PUBLISHED ON : ஜூன் 25, 2017

''தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று - இந்த குறளுக்கு யாருக்காவது விளக்கம்
தெரியுமா?'' என்று சவுமியா கேட்டது தான் தாமதம்; அடித்து பிடித்து, தங்களுக்கு
தெரிந்த உதாரணங்களை சொல்லி, விளக்கத் துவங்கினர், ஏழாம் வகுப்பு மாணவர்கள். அவர்களின் கற்பனைத் திறன், சவுமியாவை வியக்க வைத்தது.
'சவுமியா... ரொம்ப தலை வலிக்குது; இன்னிக்கு ஒருநாள் என் வகுப்பை பாத்துக்கிறியா...' என்று, வைதேகி டீச்சர் கேட்ட போது, உடனே, சம்மதித்து, 'மேத்ஸ் டீச்சரா இருந்தாலும், தாய்மொழி தமிழ் தானே. கவலைய விடு; நான் பாத்துக்கிறேன். நீ ரெஸ்ட் எடுத்துக்கோ...' என்று கூற, மேடிட்ட வயிறை, தடவியபடி நன்றி கூறிச் சென்றாள், வைதேகி.
முக்கால் மணி நேரம் போனதே தெரியவில்லை, சவுமியாவுக்கு!
''வைதேகி... இன்னிக்கு எனக்கு வித்தியாசமான அனுபவம் கிடைச்சது; எப்பவும் அல்ஜீப்ராவையும், டெசிமலையும் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப ஒரு பாதையில பயணிக்கற மாதிரியான உணர்வு ஏற்படும். ஆனா, இன்னிக்கு புதுசா விதை விதைச்சு, தண்ணி ஊத்தி, செடி வளர்த்த மாதிரி, மனசுக்குள் புத்துணர்ச்சி... தேங்க்ஸ்,'' மலர்ச்சியோடு கூறினாள், சவுமியா.
இளமை வழிந்தோடும் தோற்றம்;
குறுகுறுக்கும் கண்கள்; வசீகரப் புன்னகை; மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியை. ஆனால், வாழ்க்கையில்... யோசிப்பதற்கு ஒன்றுமில்லை என்றே அவளுக்கு தோன்றியது.
இருபத்து நாலு வயதில் திருமணம்; அடுத்த இரண்டாவது ஆண்டே விவாகரத்து. ஏனோ தானோ வென்று வாழ ஆரம்பித்தாகி விட்டது.
பெயரைப் போல, வசீகரமானவன் பிரபஞ்சன். ஆனால், இவளுக்கு பிடித்தது, அவனுக்கு பிடிக்கவில்லை; அவன் விரும்பியதை, இவள் ரசிக்கவில்லை.
குறை யாரிடமென்று, சுட்டிக்காட்ட முடியாத சூழல்; சிறிதும், பெரிதுமான சண்டை, சச்சரவுகள் முளைக்கத் துவங்கியபோது, இரவு கூட
சுமையாகிப் போனது.
பேருந்து பயணத்தின்போது, அருகருகே அமர்ந்து பேசிக் கொள்வதும், நிறுத்தம் வந்ததும், சுவாதீனமாய் இறங்கி போவது போல, இரவின் உறவுகள் அமைய, சவுமியாவுக்கு தலை வெடித்துவிடும் போலாகி விட்டது.
'என்னால இனிமே இந்த பந்தத்துல பொருந்தி இருக்க முடியாது; நான் விலகிக்குறேன்...' என, பட்டென ஒருநாள் கூறிவிட்டாள்; அதை எதிர்பார்த்தவன் போல், மறுபேச்சின்றி, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டான். ஆயிற்று, இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது.
'இன்னொரு கல்யாணம் செய்துக்கோ...' என, தோழிகள் வற்புறுத்த, பிடிவாதமாக மறுத்து விட்டாள், சவுமியா.
ஆசிரியர் உத்தியோகம், சொந்தக் காலில் நிற்க தைரியம் தந்தது. விரும்பியதை சாப்பிடலாம்; கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கை.
ஆனாலும், மனதில் வெறுமை நிரம்பிக் கிடந்தது. அதை போக்கும் வழி தெரியவில்லை.
ஸ்கூட்டியை உயிர்ப்பித்தாள், சவுமியா.
''சவுமியா...''
பின்னாலிருந்து குரல் கேட்க, திரும்பியவள் முகத்தில், கடுமை பரவியது. அதை கவனிக்காது புன்னகைத்தான், ரவி.
