sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கல்யாணச் சந்தை!

/

கல்யாணச் சந்தை!

கல்யாணச் சந்தை!

கல்யாணச் சந்தை!


PUBLISHED ON : ஜூன் 30, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கரபாண்டியனைப் பார்க்க, அவர் நண்பர் வந்திருந்தார்.

''வா சக்தி,'' என அவரை வரவேற்று, சோபாவில் அமரச் செய்த சங்கரபாண்டியன், மனைவி பத்மாவதியிடம் காபி போடச் சொல்லி, நண்பனின் அருகில் அமர்ந்தார்.

''சொல்லு சக்தி. ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கே, என்ன விஷயம்? எல்லாம் சவுக்கியம் தானே?''

''எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருக்குப்பா. என் பையனுக்கு பொண்ணு பாத்துட்டு வந்திருக்கேன்,'' என்றார் சக்திவேல்.

''அடடா...என் பையனுக்கும் நிச்சயமாகி இருக்கு. ரெண்டு பேருக்கும் சேர்த்து, ஒரே முகூர்த்தத்தில கல்யாணம் வெச்சுக்கலாம் போலிருக்கே,'' என்று சொல்லி சிரித்தார் சங்கரபாண்டியன்.

காபி கொண்டு வந்து கொடுத்தாள் பத்மாவதி.

நணபர்களின் பேச்சு தொடர்ந்தது...

''கொடுக்கல், வாங்கல் எல்லாம் எப்படி?''

''கொடுக்கல் எல்லாம் ஏது? எல்லாமே வாங்கல்தான்,'' என்றார் சக்திவேல்.

''வாஸ்தவம் தான். நாம, பையனைப் பெத்தவங்களாச்சே?''

இருவரும் சிரித்தனர்.

அவர்களுடைய பேச்சு பிடிக்காததால், சட்டென அங்கிருந்து நகர்ந்து, சமையலறை பக்கம் போனாள் பத்மாவதி.

''சரி... என்ன பேசி முடிவு செய்திருக்க?'' மறுபடியும் கேட்டார் சங்கரபாண்டியன்.

''பொண்ணுக்கு, ஐம்பது பவுன் நகை. ரெண்டு லட்சம் ரொக்கம், ஒரு பைக். இது போக, சீர் வரிசைப் பட்டியல் தனியா எழுதிக் கொடுத்திருக்கேன். எல்லாத்துக்கும், 'ஓகே' சொல்லிட்டாங்க,'' என்றார் சந்தோஷமாக சக்திவேல்.

ஆச்சரியமாக இருந்தது சங்கரபாண்டியனுக்கு.

''பரவாயில்லையே...என் பையனுக்கு, வெறும் இருபது பவுன் நகையும், ஐம்பதாயிரம் மட்டுமே ரொக்கம் தர்றாங்க. நீ நல்ல இடமா பார்த்து புடிச்சிருக்கியே?'' என, வாய் பிளந்தார்.

''விரலுக்கு தகுந்த வீக்கம்.''

''நீ என்ன சொல்றே?'' புரியாமல் வினவினார் சங்கரபாண்டியன்.

''அதாவது, என் பையன் அசிஸ்டென்ட் மேனேஜரா இருக்கான். உன் பையனோ, வெறும் கிளார்க் தானே! அதுக்கேத்த மாதிரி தானே எல்லாம் அமையும்!''

இப்போது சங்கரபாண்டியனுக்குப் புரிந்தது.

''ஓ...பதவிக்கு ஏத்தாப்ல தான் கொடுக்கல், வாங்கல் அமையும்ங்கற!''

''கரெக்ட் சங்கரா. கல்யாணச் சந்தையில், இப்பெல்லாம் வியாபாரம் ரொம்பவும் கறாரா நடந்துக்கிட்டிருக்கு.''

''வியாபாரமா!'' குழப்பமாய் புருவங்களை சுருக்கினார் சங்கரபாண்டியன்.

சக்திவேல் தொடர்ந்தார்.

''பையன் எந்தப் பணியில், எந்தப் பதவியில், எவ்வளவு சம்பளத்தில் இருக்கிறானோ, அதுக்குத் தகுந்தாப்புல தான் வரதட்சணை, சீர் செனத்தியை முடிவு செய்து வெச்சிருக்காங்க. பொண்ணு வீட்டாரும், அதைக் கொடுக்க தயங்கறதில்லை.''

''ஏன்?''

''ஏன்னா... கொஞ்சம் அவங்க யோசிச்சா, அடுத்தவன் முந்திக்கிறானே...''

