PUBLISHED ON : மார் 29, 2020

பகட்டு காட்டுபவரா நீங்கள்?
என் உறவினர் ஒருவர், மகன் திருமணத்தை, ஆடம்பரமாக நடத்த ஆசைப்பட்டார். அதன்படி, திருமண அழைப்பிதழ், மிக ஆடம்பரமாக அச்சடிக்கப்பட்டிருந்தது. அட்டையில், மணமக்கள் மற்றும் தாய், தந்தை படம் எல்லாவற்றையும் விட, மணப்பெண்ணின் கழுத்தில் ஏராளமான நகைகள் இருக்கும் புகைப்படத்தை பெரிதாக அச்சிட்டிருந்தனர்.
திருமணம் முடிந்த சில வாரங்களுக்கு பின், ஒருநாள் இரவு, அவர் வீட்டில், திருடர்கள் புகுந்து விட்டனர். அதை பார்த்த, அப்பகுதி இளைஞர்கள், அவர்களை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர், அவர்களிடம் விசாரித்தபோது, 'பழைய பேப்பர் கடையில், இந்த திருமண பத்திரிகை இருந்தது. அட்டை படத்திலிருந்த, புகைப்படத்தை பார்த்ததும், திருட வேண்டும் என்ற ஆசை மனதில் எழுந்ததால், திருட வந்தோம்...' என்றனர்.
அந்த இளைஞர்கள் மட்டும் வரவில்லை என்றால், கண்டிப்பாக அனைத்து நகைகளும் திருடு போயிருக்கும்.
நம்மில் பலரும், விழா முடிந்ததும், திருமண பத்திரிகையை, பழைய பேப்பர் கடை அல்லது குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம். அப்படி போடப்படுவதை, சில விபரீத நபர்கள் படிக்க நேரிடுகிறது. அப்போது, அதில் உள்ள பகட்டு விளம்பரம் மற்றும் விலாசம், அவர்களை திருடத் துாண்டுகிறது. இதற்கு, இச்சம்பவம் ஓர் எடுத்துக் காட்டு.
ஆகவே, நண்பர்களே... பகட்டு விளம்பரம், வெட்டி பந்தா எல்லாம், ஏதாவது ஒரு வழியில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.
மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.
நடமாடும் முதியோர் உணவகம்!
தோழியை பார்க்க, அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவள் வீட்டு எதிரே இருந்த மரத்தடியில், 'நடமாடும் முதியோர் உணவகம்' என்று, விளம்பர பலகை மாட்டிய தள்ளுவண்டியில், நடுத்தர வயதினர் இருவர், பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
உணவகத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கவே, தோழியிடம் விசாரித்தேன்.
'விலைவாசி விண்ணை முட்டும் இக்காலத்தில், கணவன் - மனைவி இருவரும் உழைத்தால் தான், ஓரளவுக்காவது குடும்ப செலவை சமாளிக்க முடியும். இந்த சூழலில், வீட்டிலிருக்கும் முதியோருக்கு பிடித்தமான, உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை செய்து தரும் வாய்ப்பே அமைவதில்லை.
'அதை நிவர்த்தி செய்யும் வகையில் தான், தள்ளுவண்டி தம்பதியர், ஒவ்வொரு நாள் வியாபாரம் முடிந்ததும், இங்குள்ள வீட்டு பெரியவர்களுக்கு தேவைப்படும் உணவு பட்டியலை பெற்று, மறுநாள் அவற்றை தயார் செய்து கொடுக்கின்றனர்...' என்றாள்.
வியாபார நோக்கம் மட்டுமின்றி, முதியோரின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்து சேவையாற்றும் தம்பதியரை, மனதார பாராட்டினேன்.
எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.
அரசு ஊழியரின் அலட்சியம்!
அண்மையில், சென்னையில் உள்ள, அரசு துறை அலுவலகத்திற்கு, ஒரு வேலையாக சென்றிருந்தேன். அப்போது, சம்பந்தப்பட்ட பிரிவில் பணிபுரியும், இரண்டு கிளார்க்குகள் இருக்கையில் இல்லை. ஆனால், அவர்களுக்குரிய இருக்கையின் மேல் உள்ள மின் விசிறிகள் இயங்கிக் கொண்டிருந்தன.
தேவையில்லாமல் மின்சாரம் வீணாகிறதே என்ற எண்ணத்தில், மின் விசிறியின் இயக்கத்தை நிறுத்தி, அவர்களுக்காக காத்திருந்தேன்.
அரை மணி நேரத்திற்கு பிறகு வந்த அவர்கள், மின் விசிறி ஓடாததை கண்டு அதிர்ந்தனர்.
நான் தான் மின் விசிறியை நிறுத்தினேன் என்பதை அறிந்து, 'காச் மூச்' என்று கத்தியதோடு, அதற்கான காரணத்தையும் கூறினர்.
அதாவது, அவர்கள், டீ குடிக்க வெளியே போனால், மேலதிகாரி, பிரச்னை பண்ணுவாராம். ஆதலால், மின் விசிறி இயங்கிக் கொண்டிருந்தால், துாரத்திலிருந்து பார்த்து, வேலை செய்கின்றனர் என, நினைப்பாராம்.
இது எப்படி இருக்கு... அதற்காக, அரை மணி நேரம், மின்சாரத்தை வீணாக்குவது எந்த விதத்தில் நியாயம்!
மனம் நொந்தபடியே அங்கிருந்து வெளியேறினேன்.
வி. சீனிவாசன், சென்னை.
