
தமிழ் சினிமாவில், ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி ஆட்டம் ஆடுபவர்களை, 'அயிட்டம் நடிகையர்' என, அழைப்பது வழக்கம்.
தமிழ் சினிமாவுக்கு சிலுக்கு வரும்போது, நிறையவே கவர்ச்சி நடனங்கள் ஆடி ஓய்ந்திருந்தார், ஜெயமாலினி. அது, ரசிகர்களுக்கும் திகட்டி போயிருந்தது.
புதிதாக ஆட வந்த, சிலுக்கை, அனைவருக்கும் பிடித்து போனது. கவர்ச்சி நடிகைகளுக்கும், கதாநாயகியருக்கும் மேலான, வணிக ரீதியான மரியாதையையும், கவுரவத்தையும், முதன்முதலில், தென்னக சினிமாவில் உண்டாக்கினார், சிலுக்கு.
கடந்த, 1981 - 84 வரை, சிலுக்கின் அரைகுறை ஆடை நடனங்கள் தான், பெரும்பாலும், கோடம்பாக்கத்தின் கல்லா பெட்டிகள் நிறைய காரணமாக இருந்தன.
கதாநாயகியரிடம் இல்லாத கம்பீரமும், கவர்ச்சியும், துணிவும், சிலுக்கிடம், உடலோடு உடலாக ஒன்றி கிடந்தன. அன்றைய கதாநாயகியர், மொத்த படத்துக்கும் வாங்கும் சம்பளத்தை விட, அதிகமாக, தன் ஒரே நடனத்துக்கு வாங்கினார்.
தமிழகமெங்கும் சிலுக்கு பெயரால், புது புது ரசிகர் மன்றங்கள் உருவாகின.
மதுரையில், சிலுக்கு ரசிகர் மன்றம் ஒன்று, தனி கொடியே பறக்க விட்டது. மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த கொடியின் மத்தியில், கருப்பு நிறத்தில் இதயம் போன்று, ஒரு சின்னமும் பதிக்கப்பட்டிருந்தது.
மதுரை ரசிகர்கள், தம் கைகளில், சிலுக்கின் உருவத்தை பச்சை குத்தி திரிந்தனர்.
மதுரை லாட்டரி சீட்டு கடைக்காரர் ஒருவர், 10 லாட்டரி சீட்டுகளை மொத்தமாக வாங்குவோருக்கு, சிலுக்கின் கவர்ச்சி படத்தை பரிசாக வழங்கினார்.
தேவர் பிலிம்சின், அதிசய பிறவிகள், ஏவி.எம்.,மின், பாயும் புலி போன்ற பெரிய பேனர் படங்களுக்கு கூட, சிலுக்கின், 'கால்ஷீட்' கிடைப்பது அரிதாக இருந்தது.
சிலுக்கு ஆடுவதற்காகவே, தங்கள் ஸ்டுடியோவில் புது புது பிரமாண்டமான, 'செட்'களும், நீராட, புதிய நீச்சல் குளத்துடன் காத்திருந்தது, ஏவி.எம்., நிறுவனம்.
இரவும், பகலும் தொடர்ந்து எட்டு நாட்கள், ஏவி.எம்.,க்கும், தேவர் பிலிம்சுக்கும் ஆடி ஆடி களைத்து போனார், சிலுக்கு.
'படங்கள் ஓடியதற்கு, சிலுக்கு மட்டும் தான் காரணம்ன்னு சொல்லக் கூடாது. சினிமாவில், கவர்ச்சி வழக்கமானது தான். சினிமாவுக்கு, 'பிளஸ்' ஆக இருந்தார், சிலுக்கு. 'அடிஷனல் அட்ராக் ஷன்!' விருந்துல, கூடுதலா இன்னொரு பாயசம் போடற மாதிரி, சிலுக்கை நடிக்க வைத்தால், 'கலெக் ஷன் பெட்டரா' இருக்கும்...' என்று விளக்கம் கொடுத்தார், முன்னணி இயக்குனர், எஸ்.பி.முத்துராமன்.
சிலுக்கு இருந்தால் தான், படம் வியாபாரமாகும் என்பது, கோடம்பாக்கத்தின் அப்போதைய விதி.
கடந்த, 1982ல், ஒரு ஸ்டாராக, பல, 'ஹிட்'களை கொடுத்திருந்த, ரஜினியையே, சிலுக்குக்கு ஏற்பட்டிருந்த திடீர் மவுசு, சற்று அதிரச் செய்தது.
மதுரை, லட்சுமி சுந்தர் தியேட்டரில், சத்யா மூவிஸ் சார்பில், மூன்று முகம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அன்றைய அமைச்சர், காளிமுத்து உட்பட விழாவின் பேச்சாளர்கள் அனைவருமே, சிலுக்கை பற்றி அதிகம் பேசினர்.
'ரஜினிகாந்த் - சிலுக்கு இருவருக்கும், இங்கே ஓட்டு எடுத்தால், யாருக்கு அதிக ரசிகர்கள் இருப்பர்...' என்று, திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார், ஏவி.எம்.சரவணன்.
'சிலுக்கு தான்...' என்று, பெரும்பான்மையான ரசிகர்கள், ஆரவாரம் செய்தனர்.
கே.ஆர்.ஜி., தயாரிப்பில், துடிக்கும் கரங்கள் படத்தில், ரஜினி, கதாநாயகன்; ராதா, கதாநாயகி; ஜெய்சங்கரும் நடித்திருந்தார். இயக்குனர், ஸ்ரீதர். இசை, எஸ்.பி.பாலசுப்ரமணியன் என்று, ஒரு புதிய கூட்டணி, இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.
ஸ்ரீதருக்கு வேறு வழி தெரியவில்லை. ஜெய்சங்கருக்கு ஒன்று, ரஜினிக்கு ஒன்று என்று, இரண்டு பேருடனும் சிலுக்கை ஆட வைத்து, விநியோகஸ்தர்களை திருப்திபடுத்தினார்.
சிலுக்கு, ஒரு படத்தில், ஒரே ஒரு காட்சியில் இடம் பெற்றாலும், அந்த படத்துக்கு, ஒரு ஏரியாவுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுக்க தயாராக இருந்தனர், விநியோகஸ்தர்கள்.
பண விஷயத்தில் கறாராக இருந்தார், சிலுக்கு. தன்னை மதித்தவர்களிடம், சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டார். கங்கை அமரன், அசோக்குமார், வடிவுக்கரசி என்று, சிலுக்கு, தன் சம்பளத்தை குறைத்து வாங்கியோரின் பட்டியல் நீளும்...
தான் மட்டுமல்ல; தன் சக ஊழியர்களான, 'மேக் - அப் மேன், காஸ்ட்யூமர், ஹேர் டிரஸ்ஸர், டச் - அப்' பையன் என்று யாராக இருந்தாலும், அவர்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால், படப்பிடிப்புக்கு போகவே மாட்டார்.
'லொகேஷ'னோ, 'செட்'டோ, சிலுக்கு வந்ததும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தான் முதலில் எடுக்க வேண்டும் என்பது, அவர் எழுதி தராத ஒரு கட்டளை.
தனக்கென்று ஒரு தனித்துவத்தை, படப்பிடிப்பு தளங்களில் ஏற்படுத்தினார். எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். படப்பிடிப்புக்கு கூப்பிட்டால், 'கிடுகிடு'வென்று வேகமாக போய் நிற்க மாட்டார். ஐந்து நிமிடங்களுக்கு பின், ஆடி அசைந்து, நிதானமாக போய் நிற்பார்.
— தொடரும்
பா. தீனதயாளன்

