தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திருமண கிழவி!

திருமண கிழவி!

திருமண கிழவி!


PUBLISHED ON : நவ 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவ்வையார் யார் என்றால், தமிழ் மூதாட்டி என்று உடனடியாக பதில் சொல்லி விடுவீர்கள். இவரை, தெய்வமாக வணங்கும் வழக்கம், தமிழகத்தில் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில், இவருக்கு, தனி சன்னிதி இருக்கிறது; பூதப்பாண்டியில் கோவிலே இருக்கிறது.

இவரை நினைத்து விரதம் இருந்தால், கன்னிப் பெண்களுக்கு கல்யாண தடை நீங்கும் என்ற நம்பிக்கை, தென் மாவட்டங்களில் அதிகம். சேலம் அருகிலுள்ள, உத்தம சோழபுரம், கரபுரநாதர் கோவிலில், கல்யாண அவ்வையார் என்ற பெயரில், இந்த மூதாட்டிக்கு சன்னிதி இருக்கிறது.

ராவணனின் தம்பிகளான கரனும், துாஷணனும் சிவ பக்தர்கள். சிவ தரிசனம் வேண்டி, இங்கு வந்து தவமிருந்தனர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், லிங்க வடிவில் எழுந்தருளினார். கர -- துாஷணருக்கு அருள் புரிந்ததால் இவர், கரபுரநாதர் என்ற பெயர் பெற்றார். பக்தர்களுக்கு கை, அதாவது, கரம் கொடுப்பவராக அருளுவதாலும் இப்பெயர் வந்ததாக சொல்வர்.

பறம்பு நாட்டை ஆண்ட வள்ளல் பாரியை, எதிரிகள், சூழ்ச்சி செய்து கொன்று விட்டனர். அவனது மகள்களான, அங்கவை, சங்கவை ஆதரவு இன்றி தவித்தனர். பாரியின் நண்பரான, கபிலர், அவர்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார்.

ஆனால், சேர, சோழ, பாண்டியர் மூவருமே, பாரியை எதிரியாக கருதியதால், அவரின் மகள்களை மணந்து கொள்ள மறுத்து விட்டனர். பாரி மகள்களின் நிலை பற்றி கேள்விப்பட்ட, அவ்வையார், மலை அரசனான, தெய்வீகனின் உதவியை நாடினார்.

மூவேந்தர்களும் ஒத்துக் கொண்டால், பாரி மகள்களை மணம் செய்து கொள்வதாக நிபந்தனை விதித்தான், தெய்வீகன். மூவேந்தர்களும், திருமணத்திற்கு சம்மதிக்க அருளும்படி, விநாயகரிடம் வேண்டினார், அவ்வையார்.

விநாயகரும், அந்த மன்னர்களுக்கு, தாமே கைப்பட திருமண ஓலை எழுதி, உத்தம சோழபுரத்துக்கு வரவழைத்தார். இத்தலத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. மூவேந்தர்களும் அவ்வையாரிடம், 'மூதாட்டியே... தங்கள் பாடல் மூலம், காய்ந்த பனை மரத்தை துளிர்க்கச் செய்தால், திருமணத்திற்கு சம்மதிக்கிறோம்...' என்றனர்.

அவ்வையாரும், அவ்வாறே பாடி, பனை மரத்தை துளிர்க்க செய்தார். பின், மூவேந்தர்களின் ஆதரவோடு திருமணம் இனிதே நடந்தது.

பாரி மகள்களின் திருமண தடையை நீக்கிய, அவ்வையாருக்கு, இத்தலத்தில் சன்னிதி அமைக்கப்பட்டது. இந்த கல்யாண அவ்வையார், ராஜகோபுரம் அருகே வீற்றிருக்கிறார். கன்னிப் பெண்கள், அவரவர் பிறந்த, ஜென்ம நட்சத்திர நாளில், மூன்று மாலைகள் வாங்கி வந்து, சிவன், அம்பாள், அவ்வையாருக்கு அணிவித்து வழிபடுகின்றனர். திருமணம் நிச்சயமானதும், அழைப்பிதழை வைத்து, மீண்டும் வணங்குகின்றனர்.

சேலம் - ஈரோடு சாலையில், 5 கி.மீ., துாரத்தில், கோவில் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us