''வீட்டுக்கு கிளம்பியாச்சா?''
''ம்...''
''உங்க கூட கொஞ்சம் பேசணும்...''
''நீங்க என்ன பேசப் போறீங்கன்னு எனக்கு தெரியும். ஏற்கனவே, எத்தனையோ முறை, நீங்க இப்படி கேட்டு, நான் முடியாதுன்னு மறுத்திருக்கேன்; இந்த முறையும் அப்படித்தான்.''
''உங்க மனசென்ன இரும்புக் கோட்டையா?'' ஆற்றாமையோடு கேட்டான், ரவி.
அவன் கூறியதை காதில் வாங்காதவள் போல், ஸ்கூட்டியில் அரை வட்டமடித்து பறந்து போனாள், சவுமியா. அப்படியே நின்றிருந்தான், ரவி. தூரத்திலிருந்து, இதைப் பார்த்து பெருமூச்சு விட்டாள், வைதேகி.
மறுநாள், சவுமியாவிடம், ''நல்ல ஆசிரியர்; பண்பானவர்; சக உயிரின் துன்பம் பொறுக்காதவர்; இதையெல்லாம் விட, கண்ணியமானவர். இதுல ஒண்ணு கூடவா உன்னை கவரல?'' கோபமாக கேட்டாள், வைதேகி.
கசந்த சிரிப்புடன், ''பிரபஞ்சனும் இப்படித்தான்; எல்லா நல்ல குணங்களும் அவர்கிட்ட இருந்தது; ஆனாலும் ஒத்து வரல. எதனாலன்னு சொல்ல முடியுமா...''வைதேகி, ஏதோ சொல்ல வாயெடுக்க, அதை தடுத்து, ''வேம்பு கசக்கும்ன்னு ஒருமுறை ருசிச்சாலே தெரிஞ்சிடும்; அதை பரீட்சிக்க, திரும்பத் திரும்ப ருசிப்பானேன்,'' என்று கேட்க, பெருமூச்சு விட்டாள், வைதேகி.
ரவி, அந்த பள்ளிக்கு பணிபுரிய வந்து, எட்டு மாதமாகிறது.
அதற்குள், அவன் எல்லாருக்கும் பிடித்தமானவனாகி விட்டான். ஆனால், அவனுக்கு சவுமியாவைத் தான் நிரம்ப பிடித்திருந்தது. அவள் மண விலக்கானவள் என்று தெரிந்த பின்பும், அவளை, தன் மனதிலிருந்து அவனால் விலக்க முடியவில்லை.
சவுமியாவுக்கு அசதியாக இருந்தது; வேலைக்காரப் பெண்மணி கொண்டு வந்து தந்த காபியை குடித்தவள், சோபாவில் கால் நீட்டி அமர்ந்தாள். பிரபஞ்சனை விட்டு விலகி, பின், வீடு மாற்றி, புதிய வாழ்க்கைக்கு தயாராகி விட்டவள், இன்னொரு மணவாழ்க்கைக்கு மட்டும் இடம் தரவில்லை.
''நைட்டுக்கு சப்பாத்தி செஞ்சு, ஹாட் பேக்குல வச்சிட்டேன்; நான் கிளம்புறேம்மா,'' வேலைக்காரப் பெண்மணி, புடவையில் கையை துடைத்தபடி கிளம்பினாள். அவள் சென்றதும் வாசல் கதவை தாளிட்டபோது, வைதேகி, ஆட்டோவிலிருந்து இறங்குவதைப் பார்த்து, உற்சாகமானாள்.
''வைதேகி... வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ். வா வா...''
''டாக்டர் செக்கப்புக்கு போயிட்டு திரும்பும்போது, உன் ஞாபகம் வந்துச்சு; வந்துட்டேன்,'' என்றவள், வீட்டை பார்வையால் அளந்தாள்; பளிச்சென்றிருந்தது.
''வீடு ரொம்ப சுத்தமா இருக்கு சவுமியா.''
''தேங்க்யூ... உட்காரு; குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்,'' என்றவள், நிமிடத்தில் சாத்துக்குடி ஜூஸ் போட்டு எடுத்து வந்தாள்.
''ஜூஸ் கூட உன்னை மாதிரி ரொம்ப ஸ்வீட்டா இருக்கு,'' என்றாள்.
''டாக்டர் செக்கப் நல்ல படியா முடிஞ்சதா?'' என்று அக்கறையாக கேட்டாள், சவுமியா.
