sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 08, 2019

Google News

PUBLISHED ON : டிச 08, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உறவும், நட்பும் மலர...

நண்பர் ஒருவர், ரத்த தானம் செய்வதை, ஒரு சமூக சேவையாக செய்து வருகிறார். சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் அவசரத்திற்கு ரத்தம் தேவைப்படும்போது, உடனே, நண்பரை தொடர்பு கொள்ளும் அளவுக்கு பிரபலமானவர்; 'ஏபி' என்ற, அபூர்வ ரக ரத்த வகையை கொண்டவர்.

சமீபத்தில், விபத்துக்குள்ளாகி, மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த ஒருவருக்கு, ரத்தம் தேவைப்படவே, நண்பருக்கு அழைப்பு வந்தது.

மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, ரத்தம் தேவைப்பட்ட அந்த நபர், நண்பரின் தந்தைக்கு, தொழில் முறை போட்டியில் பகையாளி; குடும்ப ரீதியாக, ஜென்ம விரோதியாகவும் இருப்பவர்.

இவருக்கா ரத்த தானம் செய்யப் போகிறோம் என்ற கேள்வி மனதில் எழுந்தது. இருப்பினும், பகைவரே என்றாலும், ஒரு உயிரை காப்பாற்றுவது தான் மனிதாபிமானம் என்ற உயர்ந்த நோக்கத்துடன், ரத்தம் கொடுத்து திரும்பினார்.

தீவிர சிகிச்சைக்கு பின், பூரண குணமாகி வீடு திரும்பினார், அவர். ரத்தம் கொடுத்தது யார் என்பதை, தன் குடும்பத்தார் மூலம் அறிந்து, நெகிழ்ந்துள்ளார்.

ஜென்ம விரோதியாக இருந்த நண்பரின் வீட்டுக்கு, குடும்ப சகிதமாக போய், 'இனி, நமக்குள், தொழில் முறையிலோ, வேறு எந்த வகையிலோ துளியும் பகை வேண்டாம். தொழில், பணம் என, எல்லாவற்றையும் விட, மனிதாபிமானமே உயர்ந்தது என்பதை உணர்த்தி விட்டீர்; மிக்க நன்றி...' என, கண்ணீர் தளும்ப கூறியுள்ளார்.

ஆபத்தான சூழ்நிலைகளில், பகையாளியானாலும், வன்மத்தை வெளிப்படுத்தாமல், மனிதமும், மன்னிக்கும் குணத்துடன் நடந்து கொண்டால், மனித உறவுகளுக்குள் நட்பு மலரும். இதற்கு, இச்சம்பவம், சிறந்த உதாரணமாக அமைந்தது.

— ஆர். ரவிகுல ரகுவர்மன், தஞ்சாவூர்.

குழந்தைகள் முன், மனைவியை குறை சொல்லாதீர்!

சமீபத்தில், என்னுடன் படித்த தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். தோழியின் மகளுக்கு, வயது, 27. கம்பெனி ஒன்றில், மாதம், 20 ஆயிரம் ஊதியம் பெறுகிறாள். அவளுக்கு, மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தோழியிடம், 'ஏதாவது வரன் வந்ததா, எப்போது திருமணம்...' என, வினவினேன்.

'என் மகளுக்கு வரும் மாப்பிள்ளை, 70 - 80 ஆயிரம் சம்பளம் பெறுபவராக இருக்கின்றனர். அவர்கள் அளவுக்கு, சம்பளம் உயரும்போது, திருமணம் செய்து கொள்வதாக, மகள் கூறுகிறாள்...' என்றாள், தோழி.

'என் தந்தையை விட, சம்பளம் குறைவாக வாங்குகிறார், தாய். நான் சிறு வயதாக இருக்கும்போது, என் தந்தை, 'நீ என்னை விட குறைவான சம்பளம் வாங்கும்போதே திமிராக பேசுகிறாய்...' என, தாயை குத்திக்காட்டி, இழிவான வார்த்தைகளால், மனசை புண்படுத்துவார்.

'எனக்கும், இந்த நிலை வரவேண்டாம். மேலும், எனக்கு வயதானாலும் பரவாயில்லை. அதிக ஊதியம் பெறும்போது, மணம் செய்து கொள்கிறேன்...' என்று, வருத்தத்துடன் கூறினாள், தோழியின் மகள்.

'அவளுக்கு எப்போது சம்பளம் உயர்வது, திருமணம் நடப்பது. அதற்குள் வயதாகி விடுமே...' என்று வருத்தப்பட்டேன்.

பெற்றோரே... குழந்தைகள் முன், ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசுவதை தவிருங்கள். அது, உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

அமோகி, உளுந்துார்பேட்டை.

வாழ்வு ஒருமுறைதான் வாய்க்கும்!

குழந்தை பருவத்திலிருந்தே என்னுடன் பழகி வந்த தோழி, இயல்பிலேயே நகைச்சுவை உணர்வும், இனிய சுபாவமும், யாரையும் புண்படுத்தாத மலரினும் மெல்லிய உள்ளம் கொண்டவள்.

அவள், எங்களுடன் இருந்தாலே, அந்த இடம் கலகலப்பாக அமைந்து விடும். குடும்ப கவலைகளை மறந்து, நாங்களும், அவளுடன் உரையாடி மகிழ்வது வழக்கம்.

சில நாட்களுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் அவளை சந்தித்த போது, வயது கூடியது போன்ற தோற்றத்துடன், களையிழந்து, சோகமாக காணப்பட்டாள்.

'எப்போதும் கலகலவென்று இருப்பாயே... என்ன ஆயிற்று...' என்று கேட்டதும், அவள் சொன்ன விஷயம் கேட்டு, மிகுந்த அதிர்ச்சியானேன்.

திருமண விழாவிற்கு சென்றிருந்தவளை, அவளின் புகுந்த வீட்டு உறவினர் ஒருவர், 'நீ, பணி ஓய்வு பெற இன்னும் எத்தனை ஆண்டு இருக்கிறது...' என்று கேட்டிருக்கிறார்.

'இன்னும், 10 ஆண்டு இருக்கிறது...' என்று, தோழி கூற, 'ரொம்ப அதிக ஆண்டுகள் இருக்கிறதே... அதுவரை நீ இருப்பாயா?' என்று கேட்டிருக்கிறார்.

சமீபத்தில் தான், மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து, உடம்பை தேற்றிய அவளுக்கு, உறவினர் இப்படி கேட்டது, மன ரீதியாக பாதித்து விட்டது.

இப்போது, யார் என்ன ஆறுதல் சொல்லியும் கேட்காமல், தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்றும், தான் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டே போகப் போவதாகவும் புலம்பி வருகிறாள்.

வாசக நண்பர்களே... நாளை நடப்பதை யார் அறிவார்... நம்மால் மற்றவருக்கு உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் மன, உடல் நலத்தை கெடுக்காமல் இருக்கலாம் அல்லவா?

வாழ்வது ஒருமுறை தான்; நல்லதையே நினைப்போம், பேசுவோம்!

- சங்கமித்ரா நாகராஜன், கோவை.






      Dinamalar
      Follow us