PUBLISHED ON : டிச 25, 2011

டிச., 25 - சாக்கியர் குருபூஜை!
'இறைவா... ஒரு சிலரை மட்டும், ஆயிரக்கணக்கில் பணம் கட்டியோ, பதவியை அடிப்படையாகக் கொண்டோ முன்வரிசையில் நிற்க வைத்திருக்கிறாய். இன்னும் சிலர், கோவில் உண்டியலில் தங்கக் கட்டிகளை வாரி இறைக்கின்றனர்; ஆயிரம் ரூபாய் கட்டுகளை காணிக்கை ஆக்குகின்றனர். நான் இந்த ஒரு ரூபாயைக் கூட போடுவதா, வேண்டாமா என்று கைகளில் வைத்து திருப்பி, திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு தேங்காயும், பூவும் வாங்கும் தகுதியைக் கூட கொடுக்கவில்லையே... என்னை மட்டும் ஏன் இப்படி படைத்தாய்? உனக்கேன் இந்த இரட்டை மனம்?' என்று, இறைவனைக் குறை கூறாதவர்கள் மிகவும் குறைவு. ஆனால், பக்தியென்பது படையலிலோ, பூவிலோ, பூஜையிலோ இல்லை. தன் மேல் கல்லைத் தூக்கி எறிந்து வழிபட்டவருக்கு கூட, அருள் செய்தார் சிவன். அந்த பக்தர் தான் சாக்கியர். அவரது கதையைக் கேளுங்கள்...
திருச்சங்கமங்கை எனும் தலத்தில், வேளாண் மரபில் அவதரித்த சாக்கியரின் நிஜமான பெயர் தெரியவில்லை. பிறவாநிலை பெற வேண்டுமானால், எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது குறித்த சந்தேகம் ஏற்பட்டது. இதற்காக, பல நூல்களைக் கற்க முடிவு செய்தார். அந்த கிராமத்தில் அதற்குரிய வசதி இல்லை. எனவே, அவர் அருகிலுள்ள காஞ்சிபுரத்திற்கு சென்று, அங்குள்ள வல்லுநர்களிடம் அதுபற்றி படித்தறிய விரும்பினார். அப்போது, புத்த மதத்தின் ஆதிக்கம் இருந்த நேரம். புத்த மதத்தினரை, 'சாக்கியர்' என்று அழைப்பர். சைவரான சாக்கியர், புத்த மதத்தினரைப் போல வேடமிட்டு, காஞ்சிபுரம் சென்றார். பல நூல்களைக் கற்றறிந்தார்.
சைவ நூல்களில் தான் முக்தியைக் குறித்த பல தகவல்கள் இருந்தன. எனவே, சைவத்தைப் பின்பற்றுவது என்ற முடிவுக்கு வந்தார். சாக்கியர் வேடத்தில் இருந்தபடியே, சிவபெருமானை மானசீகமாக பூஜித்து வந்தார். 'சிவாயநம' எனும் மந்திரம், அவர் உள்ளமெல்லாம் ஒலித்தது. ஒருமுறை, காட்டு வழியே அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது; அதைக் கவனிப்பார் யாருமில்லை. அதைக் கண்டதும் உள்ளம் உருகினார்.
'சிவபெருமானே... உன்னைக் கவனிக்க ஆள் இல்லையே என வருந்தாதே! இனி, நான் உனக்கு அபிஷேகம் செய்வேன், மலர் தூவி பூஜை செய்வேன்...' என்றவராய், அபிஷேகத்திற்காக தண்ணீர் தேடி சுற்றுப்புறங்களில் அலைந்தார்; தண்ணீர் கிடைக்கவில்லை. மலர்களாவது கிடைக்குமா என தேடிப் பார்த்தார்; ஒன்றுமே இல்லை.
சுற்றிலும் சிறுசிறு கற்கள் தான் கிடந்தன.
'இறைவா... இங்கே நீரும், மலரும் இல்லை; ஆனால், கற்கள் இருக்கின்றன. இந்தக் கற்களை உன் மீது வீசி, அபிஷேகம் செய்வேன். சிறுசிறு கற்கள் உன் மேல் படும் போது சற்று வலிக்கலாம். ஆனாலும், என்ன செய்வேன்! அதை, நீ தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்...' என, சிறுசிறு கற்களைப் பொறுக்கி, சிவலிங்கம் மீது எறிந்தார்.
அதன் பிறகு, தினமும் அந்த லிங்கம் இருக்கும் இடம் சென்று, கல்லெறிந்து வழிபட்ட பிறகே சாப்பிட ஆரம்பித்தார். காட்டில் தண்ணீர், மலர் இல்லை. வீட்டில் இருந்தே பூ, தண்ணீர் கொண்டு செல்லலாமே என்ற கேள்வி எழும். அப்போது, சிவ வழிபாட்டுக்கு அன்றைய மன்னன் தடை விதித்திருந்தான். அதனால், பாதுகாப்பு கருதி, கல்லெறிந்து வழிபடுவதையே வழக்கமாக்கிக் கொண்டார் சாக்கியர்.
ஒருமுறை, இறைவன் அவரைச் சோதித்தார். ஏதோ, காரணத்தால் ஞாபக மறதியை ஏற்படுத்தி, சிவபூஜைக்கு முன் சாப்பிடும்படியான நிலையை உருவாக்கி விட்டார். சாப்பிட்ட பின் தான், சிவபூஜை செய்யவில்லை என்ற ஞாபகம் வந்தது. சிவலிங்கத்தை நோக்கி ஓடினார். கண்ணீர் விட்டுக் கதறி, மன்னிப்பு கேட்டார். கல்லெறிந்து வழிபட்டார். அப்போது, பார்வதி சமேதராக சிவன் காட்சியளித்தார். அவருக்கு பிறவாநிலையை வழங்கினார்.
பக்திக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணமிருப்பவர்கள், கோவிலுக்கு வாரி வழங்கலாம். மற்றவர்கள் எளிமையான பக்தியை செலுத்தினாலும், இறைவனால் ஏற்கப்படும் என்பதை சாக்கியரின் வரலாறு நமக்கு காட்டுகிறது. இனியேனும், வரிசையில் சென்று, இறைவனை வணங்குவதை பெருமையாக நினையுங்கள். மகேசனுக்கு தேவை பணமல்ல, மனம்!
***
தி. செல்லப்பா
