேளா நேரம், கூட்டம் நிரம்பி வழியும்.

அசாம் மாநிலம் - கவுகாத்தி:

இங்கு, சங்கராந்தியை மாக்பிகு என அழைப்பர். இது சமயம் விருந்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு வாரம் கொண்டாடுவர். பாடல்களை பாடியும், நாட்டுப்புற நடனம், பழங்கால விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் என, அமர்க்களப்படும்

* குளிர்காலம் முடிவுக்கு வருவதையும், அறுவடை நல்லபடியாய் முடிந்ததையும் மிக சிறப்பாக கொண்டாடுவர். பழைய பொருட்களைக் கட்டி சொக்கப்பனை போல கொளுத்துவர்.

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா - கங்கா சாகர்:

மேற்கு வங்கத்தின் பர்கானா மாவட்டத்தில் உள்ள கங்கா சாகரில், கங்கை, கடலுடன் கலக்குமிடத்தில் ஸ்நானம் செய்து, கரையில் உள்ள கபில முனிவரை வணங்குவர்.

அஸ்வமேத யாகத்திற்காக அனுப்பப்பட்ட குதிரை, அங்கு தவம் செய்த கபில முனிவரால் அபகரித்து கட்டப்பட்டதாக கருதி, அவரை துன்புறுத்தினர், அரச குடுபத்தினர். தவத்தில் இருந்த கபில முனிவர், கண்களை திறக்க, அரச குடும்பத்தினர் அனைவரும் பஸ்பமாகினர்.

பிற்காலத்தில், பகீரதன் வந்து, முனிவரிடம் பரிகாரம் கேட்க, கங்கை நீர் இவர்கள் மீது பட்டால், எழுந்து சொர்க்கம் செல்வர் என்றார். பகிரங்க பிரயத்தனம் செய்து, கங்கையை கொண்டு வந்து, கடலில் கலக்கச் செய்தான், பகீரதன். அப்போது, கங்கை நீர், சாம்பலானவர்கள் மீது பட்டு, அவர்கள், எழுந்து மோட்சம் பெற்றனராம். ஆக, கங்கை கடலில் கலக்கும் இடம், கங்கா சாகர்.

ஒரு வாரம் நடக்கும் இந்த விழாவில், 20 - 25 லட்சம் பேர் பங்கு கொள்கின்றனர். அத்துடன், தங்களுக்கு நல்ல அறுவடை கிடைக்க உதவிய கங்கைக்கும் நன்றி கூறுவர்.

கர்நாடகா - பெங்களூரு:

இங்குள்ள கவிகங்காதரேஸ்வரர் கோவிலில், சங்கராந்தியன்று காலையில், ஒரு மணி நேரம் மட்டும் சூரிய கதிர்கள், கங்காதரேஸ்வரர் லிங்கம் மீது விழும். இதை தரிசிக்க பெரும் கூட்டம் கூடும்.

* உடுப்பி, கிருஷ்ணன் கோவிலில் மகா சங்கராந்தி வெகு சிறப்பாக கொண்டாடப் படும். அன்று, மூன்று தேர்களிலும் சாமி ஊர்வலம் நடக்கும்.

* ஸ்ரீரங்கபட்டனா ரங்கநாத சுவாமி கோவிலில், லட்ச தீபம் ஏற்றுவது மிகச்சிறப்பு

* கர்நாடக கிராமப்புறங்களில், மகா சங்கராந்தி சமயம், தீ மிதி விழாவும் நடக்கிறது. சில இடங்களில் யக் ஷ கான சிறப்பு நடனமும் நடக்கிறது.

மகாராஷ்டிரா:

இங்கு, சூரிய வழிபாட்டை சிறப்பாக கொண்டாடும் விதமாக, லட்டு, அல்வா, போளி, மகர் சவ்லா, பயேஷ் பின்னி போன்ற ஐட்டங்களை செய்து சூரியனுக்கு படைக்கின்றனர். பட்டம் பறக்க விடுவதும் உண்டு.

பெண்கள் ஒன்று கூடி, பசுக்கள், காளைகளை அழகாக அலங்கரித்து, பூஜை செய்யும், ஹல்தி - குங்கும் சடங்குகளை நடத்துகின்றனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா:

தமிழகம் போன்றே போகி, சங்கராந்தி மற்றும் கனுமா என்ற விழா நடத்தப்படுகிறது.

*கோபம்மா உருவத்தை ரங்கோலி கோலமாக போடுவர்

* அரிசி, பால், வெல்லம் சேர்த்து கஞ்சி செய்து, அன்று அனைவரும் சாப்பிடுவர். சேவல் சண்டை, எருது சண்டை நடைபெறும்.

ஒடிசா:

மரங்களை முக்கோணமாக அடுக்கி, எரித்து, அதை சுற்றி பாத்தி கட்டி, ஆட்டம் பாட்டம் நடத்துவர்.

அறுவடை திருவிழா, இந்திய மாநில மற்றும் சில ஆசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.* குஜராத், ராஜஸ்தான் - உத்தரராயன்* இமாச்சலம், பஞ்சாப் - லோக்ரி* நேபாளம் - தாரு பக்தார் * தாய்லாந்து - சொங்க்ரான்* லாவோஸ் - பிமாலாவ்* மியான்மர் - திங்க்யான்

- ராஜி ராதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us