PUBLISHED ON : ஏப் 10, 2016

நம் முயற்சியும், இறையருளும் இருந்தால், மனக்கவலையில் இருந்து விடுபட முடியும். கவலை என்பது, சாதாரண இல்லறத்தானை மட்டுமல்ல, மாபெரும் முனிவர்களைக் கூட ஆட்டிப் படைக்க கூடியது.
தன் அன்பிற்குரிய மனைவியான அகலிகையை, கல்லாக போகும்படி சபித்து விட்டோமே என நினைத்து, கவலையில் ஆழ்ந்தார் கவுதமர். தவத்தில் ஆழ்ந்தாலும், அவர் மனம் அமைதியில்லாமல் தவித்தது. இதனால், சில நேரங்களில் பித்துப் பிடித்தவர் போல், தனக்குத் தானே பேசுவார்; பின், அப்படியே சுருண்டு படுப்பார். நீராடி, அனுஷ்டானங்களைச் செய்வார்; அதை பாதியிலேயே விட்டுவிட்டு மறுபடியும் நீராடுவார். அக்னியை வளர்த்து யாகம் செய்யும் போதே, அதில் நீரூற்றி அணைப்பார். இப்படி, அறிவு கலங்கி, மனம் சலித்து, சோகத்தில் ஆழ்ந்தார்.
அதிலிருந்து விடுபட, ஒரு நாள், மனதை திடப்படுத்தி, தவத்தில் ஆழ்ந்திருந்த போது, 'கவுதமா... உன் மனக் கவலை தீர, பரிதி குடி நாட்டில் உள்ள பாப ஹரி நதிக்கரை அருகில் இருக்கும் வயலூருக்குப் போ... அங்கே தகுந்த நாளில் யாம் ஆடல் காண்பிப்போம்...' என அசரீரி கேட்டது.
அதனால், வயலூருக்குச் சென்றார் கவுதமர். அங்கே சிவலிங்கம் நடுநாயகமாக எழுந்தருளி இருக்க, சிறிது தொலைவில் ஓங்கி வளர்ந்திருந்த, 'பத்ராச்வத்தம்' எனும் அரச மரத்தின் அடியில் தவம் செய்யத் துவங்கினார். இறைவன் அருளால், தன் மனக்கவலை நீங்க, 'ஞானவாபி' எனும் தீர்த்தத்தை உருவாக்கினார். அதிலிருந்து நீர் எடுத்து சிவபெருமானை அபிஷேகித்து, வணங்கி, தவத்தைத் தொடர்ந்தார்.
அவர் தவத்தில் மகிழ்ந்த இறைவன், புலித்தோல் உடுத்தி, கங்கையைச் சடையில் தரித்து, பிறை அணிந்து, மான், மழு ஏந்தி, ஞான அக்னியை ஏந்தி, நாதம் எழுப்ப, காலை உயர்த்தி, நர்த்தனம் ஆடி, ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளினார். பின், 'கவுதமா... உன் தவத்திற்காக, யாம் இங்கே ஆடல் காண்பித்தோம்; உனக்கு வேண்டியதைக் கேள்...' என்றார் சிவபெருமான்.
'இறைவா... சிதம்பரத்தில் கனகசபையில், பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்களுக்கு திவ்யமான ஆனந்தத் தாண்டவம் காட்டி அருளியதைப் போல, அடியேனுக்கும் இத்தலத்தில் ஆனந்தத் தாண்டவம் காட்டியருளினாய். அத்துடன், பிரம்மானந்தம் அளிக்கும் உங்கள் கல்யாணசுந்தர கோலத்தையும் காட்டியருள வேண்டும். என் மனத்துயர் நீக்கி, எனக்கு அருள் செய்ததைப் போன்று, இங்கு வந்து உன்னை வழிபடும் அடியார்களின் மனத்துயர் நீங்க வேண்டும்...' என வேண்டினார் கவுதமர்.
அவ்வாறே அருள்பாலித்தார் சிவபெருமான்.
மனக்கவலை தீர்க்க, இறைவன் நேரில் தோன்றி, கவுதமருக்கு அருள் புரிந்த அத்திருத்தலம் திருச்சுழி. இன்றும் திருச்சுழிக்கு வந்து தன்னை வழிபடுவோரின் மனக்கவலையைத் தீர்த்து அருள்புரிகிறார்.
ஞானத்தை உலகெங்கும் வாரி வழங்கிய ரமண மகரிஷி அவதரித்ததும் இங்கு தான்!
பி.என்.பரசுராமன்
திருவாசகம்!
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன்று அறியாதார்
சிறவே செய்து வழி வந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே!
விளக்கம்: சிவபெருமானே... முழுமையாக உன்னை அடைந்த அடியார்கள், உன்னைத் தவிர வேறு எதையும் அறியாதவராகி, நல்லதையே செய்து, நல்வழியில் நடந்து, உன் திருவடியை அடைந்தனர். அது அறியாத, பொய்மை நிறைந்தவனாகிய நானோ, உன்னை விட்டு விலகியே இருந்தேன். அதனால், உன் அன்பைப் பெறுவதற்கு, திறமையில்லாத தன்மையையும் பெற்றேன்.
கருத்து: அன்புடையார், இறைவன் அருளைப் பெறுகின்றனர்; அது இல்லாதவர்கள், பொய்மை வசப்பட்டு, இறைவனை விட்டு விலகியே நிற்கின்றனர்.

