
ஏப்., 2 - பங்குனி பிரம்மோற்சவம்
காளி, துர்க்கை ஆகிய காவல் தெய்வங்கள், ஊரின் வடக்கு திசையில் அமைக்கப்படுவது மரபு. கோவில்களிலும் இவர்களது திசை, வடக்காகவே இருக்கும். ஆனால், மதுரையில் மட்டும் வித்தியாசம். ஊரின் கிழக்கு எல்லையில், எல்லைக்காளி, துர்க்கை என்று பெயர் கொண்ட காவல் தெய்வத்தின் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. துர்க்கம் என்றால், கோட்டை. அதாவது மக்களை அரண் போல் பாதுகாப்பவள் இவள். 'பிடாரி' என்று கூட இவளை சொல்வதுண்டு. 'பீடோபஹாரி' என்ற சொல்லின் சுருக்கமே இது. பீடைகளை நீக்குபவள் என்று பொருள்.
மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள், போருக்கு செல்லும் முன், வெற்றி பெற இவளை வணங்கியுள்ளனர். பிற்காலத்தில், நாட்டில் மழை பொய்த்தபோது, மன்னர்கள் இவளிடம் மழை வேண்டி பூஜைகள் செய்தனர். மழைக்கு, மாரி என்ற இன்னொரு சொல்லும் உண்டு. இதன்பின், துர்க்கையாக இருந்தவள், மாரியம்மனாக பெயர் மாற்றம் பெற்று விட்டாள். இவளது கோவில் எதிரே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பம் அமைந்தது. அது முதல் தெப்பக்குளம் மாரியம்மன் என்று பிரபலமாகி விட்டாள்.
மாரியை மழை தெய்வமாகக் கொண்ட புராணக்கதை உண்டு. ஜமதக்னி மகரிஷியின் மனைவி ரேணுகாதேவி. ஒருசமயம், அவள் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, ஒரு கந்தர்வனின் அழகை ரசித்தாள். எனவே, ஜமதக்னி, அவளது பத்தினித் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டதாக சொல்லி, தன் மகன் பரசுராமன் மூலம், அவளது தலையை வெட்டினார். அதன்பின், பரசுராமர், தந்தையின் ஆசியுடன் தாயை உயிர்ப்பித்தார். ஜமதக்னி அவளை மழை தரும் தெய்வமாக இருந்து, உலகிற்கு அருளும்படி வேண்டினார். அவளே, மாரியம்மனாக வணங்கப்படுகிறாள்.
தெப்பக்குளம் மாரியம்மன், சிரித்த கோலத்தில், கைகளில் பாசம், அங்குசம் ஏந்தி காட்சி தருகிறாள். இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடக்கி வைத்திருக்கிறாள். வலது காலை அம்பாள் மடக்கிய கோலத்தில் இருந்தால், அவளுக்கு சக்தி அதிகம். அறிந்தே தவறு செய்தவர்கள் இவளிடம் வந்தால், மன்னிப்பு கிடைக்காது.
மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழா நடக்கும் முன், முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் இருக்கின்றனர். மாரியம்மனின் அபிஷேக தீர்த்தத்தை, மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத்தில் வைக்கின்றனர். கண் நோய், அம்மை நோய் உள்ளவர்களுக்காக தீர்த்தம் வாங்கிச் செல்கின்றனர். இதை பருகினால், நோய் நீங்குவதாக நம்பிக்கை. தோல் வியாதி உள்ளவர்கள், அம்பிகைக்கு உப்பு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
பங்குனியில் அம்பாளுக்கு நடக்கும் பத்து நாள் பிரம்மோற்சவம் விசேஷமானது. தினமும் அம்பாள் பவனி உண்டு. உலகில் நியாயம் தழைக்க வேண்டும், தேவையான மழை பொழிய வேண்டும், வைகை பெருகி ஓட வேண்டும் என்ற பொதுநோக்கு உள்ளவர்கள், அம்பாளை வணங்க வாருங்கள். நல்லருள் புரிவாள்.
***
தி. செல்லப்பா

