
கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் சில இடங்களிலும், ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. சில மாவட்டங்களில் மாவலி சுற்று என்ற சடங்கை நிகழ்த்துகின்றனர், மக்கள்.
ஓணம் பண்டிகை, ஆவணி மாதம், அஸ்தம் நட்சத்திரம் துவங்கி, திருவோணம் வரை, 10 நாட்கள் களை கட்டும். இரண்யனின் மகன் பிரகலாதன். அவனது மகன் விரோசனன். விரோசனனின் மகன் மகாபலி. அசுர வம்சத்தை சேர்ந்தவன்.
எனினும், தன் தாத்தா பிரகலாதனைப் போல், விஷ்ணு பக்தன். தர்மம் செய்வதில் வல்லவன், மகாபலி. இருப்பினும், தன்னை விட தர்மவான் யாரும் இந்த பூமியில் இல்லை என்ற ஆணவமும் கொண்டிருந்தான். இதையே அவனுக்கு எதிராக்கி, 3 அடி மண் கேட்பது போல் நடித்து, வாமனன் என்ற குள்ள அவதாரம் எடுத்தார், விஷ்ணு. அதே அவதாரத்தில் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து உயர்ந்து, அவனை ஆட்கொண்டார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையில் வாமனருக்கு கோவில் உள்ளது. இங்கு வந்த பக்தர் ஒருவர், வேண்டுதல் நிறைவேறியதும் பொன்னால் ஆன வாழைக்குலைகளை நேர்ச்சையாக அளித்தார்.
நேர்ச்சையை, 'நேந்து கொள்ளுதல்' என்பர். இந்த சொல்லில் இருந்தே, வாழையின் ஒரு வகைக்கு, நேந்திரம் என்று பெயர் சூட்டப்பட்டது. நேந்திரம் சாப்பிட்டால் நோய்கள் தடுக்கப்படும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். டாக்டருக்கு பணம் போகாவிட்டால், நம் சம்பாத்தியம் நிலைக்கும். இதனால் தான் இந்தக் கோவிலிலுள்ள தாயாரை, பெருஞ்செல்வ தாயார் என்பர்.
தமிழகத்தில், ஐப்பசி திருவோணம் நட்சத்திரம், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் ஓணம் கொண்டாடப்பட்டு வந்ததற்கு சான்றுகள் உள்ளன. மயிலை, கபாலீஸ்வரர் கோவிலில், ஐப்பசி திருவோணம் நடந்தது பற்றி, பூம்பாவை பதிகத்தில் சம்பந்தர் கூறுகிறார்.
கடலுார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில பகுதிகளில், பனை மரத்தில் கிடைக்கும் கருப்பு நிற நீளமான பூவை காய வைத்து, மாவாக அரைப்பர். இதை, துணியில் சுற்றி இறுக்கமாக கட்டி, பனை மட்டையைக் கீறி அதனுள் வைப்பர்.
மட்டையில் ஒரு கயிறைக் கட்டி, மாவு கட்டில் தீ வைத்து சுற்றுவர். அப்போது பறக்கும் தீப்பொறி காண அழகாக இருக்கும். அப்போது, 'கார்த்திகையாம் கார்த்திகை, மாவலியாம் மாவலி...' என்று கோஷமிடுவர். இதற்கு மாவலி சுற்று என பெயர்.
மாவலி மன்னர், கார்த்திகையன்று தங்களைக் காண வருவதாகவும், அவரை வரவேற்கும் விதத்தில், இந்த சடங்கை செய்வதாகவும் சொல்வர். கடவுளின் திருவடியை வணங்கி பிறப்பற்ற நிலை அடைவதே, ஓணம் விழாவின் நோக்கம். இதை உணர்ந்து, இவ்விழாவை கொண்டாடுவோம்.
- தி. செல்லப்பா