
திருக்கார்த்திகையன்று, இறைவனை, அக்னி வடிவில் வழிபடுகிறோம். இதனால் தான், அக்னி சாட்சியாக திருமணம் நடத்துகின்றனர். அதாவது, கடவுளே சாட்சியாக இருந்து, திருமணத்தை நடத்துவதாக ஐதீகம். அந்த அக்னிக்கே திருமணம் நடக்கும் அதிசயம், கோயம்புத்துார் கோனியம்மன் கோவிலில் நடக்கிறது.
கோவையின் காவல் தெய்வமான இவள், திருமணத்தடை நீக்குபவளாக விளங்குகிறாள். இவளை சாட்சியாக வைத்து, நிச்சயதார்த்த வைபவத்தை கோவிலில் நடத்துகின்றனர்.
கொங்கு நாட்டை, கோவன் என்ற மன்னர் ஆட்சி செய்த காலத்தில், பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் துன்பம் கண்டு வருந்தியவர், அம்பிகையை வழிபட்டார். பின், மழை பொழிந்து, மக்களின் வாழ்வு செழித்தது. அருள் புரிந்த அம்மனுக்கு, ஊருக்கு வெளியே கோவில் அமைத்து, கோனியம்மன் என, பெயரிட்டார்; மக்கள், அவளை குலதெய்வமாக ஏற்றனர். 'கோனி' என்றால், அரசி!
பிற்காலத்தில், இப்பகுதியை ஆண்ட, இளங்கோசர், சேர மன்னரின் படையெடுப்பால், நகரின் மையத்தில் கோட்டை எழுப்பி, கோவிலை அங்கு மாற்றினார்.
கோனியம்மனின் எட்டு கைகளில், சூலம், உடுக்கை, வாள், கிளி, அக்னி, கேடயம், மணி மற்றும் கபாலம் உள்ளன. உக்கிர வடிவில், அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
இடது காதில், தோடு, வலது காதில், குண்டலம் அணிந்திருக்கும் இவளின் தலையில், நெருப்பு மகுடமாக (ஜ்வாலா கிரீடம்) இருக்கிறது. வலக்காலை மடித்து, பீடத்தில் குத்திட்டும், இடக்காலால், அசுரனை மிதித்தபடியும் இருக்கிறாள். சன்னிதி எதிரே, சிங்க வாகனம் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது.
இங்கு நிச்சயதார்த்தம் நடத்துவது விசேஷம். ஒரு கூடையில், உப்பை நிரப்பி, அதன் மீது மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைத்து, கோனியம்மன் சாட்சியாக, திருமணத்தை உறுதிப்படுத்துகின்றனர்.
ஆதிகோனியம்மன் சிலை மார்பளவு உள்ளது. பஞ்சமுக விநாயகர், பத்து கைகளுடன் காட்சி தருகிறார். நவக்கிரக சன்னிதியில், கிரகங்கள் மனைவியருடன் வீற்றிருக்கின்றனர்.
மாசி மாத திருவிழாவில், சிவனுக்கும், அம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடக்கும். அன்று, யாக குண்டத்தில் எரியும் அக்னியை சிவனாகக் கருதுவர். அக்னி குண்டம் முன் வைக்கப்பட்டுள்ள தீர்த்த கலசத்தின் மீது திருமாங்கல்யத்தை வைப்பர். அதை எடுத்து அம்பிகைக்கு அணிவிப்பர். அக்னி வடிவில் இருக்கும் சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம்.
கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகிலுள்ள, பெரிய பஜார் தெருவில், பூம்புகார் நகரில், கோவில் உள்ளது.
தி. செல்லப்பா

