தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன்!

இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன்!

இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன்!


PUBLISHED ON : பிப் 03, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்பெல்லாம் தெருவோரங்களில், குப்பைகள் தான் கிடக்கும். ஆனால், இப்போதோ, பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர் களும் கூட, குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர். கிடக்கின்றனர் என்பது கொஞ்சம் மரியாதையான வார்த்தை. உண்மையில் வீசியெறியப்படுகின்றனர்.

பொதுமக்களை பொறுத்தவரை, வீசியெறியப் பட்ட முதியவர்கள், ரத்த காயமின்றி இருந்தால், ஒரு விநாடி நின்று பார்த்து, 'ஐயோ பாவம்...' என கூறி செல்வர். அதே வயதானவர்கள், அருவெருப்பான தோற்றத்துடனோ, ரத்த காயத்துடனோ, ஆடைகள் களைந்த நிலையிலோ, நோய் தாக்கிய நிலையிலோ இருந்தால், திரும்பி கூட பார்க்காமல், வேக வேகமாக நடப்பர். இன்னும் அந்த முதியவர்கள் மன நோயாளியாக இருந்து விட்டால் போதும், அந்த பக்கமே வராமல், எதிர் திசையில் ஓட்டமும், நடையுமாக செல்வர்.

நாட்டில் அந்த அளவிற்கு, உயிர்கள் மீது, 'அன்பு' பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், எல்லாரும் அப்படியில்லை. ஒரு சிலருக்குள் இன்னமும் மனிதத்தன்மை மரித்து போய்விடாமல்தான் இருக் கிறது. அவர்களில் ஒருவர் தான், கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த, 35 வயதாகும் மகி என்கிற மகேந்திரன்.

கடந்த 2009ல், இவரது சகோதரி ஒருவர், திடீரென உடல்நலம் குன்றி ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, ஒருவரும் உதவி செய்ய வரவில்லை.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, மனம் பாதிக்கப்பட்ட மகேந்திரன், அன்று முதல் ரோட்டில் யார் ஒதுங்கிக் கிடந்தாலும், உடனே என்ன ஏது என்று கேட்டு, அவர்களை உரிய உறவினர்களிடமோ, காப்பகத்திலோ, மருத்துவ மனையிலோ சேர்த்து வருகிறார்.

வீதியோரம் கிடப்பவரை பார்த்ததும், முதலில் அவருக்கு நல்ல உணவு கொடுத்து, தெம்பு ஏற்படுத்துவார். பின், ஆணாக இருந்தால், முடிவெட்டி, முகச்சவரம் செய்து, நன்றாக குளிப்பாட்டி, புது உடை வாங்கிக் கொடுப்பார். பார்ப்பவர்கள், 'கொஞ்ச நேரத்திற்கு முன் ரோட்டில் கிடந்த ஆளா இது!' என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஆளை மாற்றி விடுவார் .

அதன் பின், அவர்கள் அருகில் அமர்ந்து விசாரிப்பார். முடிந்தவரை அவர்களை, அவர்களது உறவினருடன் சேர்த்து விடுவார். முடியாத போது, காப்பகங்களிலும், சிகிச்சை தேவை எனில், மருத்துவமனையிலும் சேர்த்து விடுவார்.

காப்பகத்தில் சேர்த்தாலும் சரி, மருத்துவ மனையில் சேர்த்தாலும் சரி, சேர்த்ததோடு தன் கடமை முடிந்ததாக கருதாமல், அவ்வப்போது போய் பார்த்து, ஒரு உறவினராக, நண்பனாக நடந்து கொள்வார்.

இறந்து போனதாக கருதி, பதினெட்டு வருடங்களாக நினைத்து நினைத்து அழுத மகனை கொண்டு போய், அவரது குடும்பத்தின் முன் நிறுத்தி, அந்த குடும்பத்தின் நீண்ட கால வேதனை கண்ணீரை, ஆனந்த கண்ணீராக மாற்றியுள்ளார். மன நோயாளிகள் பலர், இவரது அன்பால், மன நோய் நீங்கபெற்று, தற்போது திருமணம் முடிந்து, நல்லபடியாக இருக்கின்றனர். தெருவோரம் வீசியெறியப்பட்ட பாட்டிகளும், தாத்தாக்களும், இப்போது காப்பகத்தில், உற்சாகமாக வலம் வருகின்றனர்.

மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, சிகிச்சை பலனில்லாமல் இறந்து போய், 'அநாதை பிணங்கள்' என முத்திரை குத்தப்படுபவர்களின் உடல் களை, வலியப்பெற்று, அவர்களது உடலை, மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் வருகிறார்.

தீபாவளி, பொங்கல் என்றால், உறவினர்களை அழைப்பது போல, அர வாணிகள், உடல் ஊனமுற்ற வர்கள், முதியவர்களை அழைத்து, விருந்து கொடுத்து, அவர்களை மகிழ்விப்பதன் மூலம், குடும்பத்துடன் தானும் மகிழ்ந்து வருகிறார்.

'ஈர நெஞ்சம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, இத்தகைய தொண்டாற்றி வரும் மகேந்திரனின் இந்த பணிக்கு, பெரும் பலமாக இருந்து உதவுபவர்கள், பாலசந்திரன், பரிமளா வகீசன், தபசுராஜ், சுரேஷ் கணபதி, கணேஷ் குமார், மணிமேகலை, வ”ந்திரா, மோகன சுந்தரம், செண்பகம், பழநியப்பன் ஆகிய நண்பர்கள். இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி தோள் கொடுக்கும், அன்னை தெரசா காப்பகம், பிரபஞ்ச அமைதி சேவாலயம், சாய்பாபா முதியோர் இல்லம், அன்பாலயம், சாய் முதியோர் இல்லம், கருணாலயம் ஆகிய காப்பகங்களும்தான்.

இவரால் நலமடைந்து பலனடைந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. இப்போது கோவை வீதியில் யாரேனும் விழுந்து கிடந்தால், 'கூப்பிடு மகேந்திரனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமடைந்து விட்டார்.

இப்படி யாரேனும் விழுந்து கிடந்தால் மட்டும் தான் கூப்பிட வேண்டும் என்பது இல்லை. ஒரு வார்த்தை மகேந்திரனை வெறுமனே கூப்பிட்டு வாழ்த்தினால் கூட போதும். இன்னும் ஆயிரம் பேரை காப்பாற்றும் தெம்பும், திராணியும் அவருக்கு கிடைத்து விடும். மகேந்திரனை வாழ்த்த விரும்புபவர்கள், 9843344991 மற்றும் 9600400120 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். ***

மு. ராஜசேகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us