தலையாட்டியவள், ''ஆமா... பொழுது போறதுக்கு என்ன செய்யற... 'டிவி' பாப்பியா,'' என்றாள்.
''அதை விட்டா வேற கதி... பாக்கபிடிக்குதோ இல்லயோ, அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும். அந்த சத்தம் கேட்டுக்கிட்டேயிருந்தா தனியா இருக்குற பீலிங் இருக்காது,'' என்றவள், சட்டென நிறுத்தி, வைதேகியை ஏறிட்டாள்.
எழுந்து ஜன்னலருகே சென்றாள் வைதேகி. எங்கோ ஒரு குயில் கூவியது, காதில் விழுந்தது.
''சவுமியா... அந்த சத்தத்தை கேட்டியா; ரொம்ப இனிமையா இருக்குல்ல...''மவுனமாக தலையசைத்தாள்.
''நம்மூர்ல மயில் நடமாட்டம் அதிகரிச்சிருக்கறதா பேப்பர்ல படிச்சேன். மயில் தோகை விரிச்சு ஆடியதை நீ பாத்திருக்கியா...''
''நேத்திக்கு கூட ஒரு மயில் எதிர்வீட்டு மாடி சுவர்ல...'' என்றவள், வார்த்தைகளை முழுங்கி, வைதேகியை உற்றுப் பார்த்தாள்.
''முன் வாசல்ல செடியெல்லாம் இருக்கே... அதுல பூ பூக்கும் போது, உனக்கென்ன தோணும்?''
''வைதேகி, ஏன் இப்படியெல்லாம் கேட்கற?''
''இந்த சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம், வாழ்க்கைய நீர்த்துப் போகாம பாத்துக்கும். இதையெல்லாம் ரசிக்கிற மனசு இருந்தா, வாழ்க்கை உயிரோட்டமா இருக்கும். அந்த ரசிப்புத் தன்மை உனக்கு இருக்கா... சொல்லு...''
சவுமியாவின் விழிகள் பளபளக்க, ''மனசுல சந்தோஷமிருந்தா, எதையும் ரசிக்கிற எண்ணம் உண்டாகும்; அது இல்லேன்னா... ப்ச்...''
என்றாள்.
''சவுமி, சீக்கிரம் கையை கொடு,'' என்று பரபரத்தாள், வைதேகி.
''என்னாச்சு வைதேகி?''
சவுமியா பதறி கை நீட்ட, பற்றி தன் வயிற்றில் வைத்தவள், 'புரிகிறதா...' என்று பார்வையால் வினவ, சவுமியாவுக்கு சிலிர்த்தது. வயிற்றுக்குள்ளிருந்த குழந்தையின் அசைவை, கை உணர்ந்தபோது, அழுது விட்டாள், சவுமியா.
''வாழ்க்கையே போராட்டம் தான். யாருக்குத் தான் பிரச்னையில்ல; ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை... எனக்குமிருக்கு; ஆனா, இந்த
நிமிஷம், நான் ஆகாயத்துல பறக்கற மாதிரி உணர்றேன்; இதுக்காகவே தவம் கிடக்கிறேன்,'' என்ற வைதேகி, கலைந்த சவுமியாவின் கேசத்தை,
இதமாக ஒதுக்கி விட்டாள்.
''நீ அன்னிக்கு சொன்னது ஞாபகமிருக்கா... 'பழகின பாதையில நடந்து போரடிச்சு போன எனக்கு, இன்னிக்கு புதுசா விதைச்சு, செடி வளர்த்த மாதிரி சுகமா
இருந்தது'ன்னு சொன்னியே...''
''ம்...''
''நிஜமாகவே புதுசா ஒரு செடி வளர்த்து பாரேன்; நல்லாயிருக்கும் சவுமி.''
வைதேகி இளகின குரலில் கூற, கண்களை துடைத்து, நிமிர்ந்த சவுமியா, ''ரவி கிட்ட பேசுறேன்.'' என்றாள்.
''வெரி குட்... மயில் ஆடுறது, குயில் கூவுறது, பூ பூக்குறது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்கள ரசிச்சு, சந்தோஷப்படப் போற உனக்கு, இவ்ளோ பெரிய சந்தோஷமும், நிச்சயம் வாய்க்கும்.''
தன் வயிற்றைச் சுட்டிக் காட்டி சிரித்தாள், வைதேகி.
ஐ.கிருத்திகா
