sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 31, 2020

Google News

PUBLISHED ON : மே 31, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு சகோதரி —

எனக்கு வயது, 82, என் மனைவி வயது 72. எங்களுக்கு இரண்டு பெண், இரண்டு ஆண். எல்லாரையும் பட்டப்படிப்பு படிக்க வைத்து, திருமணம் நடத்தி, குழந்தைகளுடன் வாழ்கின்றனர்.

என் மூன்றாவது மகன், வெளிநாடு சென்று, நான்கு ஆண்டுகள் அங்கிருந்து வேலை செய்து, நன்றாக சம்பாதித்தான். மருமகள், மிக மரியாதை உள்ளவர். அவளது வளர்ப்பு தாய், 'ஸ்டாப் நர்ஸ்' ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.

மகனின் நண்பன் ஒருவன், சம்பந்தியை தவறானவர் என்று கதை கட்டியதை நம்பி, தன் மனைவியுடன் தகராறு செய்ய ஆரம்பித்தான். நான் எத்தனையோ அறிவுரைகள் கூறியும் ஏற்காமல், பிரச்னை செய்து வந்தான். ஒரு கட்டத்தில், தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டான்.

இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை. இப்போது, 8வது படிக்கிறான். பிரிவினை ஆனவுடன், குழந்தை பிரச்னை வந்தது. தன் மகனை கொடுக்க முடியாது என்று கூறி விட்டாள், மருமகள். 'சட்டத்தின் மூலமாகவோ, வேறு எந்த வகையிலோ முயற்சி செய்தால், மகனை கொன்று, நானும் தற்கொலை செய்து கொள்வேன்...' என்று மிரட்டினாள்.

'அம்மா, நீயே வைத்துக் கொள். இந்த பாவத்தை என்னால் சுமக்க முடியாது...' என்று கூறி, விட்டு விட்டேன்.

மீண்டும், நான்கு மாத ஒப்பந்தத்தில் வெளிநாட்டிற்கு போன மகன், தன் முன்னாள் மனைவியுடன் போனில் பேசியுள்ளான்.

அவளுக்கு உடை எடுக்க சொல்லி, 5,000 ரூபாய் கொடுக்க சொன்னான். நான், நேரில் போய் கொடுத்து வந்தேன். கண்ணீருடன், பணத்தை வாங்காமல், தன் மகனிடம் கொடுக்க சொன்னாள். கொடுத்து விட்டு, ஊர் திரும்பினேன்.

ஒப்பந்த காலம் முடிந்ததும், ஊர் திரும்பிய என் மகன், மனைவி, குழந்தையை பார்க்க அடிக்கடி போய் வந்தான். அவர்களை சேர்த்து வைக்க பலமுறை நேரில் சென்று மன்றாடினேன்.

முக்கிய நபர்களை அழைத்து போய் பேச்சு நடத்தியும், அவளது வளர்ப்பு தாய், பெண்ணை, கணவருடன் சேர்ந்து வாழ விருப்பப்படவில்லை. மருமகளும், தாய் சொல்லை தட்ட முடியாமல் இருந்தாள். அவளை சேர்த்து வைக்க முடியாது என்றெண்ணி, மகனுக்கு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தோம்.

சில நாட்களில், புதிதாக வந்த மருமகள், முதல் மருமகளின் போன் எண்ணை கண்டுபிடித்து, ஏறுக்கு மாறாக பேசி விட்டாள். இப்படியிருக்க, தன் மகனை பார்த்து வர, என்னையும், என் மனைவியையும் அனுப்பி வைத்தான், மகன்.

நாங்கள் இருவரும், பேரன் படிக்கும் பள்ளிக்கு போய், பிரின்சிபாலிடம் அனுமதி பெற்று, அவனை சந்தித்தோம். விவாகரத்து ஆன விபரம் தெரியாது, பேரனுக்கு. குடும்ப விபரங்கள் முழுவதும் கூறினோம்.

'வீட்டுக்கு வாருங்கள்...' என்று, பலமுறை அழைத்தான், பேரன்.

'அங்கு வந்தால் பிரச்னையாகும். எனவே, வேண்டாம்...' என்று கூறி, ஊர் திரும்பினோம்.

அன்று மாலையே, போனில் என்னை அழைத்த முதல் மருமகள், 'நீங்கள், எப்படி என் மகனை சந்திக்கலாம்...' என்று கேட்டு, கண்டபடி பேசியவர், 'பேரனுடன் தொடர்பு கொள்ளக் கூடாது. இனி, என் மகனை சந்திப்பது தெரிந்தால், அவனை கொன்று, நானும் தற்கொலை செய்து கொள்வேன். எங்கள் மரணத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று, கடிதம் எழுதி வைத்து சாவேன்...' என்று கூறினார்.

இதற்கு ஒரு தீர்வு கூற வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

அன்பு சகோதரன்.


