PUBLISHED ON : செப் 25, 2011

செப்.28 - நவராத்திரி ஆரம்பம்!
சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரின் ஒட்டு மொத்த சக்தியை, அன்னை பராசக்தி என்கிறோம். அவளே, வித்யா சக்தியாக இருந்து கல்வியைத் தருகிறாள். தனதான்யம் தரும் லட்சுமியாக அருள் செய்கிறாள். துர்க்கை, பார்வதி ஆகிய பெயர் கொண்ட ஆற்றல் நாயகியாக திகழ்கிறாள். எனவே தான், நவராத்திரி காலத்தின் முதல் மூன்று நாட்கள் சரஸ்வதி, அடுத்து லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் துர்க்கையை வணங்குகிறோம்.
அம்பாள், பல சமயங்களில் பூமியில் அவதரித்திருக்கிறாள். தன் தந்தையாக முனிவர் பெருமக்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். திருமகள் தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென, பிருகு மகரிஷி தவமிருந்தார். அதை ஏற்ற அந்த தெய்வத் திருமகள், அவரது புத்திரியாக அவதரித்தாள். இதனால், அவளுக்கு தந்தையின் பெயரால், 'பார்கவி' என்ற பெயர் ஏற்பட்டது. மலைமகள் தனக்கு மகளாக வேண்டுமென காத்யாயன முனிவர் ஆசைப்பட்டார். அம்பாள் அவரது பெயரால், 'காத்யாயினி' என்று பெயர் பெற்றாள்.
அம்பாள் குழந்தையாய் பிறந்து, மனிதனுக்கு வழிகாட்டுகிறாள். மனிதர்களும் குழந்தைகளைப் போலவே வாழ வேண்டும் என அவள் அறிவுறுத்துகிறாள். அதற்கு காரணம் உண்டு. குழந்தைகள் எதன் மீதும் நிரந்தரமாக விருப்பம் கொள்வதில்லை. முதலில் யானை பொம்மையுடன் விளையாடும், சற்று நேரத்தில் அதை வீசி எறிந்து விட்டு, பந்தை எடுத்துக் கடிக்கும். அதுவும் சிறிது நேரம் தான். மீண்டும் கரடி பொம்மையை தூக்கிக் கொள்ளும். எதன் மீதும் மனிதன் பற்று வைக்கக் கூடாது என்பது இதன் அடிப்படைத் தத்துவம்.
குழந்தை வளர்ந்து பெரிதாகி விட்டால், பற்றும், பாசமும் வந்து விடுகிறது. மனைவி, கணவன், மக்கள், உறவுகள் என பந்த பாசம் பெருகிப் போகிறது. இதிலிருந்து மீளும் வழி தெரியாமல் மனிதன் தவிக்கிறான். அரைகுறை ஆசையுடன் மரணமடைந்து, மீண்டும் பிறக்கிறான்; அதே சூழலில் உழல்கிறான். இவற்றையெல்லாம் விடுத்து, தெய்வ சிந்தனையுடன் வாழ வேண்டும், நாலு பேருக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என்பதையே குழந்தை தத்துவம் உணர்த்துகிறது.
பல கிராமங்களில் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறாள் சரஸ்வதி. கிராம மக்கள் சரஸ்வதியை பேச்சி, பேச்சியாயி என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்கின்றனர். காளியின் அம்சத்தை, 'பிடாரி' என்கின்றனர். பீடோபஹாரி என்ற சொல்லே பிடாரி ஆயிற்று. இதற்கு பீடைகளை நீக்குபவள் என்று பொருள். நவராத்திரி காலத்தில் கிராமங்களிலுள்ள அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து அருளை வேண்டுகின்றனர்.
நவராத்திரியில் வைக்கப்படும் கொலுவும், தெய்வ நிலைக்கு மனிதன் <உயர வேண்டும் என்பதையே காட்டுகிறது. புழு, பூச்சி, மிருகம், மனித பொம்மை, மகான்கள், தெய்வங்கள் என படிக்கட்டுக்கு படிக்கட்டு, உயர்நிலை காட்டப்படுகிறது. புழு, பூச்சி, மிருக நிலையைக் கடந்தே மனித நிலைக்கு வந்துள்ளோம். உலகிலேயே <உயர்நிலை இதுதான். மனிதப் பிறவியைப் பயன்படுத்தி, பிறவிப் பிணியறுக்கும் வகையில் கடைத்தேற முயல வேண்டுமே தவிர, மீண்டும் பூச்சி, புழு நிலைக்கு போய் விடக் கூடாது. மனித நிலையில் மகானாக வேண்டும். மகானாகி தெய்வத்தை அடைந்து விட வேண்டும்.
நவராத்திரியின் தத்துவம், மனிதனாய் பிறந்தவன் தெய்வ நிலையை எட்டுவதே. திருப்தி என்பதற்கும், பரமதிருப்தி என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 'பரம' என்ற சொல், 'பூரணம்' என்பதைக் குறிக்கிறது. சத்தியம் என்பது இவ்வுலகில் கடைபிடிக்க வேண்டியது. பரம சத்தியம் என்பது பிரம்மம் எனப்படும் இறைவனையே குறிப்பது. அந்த இறைவனைத் தாயாக பார்க்கிறது ஆன்மிகம். அந்தத் தாய்க்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்றெல்லாம் வெவ்வேறு பெயர் சூட்டி அழைக்கிறது. நற்செயல்களை மட்டுமே செய்து, அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து, தெய்வ நிலையை எட்டுவதே நவராத்திரி விரதத்தின் நோக்கம்.
தெய்வ நிலையை எட்ட முயற்சிப்போமா, இன்று முதல்!
***
- செல்லப்பா