''அப்ப, பொண்ணைப் பெத்தவங்களோட பாடு திண்டாட்டம் தான்.''

''நிச்சயமா. அப்படியிருந்தும் கூட, பொண்ணை எப்பாடுபட்டாவது கட்டிக் கொடுக்கணுங்கிறதுல பெரும் போட்டியே நிலவுதே.''

''எது எப்படியோ, நமக்கு ஆண்டவன் பொம்பளப் பிள்ளைய கொடுக்கலை.''

நண்பர்கள் சந்தோஷமடைந்தனர்.

காபி குடித்து, எழுந்து விடை பெற்றார் சக்திவேல்.

மிகவும் சந்தோஷமாகவும், இனிப்புடனும் வீடு திரும்பினான் சிவராஜ்.

''அப்பா... இந்தாங்க ஸ்வீட், என்னை ஆசீர்வதியுங்க,'' என்று சாஷ்டாங்கமாய் காலில் விழுந்து வணங்கியவனைத் தூக்கி நிறுத்திய சங்கரபாண்டியன், ''மொதல்ல விஷயத்தைச் சொல்லுப்பா,'' என்றார்.

''செக்ஷன் ‹ப்பர்வைசரா எனக்குப் பதவி உயர்வு கிடைச்சிருக்குப்பா. சம்பளம் அப்படியே ரெண்டு மடங்கு. அதோடு நிறைய அலவன்ஸ், ப்ளஸ் பெனிபிட்ஸ்.''

மகன் சிவராஜ் சொல்ல சொல்ல, மகிழ்ச்சியின் எல்லையை தொட்டார் சங்கரபாண்டியன்.

அம்மாவிடமும் ஆசி பெற்றான் சிவராஜ்.

''சரிப்பா, என் நண்பர்களை பார்த்துட்டு வந்திடுறேன். எமகாதக பசங்க. விடமாட்டானுங்க,'' என்றவாறு சிவராஜ் வெளியேற, மனைவி பத்மாவதி பக்கம் திரும்பினார் சங்கரபாண்டியன்.

''அடியே...பார்த்தாயா என் புள்ளைய? என்னையும் தலை நிமிர வெச்சுட்டான்,'' என்றார்.

''மகாலட்சுமியாட்டம் பார்த்துட்டு வந்தோமே, ஒரு பொண்ணு. அவளோட அதிர்ஷ்டம்ன்னு தான் நினைக்கிறேன்,'' என்றாள் பத்மாவதி.

'சுர்'ரென கோபம் பீறிட்டுக் கிளம்பியது சங்கரபாண்டியனுக்கு.

''அடியே...என்ன சொல்றே நீ? கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி இருக்கான் என் பையன். நீ என்னடான்னா அதிர்ஷ்டம் அது, இதுன்னு உளறிக்கிட்டு... இன்னமும், நம் வீட்டு வாசப்படியை மிதிக்காத பொண்ணுக்கு வக்காலத்து வேறு வாங்கறயா... உனக்கு வெக்கமா இல்லை?''

எகிறினார்.

''ஏதோ... என் மனசுல பட்டதைச் சொன்னேன். அதுக்கு ஏங்க இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க?''

சடுதியில் சகஜ நிலைக்குத் திரும்பிய சங்கரபாண்டியன், ''இதோ பாரு பத்மா...நேத்து வரை, ஒரு சாதாரண கிளார்க்கா இருந்த நம்ம பையன், இன்னைக்கு பதவி உயர்வு பெற்றிருக்கான். சக்திவேல், தன் பையனுக்கு எக்கச்சக்கமாய் அள்ளிக்கிட்டு வந்திருக்கான். அது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. இப்ப எனக்கு எவ்வளவு நிம்மதியாவும், சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு தெரியுமா?'' என்றார்.

''நீங்க என்ன சொல்றீங்க?'' பதறினாள் பத்மாவதி.

''சிவராஜோட மார்க்கெட் ரேட், இப்ப கூடிடுச்சி. அவனோட பதவிக்கு தகுந்தாப்ல நானும், சக்திவேல் பேசி முடிச்சதுபோல் பேசப் போறேன்.''

திடுக்கிட்டாள் பத்மாவதி.

''நம்மப் பையனுக்கு ஏற்கனவே பேசி முடிச்சாச்சுங்க.''

''இப்ப அதுக்கு என்ன? பேசித் தானே இருக்கோம்; தாலி கட்டலையே...''

