
சரியான, 'ஷாக் ட்ரீட்மென்ட்!'
தோழியைச் சந்திக்க அவளது வீட்டுக்கு சென்றிருந்தேன். தோழியால் விரட்டியடிக்கப்பட்ட வயதான மாமனார் - மாமியார் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
மனம் மாறிய தோழியின் முடிவிற்கு, காரணம் கேட்டேன்.
'நீ வேற... பெரிசுகள் ரெண்டும் தாசில்தார்கிட்ட போய் புகார் பண்ணிடுச்சுக. அதனால, எங்க ரேஷன் கார்டை ரத்து பண்ணிட்டாரு. வேற வழியில்லாம திரும்ப அழைத்து வந்து, புது ரேஷன் கார்டும் வாங்கிட்டோம்...' என்றாள், தோழி.
இப்படிப்பட்ட தாசில்தார்கள் இருந்தால், முதியோர் இல்லங்கள் பெருகுவது, குறைந்து விடும். தாசில்தாரின், 'ஷாக் ட்ரீட்மென்ட்' தோழி போன்றவர்களை திருந்த செய்யும் என்று, நினைத்துக் கொண்டேன்.
- பி. பூங்கோதை, சிவகங்கை.
ஆட்டோ டிரைவரின் எச்சரிக்கை!
தோழியின் மகள், பிளஸ் 2 படிக்கிறாள். தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
ஒரு நாள், தோழியின் கணவர் மற்றும் தோழியிடம், 'இன்னிக்கு, பாப்பா முகம் சரியில்ல. வழக்கமான சுறுசுறுப்பு இல்லாமல் எதையோ பறிகொடுத்தது போல இருக்காங்க. கேட்டா எதுவும் சொல்லல. கொஞ்சம் விசாரிங்கோ...' என்று, தகவல் கூறினார், ஆட்டோ டிரைவர்.
என்ன ஏது என்று விசாரித்தபோது, தோழியின் மகளுக்கு, பள்ளி தோழியர்களால், 'டார்ச்சர்' என்று தெரிந்தது. சுமாராக படிக்கும் தோழியின் மகளை, 'நீ மக்கு... இந்த வருஷம் பாஸாக மாட்டே...' போன்ற வார்த்தைகளை அடிக்கடி கூறி, அவளை தினம் அழ வைத்து, அதை, 'வாட்ஸ் ஆப்' குழுவில் போட்டு, நக்கல் செய்துள்ளனர், சக தோழியர்.
இதை வீட்டில் சொல்லாமல், தற்கொலை முடிவுக்கு சென்றவளை காப்பாற்றியது, ஆட்டோ டிரைவரின் எச்சரிக்கை தான்.
எனவே, பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் நம் குழந்தைகளிடம் அன்பாக பேசி, தினமும் நடப்பவற்றை விசாரித்து, தகுந்த ஆலோசனை கூறி நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை.
அதைவிடுத்து, வேலை, சம்பாத்தியம், 'ஒர்க் பிரஷர்' என, பிள்ளைகளை கண்டுகொள்ளாமல் விட்டால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலை முடிவுக்கு தான் செல்வர்.
இதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள், பெற்றோரே!
- காளீஸ்வரி காளிதாசன், புதுக்கோட்டை.
விழாவில் செய்முறை விளக்கம்!
கிராமத்தில், தோட்டத்தில் வீடு கட்டி குடியிருக்கும், எங்கள் உறவினர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தேன்.
விழாவும், விருந்து ஏற்பாடுகளும், தோட்டத்திலுள்ள அவர் வீட்டருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழா மேடையிலிருந்து சற்று தள்ளி, கரும்பை வெட்டி, சாறு பிழிந்து, அதிலிருந்து அச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
விழாவில் கலந்துகொள்ள, நகர் பகுதியிலிருந்து குடும்பத்துடன் வந்தவர்கள், வெல்லம் தயாரிப்பை ஆர்வத்துடன் பார்த்தனர். பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், வெல்லம் தயாரிப்பு குறித்து பொறுமையாக விளக்கிக் கூறினர்.
விழா முடிந்து திரும்பும்போது, தாம்பூலப் பையில், தேங்காய்க்கு பதிலாக, கால் கிலோ அளவிற்கு வெல்லம் வைத்து கொடுத்தனுப்பினர். கரும்புச் சாறு பிழியும்போது, அதில் இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்தும் கொடுத்தனர். இதை பலரும், விரும்பி ரசித்து, குடித்தனர்.
அருகில் உள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த புடலை, பூசணி, வெண்டை, மிளகாய், நிலக்கடலை, எள், ஆமணக்கு, வெள்ளரி மற்றும் பண்ணை உள்ளிட்டவைகளையும், நகர் பகுதி பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு காட்டி விளக்கினர்.
விழாவில் கலந்துகொண்ட பலருக்கும், இது இனிய களப்பயணம் போல் அமைந்திருந்தது. கிராமச் சூழலில் தோட்டத்தில் வாழ்பவர்கள், தங்கள் இல்ல விழாக்களை கிராமங்களிலேயே நடத்தி, வித்தியாசமான அனுபவங்களை நகரவாசிகளுக்கு தரலாமே!
சோ. ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.