அன்பு சகோதரருக்கு —

இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் வழியாக, உங்களுக்கு குறைந்தபட்சம், ஏழு பேரன், பேத்திகள் இருப்பர். அவர்களுடன் விளையாடி மகிழும் வயதில், மூன்றாவது மகனின் பிரச்னையை துாக்கி சுமக்கிறீர்கள்.

மனைவி, தனக்கு விசுவாசமாக இருந்தால் போதும் என, நினைக்க வேண்டிய உங்கள் மகன், மாமியார் விஷயத்தில் மாரல் போலீசாக செயல்பட வேண்டிய அவசியம் என்ன... மாமியார் தவறானவர் என்றால், அவரிடமிருந்து விலகி இருக்க வேண்டியது தானே...

எதற்கு தேவையில்லாமல் மனைவியுடன் பிரச்னை செய்ய வேண்டும்... இந்த விஷயம் பெரிதாகாமல், ஆரம்பத்திலேயே நீங்கள் தலையிட்டு, மகனுக்கு தகுந்த அறிவுரையை கூறி, பிரச்னையை கிள்ளி எறிந்திருக்க வேண்டும்; செய்ய தவறி விட்டீர்கள்.

பிரச்னையை உடனடியாக தீர்க்க முடியாவிட்டாலும், மகனின் விவாகரத்து முடிவை, தள்ளி போட்டிருக்கலாம்.

விவாகரத்து ஆன உங்கள் மகன், சமாதான முயற்சிகள் தோற்ற பின், மறுமணம் செய்து கொண்டான். ஆனால், உங்கள் மருமகள் மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன், 13 வயது மகனை சார்ந்து தான், வாழ்க்கையை நகர்த்துகிறாள்.

முன்னாள் மருமகளின் அனுமதி இல்லாமல், நீங்கள் உங்கள் பேரனை அவன் படிக்கும் பள்ளியில் பார்க்க போனது, மன்னிக்க முடியாத குற்றம். வளர்ப்பு தாயால், கணவனால், மாமனார், மாமியாரால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் ஒரே நம்பிக்கையையும் திருட பார்ப்பது, என்ன நியாயம்?

இனி, நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா...

* உங்கள் மகனின், இரண்டாவது மனைவி எக்காரணத்தை முன்னிட்டும், முதல் மனைவியோடு தொடர்பு கொண்டு பேசக் கூடாது என, அவளிடம் வலியுறுத்துங்கள்

* மீதி இருக்கும் இரு மகள்களும், ஒரு மகனும் புகுந்த வீட்டின் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

* உங்கள் முன்னாள் மருமகளின் அனுமதி இல்லாமல், பேரனை பார்க்க போகாதீர்கள். அனுமதி கொடுத்தால் பாருங்கள்; மறுத்தால், பேரனை பார்ப்பதை தவிருங்கள்

* மகனின் பிரச்னையிலிருந்து விலகி நில்லுங்கள். மற்ற பேரன், பேத்திகளின் மீது அன்பை பொழியுங்கள். 82 வயதில் பிரச்னைகளை துாக்கி சுமக்காதீர்

* முன்னாள் மனைவியிடம் அனுமதி பெற்று, உங்கள் மகன், ஒரு பெரும் தொகையை, பேரனின் பெயரில் வங்கியில் வைப்பு தொகை கட்டலாம்; படிப்புக்கு உதவும்

* பேரனுக்கு வயது, 13 ஆகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பிரச்னையும் செய்யாமல், பொறுமையாக இருங்கள். உங்கள் பேரன், மேஜராகி விடுவான். தந்தை மீதும், தாத்தா, பாட்டி மீதும் பாசம் இருந்தால், அவனே உங்களை வந்து பார்ப்பான்

* நீங்களும், உங்கள் மனைவியும், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மன அமைதிக்கு வாரா வாரம் கோவிலுக்கு சென்று வாருங்கள். மாதம் ஒருமுறை, மகன்கள், மகள்கள் குடும்பங்களை மொத்தமாக வரவழைத்து, நிலாச் சோறு சாப்பிடுங்கள்

* பேரன் பேத்திகளுக்கு, 'ஈகோ' இல்லாமல், உறவுகளை பேண சொல்லி கொடுங்கள்

* சொந்த பந்தங்களில், உறவுகளில் எந்த ஆணும், எந்த பெண்ணும் உறவு சிக்கல்கள் இல்லாமல், வாழ சொல்லி கொடுங்கள்.

காயங்கள் முழுமையாக ஆறட்டும். வடுக்களை கீறி, ரத்தம் வழிய செய்து விடாதீர்கள்.

உங்கள் துர்பாக்கிய முன்னாள் மருமகளுக்கு, என் கரிசனமான, ஆத்மார்த்தமான விசாரிப்புகள்!

என்றென்றும்

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us