''என்னங்க நீங்க...கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க...'' என்று கவலைப்பட்டவள், மகன் வீடு திரும்பியதும், அவனிடம் விஷயத்தை கூறி, ''சிவா...நீயாவது இவருக்கு புரிய வையேன்,''என்றாள்.

''அப்பா சொல்றதுல என்னம்மா தப்பு? என்னோட ஆபீஸ்ல, எனக்குக் கீழ வேலை செய்யிற சாதாரண உதவியாளருங்களே பொண்ணு வீட்டுல இருந்து எவ்வளவு அள்ளிக்கிட்டு வர்றாங்க தெரியுமா? பதவிக்கு தகுந்த மாதிரிதாம்மா பொண்ணு வீட்டாரும் கொடுக்கறாங்க. இன்னிக்கு மார்க்கெட் அப்படி.''

''அப்படி சொல்லு சிவா. உன் அம்மாவுக்கு வெளி உலகம் தெரிய மாட்டேங்குது,'' என்றார் சங்கர பாண்டியன்.

'அப்பனும், புள்ளையுமாச் சேர்ந்து திருமணம் என்ற புனிதமான பந்தத்தை, ஷேர் மார்க்கெட் ரேஞ்சுக்கு கொண்டுப் போயிட்டாங்களே...' என ஆதங்கப்பட்டாள் பத்மாவதி.

''நீங்க என்ன சொல்றீங்க?'' என, அதிர்ந்தார் பெண்ணின் தந்தை.

''என் பையனோட அந்தஸ்துக்கு ஏத்தாப்ல கொஞ்சம் மாறுதல் செய்யச் சொல்றேன். அவ்வளவு தான்.''

''நிச்சயமாயிட்டப் பின் நீங்க இப்படி பேசுறது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க.''

''வெறும் நிச்சயதார்த்தம் தானே நடந்திருக்கு... அதுக்குப் போய் ஏன் இப்படி அலர்றீங்க?''

பெண்ணின் தந்தை செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டு நிற்க, கல்யாணப் பெண்ணே முன் வந்து, ''அப்பா, பேராசை பிடிச்ச இவங்க வீட்டுக்கு மருமகளா போக எனக்கு விருப்பமில்லை,'' என்று தைரியமாகச் சொல்லிவிட்டாள்.

'அப்பாடா' என, நிம்மதியுடன் அங்கிருந்து அகன்றார் சங்கரபாண்டியன்.

அடித்து, பிடித்து தரகரை வைத்து எப்படியோ சிவராஜுக்கு வேறு ஒரு வரனைப் பார்த்து விட்டார் சங்கரபாண்டியன். ஐம்பது பவுன் நகை, ரெண்டுலட்சம் ரொக்கம், ஒரு பைக். நண்பன் சக்திவேல் தன் பையனுக்குப் பேசியிருக்கும், அதே அளவு சீர் வரிசை.

இரு வீட்டாரும் அமர்ந்து பேசினர்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை முடிப்பதில் தீவிரமாக இருந்தார் சங்கரபாண்டியன்.

ஆனால், பெண்ணின் தந்தை பழனிநாதன், ''ரெண்டு பேரோட ஜாதகத்தையும் வைத்துப் பார்த்துட்டேன். ரெண்டு மாசத்துக்கு பின்தான் நல்ல முகூர்த்தம் வருது,'' என்றார்.

''ஓ...அப்படியா? பரவாயில்லை. நிச்சயம் செய்துடுவோம். ரெண்டு மாசம் கழித்து முகூர்த்தத்தை வெச்சுக்குவோம்,'' என்று சங்கரபாண்டியன் கூற, பழனிநாதனும் ஒப்புக் கொண்டார்.

ஒரு மாதம் ஓடியிருக்கும். அலுவலகத்தில் நடந்த பணம் கையாடல் விவகாரமொன்றில், வகையாய் சிக்கினான் சிவராஜ்.

உண்மையில், அவனுக்கும் அந்த விவகாரத்திற்கும் நேரிடையாகத் தொடர்பு இல்லை என்றாலும், அந்த விஷயம் அறிந்திருந்தும், 'நமக்கெதுக்கு வம்பு' என மேலிடத்திற்கு புகார் செய்யாமல், ஒதுங்கி இருந்த குற்றத்திற்காக, சிவராஜையும் வேலையை விட்டுத் தூக்கியது நிர்வாகம். இடிந்து போனான் சிவராஜ்; ஒடிந்து போனார் சங்கரபாண்டியன். என்றாலும், தன் மனநிலையை வெளியே காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டார்.

