PUBLISHED ON : செப் 24, 2023

செப்., 30 - மகாளய பட்சம் ஆரம்பம்
மகாளய பட்சம் எனப்படும் முன்னோர் வழிபாட்டு காலத்தில், நாம் ஒரு விசேஷமான கோவிலுக்கும் சென்று வர வேண்டியுள்ளது.
விநாயகருக்கும், முருகனுக்கும் ஞானப்பழமான மாங்கனியை அளிக்க, 'உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்கள்...' என, சிவன், ஒரு போட்டி வைத்தார் அல்லவா!
மயிலேறி முருகன், உலகத்தை வலம் வர, கொஞ்சம் கூட சிரமப்படாமல், 'அம்மையப்பன் தான் உலகம்...' என, அவர்களை வலம் வந்து, ஞானப்பழத்தை வென்று விட்டார், விநாயகர்.
இந்த போட்டி நடந்த இடம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கடிக்குளம் கற்பகேஸ்வரர் கோவிலில் தான் என்கிறது, தல வரலாறு. இதனால், இங்குள்ள விநாயகருக்கு, மாங்கனி பிள்ளையார் என, பெயரிடப் பட்டுள்ளது. கேட்டதை தரும் கற்பக மரம் போன்றவர் என்பதால், இவருக்கு கற்பகேஸ்வரர் என்றும் பெயர்.
சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவன், கார்த்திகாசுரன் எனும் அசுரன். அவனது கடுமையான தவத்தை மெச்சி, அஷ்டமாசித்திகள் எனும், எட்டு வகை மகிமைகளை கொடுத்தார், சிவன்.
இதன்படி, அவன் கூடு விட்டு கூடு பாய முடியும். தன் உருவத்தை சுருக்கவும், விரிக்கவும் முடியும். இன்னும் பல அதிசயங்களைச் செய்ய முடியும்.
தனக்கு வரமளித்த சிவனுக்கு, எட்டு பட்டைகளுடன் சிலை வடித்து பிரதிஷ்டை செய்தான், கார்த்திகாசுரன். பின்னால் வந்த மன்னர்கள், இங்கு கோவில் எழுப்பினர். சம்பந்தர், இங்கு வந்து பாடியதால், பாடல் பெற்ற சிவத்தலமாகவும் ஆனது. அஷ்டமாசித்திகளை வழங்கியதால், அஷ்டமியன்று இவ்வூரில் வழிபடுவது விசேஷம்.
அதுமட்டுமின்றி, சிவனுக்கு எங்குமில்லாத வகையில் வெண்ணெய் நைவேத்யம் செய்யப்படுகிறது. ராமபிரான் இத்தலத்துக்கு வந்துள்ளார். அவருடன் அனுமனும் வந்ததாகவும், ருத்ராம்சமான அவர், சிவனுக்கு, தனக்குப் பிடித்தமான வெண்ணெயை நைவேத்யம் செய்திருக்கலாம் என்பதும் ஒரு கருத்து.
இங்குள்ள கற்பகவிநாயகர் குளத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம். இங்கு பிதுர்க்கடன் செய்த, அந்தணரது தந்தையின் அஸ்தி, பூக்களாக மாறி விட்டதாம்.
இதன் அடிப்படையில், மகாளய காலத்தில், செப்., 30- முதல், அக்., 14 வரை, இவ்வூருக்கு வந்து தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். மகாளய காலத்தின் அஷ்டமி திதியன்று வழிபடுவது, மிக மிக சிறப்பு. மாங்கனி பிள்ளையாரான இவரை, மகாளய பிள்ளையார் என்று அழைப்பதும் சாலச்சிறந்தது.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி, 27 கி.மீ., இங்கிருந்து தொண்டியக்காடு வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில், 26 கி.மீ., துாரத்தில் கடிக்குளம் உள்ளது.
இவ்வாண்டு மகாளய பட்ச தர்ப்பணத்துக்கு, கடிக்குளம் புறப்படுவோமா!
தி. செல்லப்பா
