PUBLISHED ON : மார் 29, 2020

எந்த ஒரு தவறையும், முதல் முறை செய்யும்போது, சற்று உறுத்தும். செய்த பின், 'இப்படி செய்துட்டியே நியாயமா, தருமமா...' என்று, தன் நெஞ்சே தன்னை கேள்வி கேட்கும்.
அந்த நடிகையும், கணேசனும் தனியான இடத்தில் சந்தித்துக் கொண்டதும், பஞ்சும், நெருப்பும் பற்றிக் கொண்டது.
தன்னை நம்பி வந்த மனைவிக்கு துரோகம் செய்கிறோம் என்ற உறுத்தல், கணேசனை வருத்தியது.
வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கவும், மனைவி பாப்ஜியை, நேருக்கு நேர் பார்க்கவும், பேசவும் மனம் கூசியது. உடலில் பட்ட களங்கம், ஒரு கறையாக தோன்றியது.
ஒரு முடிவுக்கு வந்தவராக, வீட்டுக்குள் உறுதியுடன் கால் வைத்தார்...
'இனியொரு முறை, புஷ்பவல்லியை திரும்பியும் பார்ப்பதில்லை, பேசுவதில்லை. அப்படியே பார்க்க நேர்ந்தாலும், 'என்னை மறந்து விடு...' என்று, சொல்லிவிட வேண்டியது தான்...' என்று, சபதம் செய்து கொண்டார்.
ஆனால், விதி வேறு விதமாக விளையாட காத்திருந்தது. விடாது தொடர்ந்தார், புஷ்பவல்லி. இவருக்கும், அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது.
அதே ஆண்டில், முக்குறு கொடுக்கலு என்ற தெலுங்கு படத்தில், குணச்சித்திர வேடத்தில் தோன்றினார், ஜெமினி கணேசன். அதனால், தெலுங்கு மொழியை, புஷ்பவல்லியிடம் கற்றுக் கொண்டார்.
ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி காதல், 1952ல், கூடுதல் வேகத்துடன் துவங்கியது.
புஷ்பவல்லியை மறந்து விட அவர் முடிவு செய்த போதும், அது, அத்தனை சுலபமாக இல்லை. மறக்க நினைக்கும் போது தானே, அந்த முகம், நினைவுகள் முன் வந்து நிற்கும்.
ஒரு நான்கைந்து நாட்கள், நடிகையை பார்க்காமல், நடிப்பில், விளையாட்டில், வீட்டில் பொழுதை கடத்தினார்.
'சுகுணா விலாஸ் சபா'வில், டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தார், கணேசன். ஆட்டம், சுவாரஸ்யமாக போய் கொண்டிருந்த நேரத்தில், காவலாளி வந்து, 'அய்யா... உங்களைப் பார்க்க, ஒரு அம்மா வந்திருக்காங்க...' என்றார்.
'என் மனைவி, என்னை தேடி இங்கே வரவேண்டிய அவசியமில்லையே... அவளுக்கு அப்படியென்ன இக்கட்டோ...' என்று பதட்டமாக, வியர்வையைக் கூட துடைக்காமல் வேகமாக வந்து பார்த்தார்.
எதிரே இருந்த காருக்குள், ஆந்திரத்து அழகு புயல், புஷ்பவல்லி.
நடிகையின் அகன்ற அழகிய கண்களில், தவிப்பும், வேதனையும், செல்ல கோபமும், காதலும் இருந்தது. கலங்கிய கண்களில், ஏக்கமும் எட்டிப் பார்த்தது.
'இவளா... இங்கேயும் தேடி வந்து விட்டாளா...' என்று நெளிந்தார்.
அதே நேரத்தில், அவர் அருகில் வந்தார், நடிகை.
'நீ என்ன இங்கே...'
'உங்களை பார்க்கத்தான்...'
'நான், உன்னை பார்க்க விரும்பவில்லை; கிளம்பு...' என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை, அப்படியே அழுத்தி, உள்ளே தள்ளினார்.
அப்போது, அவர்களை பலர் கவனித்து கொண்டிருந்ததால், இப்போது ஏதாவது சொன்னால், பதிலுக்கு பதில் சீறி வரும் வாக்குவாதம், பிரச்னை. எனவே, இந்த இடத்தில் வேண்டாம் என்று முடிவு செய்தார்.
'வாங்க... காரில் ஏறுங்க...' என, புஷ்பவல்லி கூற, கணேசனோ பேசாமல் யோசனையில் நிற்க, 'நீங்க வரலைன்னா, நான் இங்கிருந்து போக மாட்டேன்...' என்று, அழுத்தமாக கூறினார்.
கணேசன் ஏறிக்கொள்ள, சீறி பாய்ந்தது, கார்.
'இவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது...' என்று, அவர் யோசித்து கொண்டிருக்கும்போதே, 'ஸ்பீட் பிரேக்' போல, வார்த்தைகளை துாக்கிப் போட்டார், புஷ்பவல்லி.
'நீங்க, எனக்கு வேண்டும். என்னை பார்க்க வரலேன்னா, பார்க்க தவிர்த்தீங்கன்னா, நான் தற்கொலை செய்து கொள்வேன். இது நிச்சயம்...' என்று முடிவான குரலில் சொன்னதைக் கேட்டு, ஆடிப்போனார், கணேசன்.
'அப்படியெல்லாம் பேசாதே, உன்னை விட்டு நான் எங்கேயும் போய் விடவில்லை. ஏதோ வேலையில் இருந்து விட்டேன்...' என்ற ஆறுதலான வார்த்தைகள், நடிகையின் காதில் தேனாய் பாய்ந்தது.
அதைக் கேட்டதும், அவரின் தோளில் சாய்ந்து, விம்மினார், புஷ்பவல்லி.
அணைத்து, தேற்றினார். மீண்டும் காதல் வேகமெடுத்தது.
ஒருநாள், கணேசனை சந்தித்த போது, பேரதிர்ச்சியான செய்தியை கொளுத்தி போட்டார், புஷ்பவல்லி.
'நான், உங்கள் குழந்தையை சுமக்கிறேன். இது, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்...' என்றார்.
பிறக்கப்போகும் அந்த குழந்தைக்கு, ஒரு முழுமையான அப்பாவாக தான் இருக்க முடியாது என்பதை உணர்ந்து, எத்தனையோ முறை அக்கருவை கலைக்கச் சொல்லியும், புஷ்பவல்லி அதை ஏற்கவில்லை. அக்., 10, 1954ல், ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி தம்பதியரின் மூத்த மகளாக, ரேகா பிறந்தார்.
அவரை வளர்த்து ஆளாக்கியது, புஷ்பவல்லி தான். ரேகாவுக்கு, தந்தையின் பாசம் கிடைக்கவில்லை. காரணம், நான்கே ஆண்டுகளில், ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி உறவு முறிந்து போனது.
அதற்கு யார் காரணம் என்பதை தாண்டி, காதல் மன்னன் ஜெமினிக்கு, புதிய காதலி கிடைத்தாள்.
— தொடரும்
சபீதா ஜோசப்