''கவலைப்படாதே சிவா...வேறு வேலை உனக்கு கிடைக்காமலா போய்விடும்? மனசைத் தளர விடாதே. உன் வேலை போன விஷயத்தை யாரிடமும் சொல்லாதே. முக்கியமா பெண் வீட்டாருக்குத் தெரியக் கூடாது. எனக்கு தெரிஞ்ச எத்தனையோ பெரிய ஆளுங்க இருக்காங்க. அவங்க மூலமா கூடிய சீக்கிரத்துல, உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்றேன். அதுவரைக்கும் நீ தைரியமா இரு.''

அப்பாவின் ஆறுதலான பேச்சைக் கேட்டு, 'சரிப்பா' என்றானே தவிர, இந்தக் காலத்தில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது சிவராஜ் அறியாதது அல்ல. 'திடுதிப்'பென்று பழனிநாதன் வருவார் என்று சிறிதும் எதிர்பார்க்காத சங்கரபாண்டியன், ''அடடா...வாங்க சம்பந்தி,'' என வரவேற்றார்.

''ஒரு முக்கியமான விஷயம். அதான் பேசிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்.''

என்னமோ, ஏதோ என்ற பதைபதைப்பில், 'உட்காருங்க' என்றவாறு நாற்காலியைச் சுட்டிக் காட்டினார் சங்கரபாண்டியன். அவர் அமர்ந்ததும், தானும் அமர்ந்து கொண்டார்.

''சொல்லுங்க, என்ன விஷயம்?''

''சிவராஜுக்கு வேலை போயிடுச்சாமே?''

எதிர்பாராத திடீர் தாக்குதல். வெலவெலத்துப் போனார் சங்கரபாண்டியன்.

''அது வந்து...அது,'' தடுமாறினார்.

''உண்மையை சொல்லுங்க.''

''வேறு வேலைக்கு ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரம் கிடைச்சிடும். நீங்க கவலைப்படாதீங்க.''

''மிஸ்டர் சங்கரபாண்டியன்...இன்றைய மார்க்கெட் நிலவரப்படி உங்க மகன் ஒரு செல்லாக் காசு. வரதட்சணையே வேண்டாம்ன்னு சொன்னாலும், வேலையே இல்லாத பையனுக்கு, எவனுமே பொண்ணு தர மாட்டான். அதனால, நீங்க வேற இடம் பார்த்துக்குங்க.''

அதிர்ந்தார் சங்கரபாண்டியன்.

''நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகு, நீங்க இப்படி பேசறது நல்லா இல்லீங்க.''

''வெறும் நிச்சயதார்த்தம் தானே நடந்திருக்கு... அதுக்குப் போய் ஏன் இப்படி அலர்றீங்க... பையன் ஒண்ணும், என் பொண்ணு கழுத்துல தாலி கட்டிடலையே...''

இந்த டயலாக்கை, எங்கோ கேட்ட மாதிரி இருக்க, அது சில நாட்களுக்கு முன், தான் பேசியது என்று நினைவுக்கு வந்தது.

''இதோ பாருங்க சம்பந்தி...இன்றைக்கு இருக்கிற நிலைமை நாளைக்கு இருக்காது. தயவு செஞ்சு கல்யாணத்தை மட்டும் நிறுத்திடாதீங்க, தயவு செய்து,'' காலில் விழாத குறையாகக் கெஞ்சினார் சங்கரபாண்டியன்

''மொதல்ல நீங்க என்னை, சம்பந்தின்னு கூப்பிடுறதை நிறுத்துங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும், என் பொண்ணு, உங்க வீட்டுக்கு மருமகளா வரமாட்டா. நடக்க இயலாத காரியத்தை பற்றிப் பேசாமல், மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளை கவனிங்க,'' என்று சொல்லிவிட்டு, சடாரென எழுந்து வெளியேறினார் பழனிநாதன்.

சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல் இருந்தது.

ஆணவமும், அகங்காரமும் பிடித்து, கற்பனைக் குதிரையில் ஏறி பறந்து கொண்டிருந்த சங்கர பாண்டியனுக்கு ஏற்பட்ட சரியான சரிவு இது. சமையறையிலிருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பத்மாவதியின் இதழோரம் புன்னகை அரும்பியது.

இப்போதாவது கணவரும், மகனும் பேராசைப் பேயின் பிடியிலிருந்து விடுபடுவர் என்ற நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.

ஏனெனில், சிவராஜ் வேலை இழந்த சேதியை போன் செய்து, பழனிநாதனுக்கு தெரிவித்ததே அவள் தானே!

***

மலர்மதி






      Dinamalar
      Follow us