/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
/
முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
PUBLISHED ON : மே 31, 2020

'கொரோனா' தொற்று கொடுத்த பயம், பலர், இன்று, தெருக்களில் முகமூடி அணிந்து நடக்கின்றனர். வெகு விரைவில், 'கொரோனா'வுக்கு, 'குட் - பை' சொல்லி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த சூழலில், துணியாலான முகமூடிகளை என்ன செய்வது?
அவ்வளவு முகமூடிகளையும் துாக்கி எறிந்தால், அவற்றை அள்ள, பல லாரி தேவைப்படும்.
இந்த சூழலில், முகமூடிகளை தொடர்ந்து பயன்படுத்த சில யோசனைகள்:
* சிலரிடம், நெருங்கி பேசினாலே வாய் நாறும். இத்தகையவர்கள் அருகில் வந்து பேச விரும்பினால், 'முகமூடி அணிந்து, தள்ளி நின்று பேசுங்கள்...' என, கூறி விடலாம்
மேலும் சிலருக்கு, பேசினாலே வாயிலிருந்து எச்சில் பூச்சொரிவது போல் தெறிக்கும். இத்தகையவர்களுக்கு, 'முகமூடியை அணிந்தால் மட்டுமே தொடர்ந்து பேசலாம்...' என, சொல்லி சமாளிக்கலாம்
* சிலருக்கு, பேசினால், வாயில் நல்ல வார்த்தைகளே வராது. மேலும் சிலர், எப்போது பேசினாலும், 'நெகடிவ்' ஆக பேசுவர். இத்தகையவர்கள் பேசுவதை தடுக்க முடியாது. அதனால், முகமூடியில் சற்று மாற்றங்களை செய்து, நம் இரு காதுகளிலும், 'ஹெட்போன்' போல் மாட்டிக் கொண்டால், கெட்ட மற்றும் எதிர்மறை வார்த்தைகளை கேட்காமல் தவிர்க்கலாம்
* சிலர், வாயை திறந்தாலே, ஓட்டையும் உடைசலுமாய் பல வண்ணங்களில் பற்கள் ஜொலிக்கும். அத்துடன் அதைப் பற்றி கவலையேபடாமல் சிரித்து, நம்மை கதிகலங்கச் செய்வர். இத்தகையவர்களிடம், முகமூடி அணிந்து பேச சொல்லி, ஓரளவுக்கு நிம்மதி அடையலாம்
* மனைவியிடம் அடிக்கடி, 'டோஸ்' வாங்கும் பாவப்பட்ட கணவர்கள், அதை குறைக்க, நைசாய் முகமூடியை மனைவி வாயில் கட்டி, 'நீ, இதில் ரொம்ப அழகாய் இருக்கே...' எனக் கூறி, அம்மணியின், 'மூடை' மாற்றலாம். ஆனால், சில சமயம், முகமூடிக்காக, கூடுதல், 'டோஸும்' கிடைக்கலாம்; ஜாக்கிரதை
மனைவியின், 'டோஸை' சீரியசாக எடுத்துக் கொள்ளாத (எடுத்துக் கொண்டால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம்) கணவர்கள், அதை சமாளிக்க, பாட்டு கேட்பது போல், 'ஹெட்போன்' முகமூடிகளை பயன்படுத்தலாம்
* சிலர், பார்த்தாலே விஷம். இவர்கள் கண் பட்ட எதுவும் உருப்படாது. மரம் கூட பட்டுப் போய் விடும். இத்தகையவர்களை சந்திக்க நேர்ந்தால், மொத்த முகமும் மறைக்கும்படியான முகமூடியை அணிந்து, தப்பி விடவும்.
முகமூடி அணியும் பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்கியதோடு, அதற்கு பல்வேறு பயன்பாடுகள் உண்டு என்பதையும் உணர செய்த, 'கொரோனா'வுக்கு நன்றி!
ஆர். திலீப்

