தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கேன்சர் நோயை அழிக்க, திராட்சையின் விதை சிறந்த மருந்து...' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட, 48 மணி நேரத்தில், கேன்சர் செல்களை அழிக்க ஆரம்பிக்கிறது என, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

தயிர் - அரும் மருந்து!

உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஜீரண சக்தியை தந்து, அருமருந்தாக செயல்படுகிறது, தயிர்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்திற்கு பின், 32 சதவீதம் தான் ஜீரணமாயிருக்கும்; ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், 91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டிருக்கும். தயிரில் இருக்கும், 'லாக்டொபசில்' என்ற அமிலம், ஜீரண சக்தியை தூண்டி, வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத போது, வெறும் தயிர் சோற்றை உணவாக உட்கொள்ள அறிவுறுத்துவர், மருத்துவர்.

அதிகமாக, வயிற்றுப்போக்கு ஏற்படும் போது, வெந்தயம் சேர்த்த தயிர், ஒரு கப் சாப்பிட்டால், வயிற்றுப் பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும் போது, வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான், வெங்காய தயிர் பச்சடி சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்கள், தயிரை உணவில் சோர்த்துக் கொள்ள, உடலுக்கு தேவையான கால்ஷியம் கிடைக்கும்.

பாலை, தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது; தயிரில் இருக்கும் பாக்டீரியா, ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்து குளித்தால், தூக்கம் நன்றாக வரும்.

* சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், பாதுகாக்கிறது, தயிர். பழச்சாற்றில் உள்ள, விட்டமின், 'சி' தயிரிலும் உள்ளது.

* மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு, சிறந்த மருந்து, தயிர்.

* குடல்வால் நோய் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள், தயிர் மற்றும் மோரில் உள்ள, 'லேக்டிக்' அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ, சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது, சிறந்த பலனை தரும்.

* சில தோல் நீக்க நோய்க்கு, மோர் கட்டு, சிறந்த நிவாரணம் ஆகும்.

* தயிரை உணவில் சோக்க விரும்பாதவர்கள் தயிரில், சர்க்கரை சேர்த்து கலக்கி, லஸ்சியாக உண்ணலாம்.

* பன்னீர் கட்டிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* மோராக கடைந்து, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து, நீர் மோராக்கி குடிக்கலாம்.

மன அழுத்தம்

இன்று பலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை, மன அழுத்தம்; இதற்கு, வாழும் சூழ்நிலை, பிரச்னையை எதிர்கொள்ள இயலாமை மற்றும் எதற்கும் உணர்ச்சி வசப்படுவது போன்றவையே காரணங்கள்.

மன அழுத்தம் இருப்பதை கீழ்கண்ட அறிகுறிகளால் அறியலாம்...

* எதிலும் ஆர்வமிருக்காது; கவனக் குறைவும், தகவல்களை நினைவு கொள்வதிலும் சிரமம் இருக்கும்.

* எப்போதும் களைப்பு மிகுந்திருக்கும்.

* 'நான் எதற்குமே லாயக்கில்லை; கையாலாகாதவன்...' என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களும், 'எனக்கு எதுவுமே சரியில்லை; நான், துரதிருஷ்டம் பிடித்தவன்...' போன்ற உணர்வுகளில் மனம் பேதலிக்கும்.

* தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம்.

* பசி எடுக்காது; சாப்பிடப் பிடிக்காது அல்லது எதையாவது உள்ளே தள்ளியபடி இருக்கத் தோன்றும்.

* தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி மற்றும் ஜீரணக்கோளாறு போன்றவை தொடர்ந்து படுத்தும். இதற்கு, ஏதாவது மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்காது.

* அடிக்கடி, தற்கொலை எண்ணங்கள் தலைதூக்கி, வேதனைப்படுத்தும்.

* மனச்சோர்வு பீடித்திருப்பவர்களில் பத்தில் ஒரு நபர், தற்கொலை செய்து கொள்கிறார்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.

உடல் எடைக்கு ஏற்ப, தண்ணீர் குடியுங்கள்!

நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற, நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்

என்றாலும், அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான், தண்ணீர் அருந்த வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி நீர் பருகுவதால், உடல் நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப, தினமும் எவ்வளவு நீர் பருக வேண்டும் என, தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் எடை - பருக வேண்டிய தண்ணீரின் அளவு:

45 கிலோ - 1.9 லிட்டர்

50 கி., - 2.1 லி.,

55 கி., - 2.3 லி.,

60 கி., - 2.5 லி.,

65 கி., - 2.7 லி.,

70 கி., - 2.9 லி.,

75 கி., - 3.2 லி.,

80 கி., - 3.5 லி.,

85 கி., - 3.7 லி.,

90 கி., - 3.9 லி.,

95 கி., - 4.1 லி.,

100 கிலோ - 4.3. லிட்டர்.

அளவுக்கு மீறினால், தண்ணீரும் கூட, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

சுண்டைக்காய் சாப்பிடுவதால்...

சுண்டைக்காயின் இலைகள், வேர் மற்றும் கனி என, முழு செடியும் மருத்துவ குணம் கொண்டது. வயிற்றிலுள்ள பூச்சிகளை ஒழிக்க, கிராமப்புறங்களில், சமையலில், சுண்டைக்காயை அடிக்கடி சேர்ப்பர். வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறி விடும். அல்சர் மற்றும் வயிற்றுப்புண் ஆறும்; வயிற்றின் உட்புற சுவர்கள் பலமடையும். அத்துடன், இதன் இலைகள் ரத்த கசிவை தடுக்க கூடியவை; பழங்கள், கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகிறது.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை, வாரம் இரு முறை சமைத்து சாப்பிட்டால், உடற்சோர்வு நீங்கும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முற்றிய சுண்டைக்காயை நசுக்கி, மோரில் போட்டு ஊற வைத்து, வெயிலில் காய வைத்து, வற்றலாக்கி, பின், குழம்பு வைத்து சாப்பிடலாம். இது, குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

மேலும், மார்பு சளி மற்றும் தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காச நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால், பாதிப்பு குறையும்.

'ஏசி' - சில எச்சரிக்கை மணிகள்!

ஒரு காலத்தில், மின்விசிறி ஆடம்பர பொருளாக இருந்தது; இன்று, 'ஏசி' பலருக்கும் அடிப்படை தேவையாகி விட்டது.

'ஏசி'யால் வெளியாகும் வெப்பக் காற்று, உலகை மேலும் வெப்பப்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அத்துடன், நமக்கும் பல ஆரோக்கிய குறைவுகள் ஏற்படுகின்றன.

ஹைப்பர் - ரியாக்டிவ் என்ற தன்மை கொண்டவர்கள், 'ஏசி'யை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து, 'ஏசி'யில் இருப்போருக்கு தலைமுடி உதிர்தல், சுவாசம் மற்றும் கண் தொற்றுகளும், தசை இயக்க நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம். இவற்றை தவிர்க்க, சிறிது நேரம், 'ஏசி'யிலிருந்து வெளிவந்து, சூரிய ஒளி படும்படி நில்லுங்கள். அப்போது, தலையை, குல்லாய் அல்லது மப்ளரால் மூடிக் கொள்ளுங்கள். இது, 'ஏசி'யால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளை, முக்கியமாக, தோல் நோய் வருவதை தடுக்கும்.

'ஏசி'யில் தொடர்ந்து இருக்கும் போது, நம் தோல், தன் ஈரப்பதத்தை இழந்து விடலாம். எனவே, அவ்வப்போது, மாய்ஸ்சரைசர் கிரீமை சருமத்தின் மீது பூசுங்கள்.

உங்கள் இருக்கை, 'ஏசி'க்கு நேரெதிராக இருந்து, கழுத்து பகுதியில், 'ஏசி'காற்று வீசுவதால், தசை இறுக்கம் உருவாக்கும்.

சிலர், 'ஏசி'க்கு மிக அருகில் தலையை வைத்து தூங்குவர். இவர்களுக்கு, முக நரம்புகள் பாதிக்கப்படலாம். இதை, ஆங்கிலத்தில், 'பெல்ஸ் பால்ஸி' என்பர். எனவே, 'ஏசி' காற்று முகத்தில் படாத தூரத்தில் உறங்குங்கள்.

'ஏசி' கருவியை, குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அங்கு பாக்டீரியா அதிக அளவில் தங்கி, நோய் தொற்றுகளை உருவாக்கும்.

சொரியாசிஸ் உள்ளவர்கள், 'ஏசி'யில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

'குளுகுளு'வென இருக்கிறது என்று, 'ஏசி'யை தொடர்ந்து பயன்படுத்தாமல், அளவோடு பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us