PUBLISHED ON : ஜன 08, 2023

அன்புள்ள சகோதரிக்கு —
என் வயது: 52, கணவர் வயது: 56. இருவருமே பள்ளி ஆசிரியர்கள். எங்களுக்கு ஒரே மகன். கல்லுாரியில் படிக்கும் போது, உடன் படித்த, மாணவியை காதலித்தான்.
மகனின் காதல் விஷயம், எங்களுக்கு தெரிய வந்ததும், 'முதலில் படிப்பு முடியட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். உன் ஆசைக்கு என்றுமே குறுக்கே நிற்க மாட்டோம்...' என்று, உறுதி அளித்தோம்.
அதன்பின், அவனும் படிப்பில் கவனம் செலுத்தினான்.
மகனது காதலியின் அப்பா, போலீஸ் துறையில் உயர் அதிகாரி. தன் அந்தஸ்துக்கு சமமாக இல்லை என்று நினைத்தாரோ என்னவோ, மகளின் காதலுக்கு தடை போட்டார்.
முதலில், அவளது படிப்பை பாதியில் நிறுத்தினார். அடுத்து, வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளார். இந்த விஷயம் தெரிந்த என் மகன், மனம் உடைந்து போனான்.
எவ்வளவோ சமாதானப்படுத்தியும், வருத்தத்திலிருந்து மீளவே முடியாமல், ஒருநாள், ரயில் முன் விழுந்து, உயிரை விட்டான். எங்களால் கதறி அழத்தான் முடிந்தது.
மகன் இறந்த செய்தி கேள்விப்பட்ட அப்பெண், ஒரே ஒருமுறை எனக்கு போன் செய்து, தன் துக்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தாள்.
இது நடந்து சில மாதங்களுக்கு பின், அப்பெண், படிப்பை தொடர, தன் அப்பாவிடம் அனுமதி கேட்க, சந்தோஷமாக கல்லுாரிக்கு அனுப்பி உள்ளார். காலை கல்லுாரிக்கு சென்றவள், தன் காதலன் எங்கு விழுந்து இறந்தானோ, அதே இடத்தில், ரயில் முன் பாய்ந்து, உயிரை மாய்த்துக் கொண்டாள்.
காதல் போயின் சாதல் என்ற கொடுமை, இன்னும் தொடரத்தான் செய்கிறது.
கண்மூடித்தனமாக காதலிக்கும், சில காதல் ஜோடிகள் போல், எதிர்க்கும் பெற்றோர்களும், இதற்கு காரணமாகின்றனர்.
இத்தனை காலம் பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கு கிடைத்த தண்டனையா இது. வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கும் எங்களுக்கு, ஆறுதலான பதில் தேவை.
— இப்படிக்கு,
மரகதமணி ஈஸ்வரன்.
அன்பு சகோதரிக்கு —
உன்னையும், உன் கணவரையும் ஆறுதல்படுத்த சில வழிவகைகள் கூறுகிறேன்...
* பள்ளி பணியில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். கல்வியை, மாணவர்களுக்கு தாய் பறவையாய் ஊட்டி விடுவது, துக்கங்களின் சிறந்த வடிகால் ஆகும்
* மாணவ - மாணவியருக்கு காதலின் நன்மை, தீமைகளை எடுத்துரையுங்கள். தற்கொலை பிரச்னைகளை எதிர் கொள்ள தெரியாதது, கோழைத்தனம் என்பதை, அவர்களுக்கு புரிய வையுங்கள்
* கணவரின் சகோதர - சகோதரிகளின் குழந்தைகளையோ, உன் சகோதர - சகோதரிகளின் குழந்தைகளையோ, அதிகாரப்பூர்வமாய் தத்து எடுத்து, அவர்களின் அன்பு மழையில் நனையுங்கள். உங்கள் உறவுகள் தத்து கொடுக்க ஒத்துக் கொள்ளா விட்டால், அவர்களது குழந்தைகளின் ஒன்றிற்கான கல்வி செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்
* முதியோர் இல்லம் அல்லது சிறுவர் இல்லத்துக்கு ஒருநாள் சாப்பாட்டு செலவை, 'ஸ்பான்சர்' செய்யுங்கள்
* வாரா வாரம் கோவிலுக்கு சென்று வாருங்கள். துக்கத்தை ஆண்டவன் சன்னிதியில் கொட்டி விடுங்கள்
* ஆண்டுக்கு இரு காதல் ஜோடிகளின் பதிவு திருமணத்திற்கு, சாட்சி கையெழுத்து போட்டு, அவர்களுக்கு பரிசளியுங்கள்.
* கணவருக்கு நீ ஆறுதலாகவும், உனக்கு கணவர் ஆறுதலாகவும் இருங்கள்
* வாழ்க்கையை உணர்ச்சிப்பூர்வமாய் பார்க்காதீர்கள். தத்துவார்த்தமாக எடுத்துக் கொண்டு அமைதிபடுங்கள். வாழ்வில் எதை கொண்டு வந்தோம், போகும் போது எதைக் கொண்டு போகப் போகிறோம் என்ற கீதாசார வரிகளை மனதில் பதிய வையுங்கள்
* மகனின் காதலை மறுத்து, தற்கொலைக்கு தள்ளிய அப்பெண்ணின் பெற்றோரை மன்னியுங்கள். அவர்களுக்கான ஆறுதல் வார்த்தைகளை நேரிலோ, போனிலோ தெரிவியுங்கள்.
உலகம் ஒரு நடைமேடை, அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து நடிப்போம், சகோதரி!
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.
