
தவறான வழியில் கிடைக்கும் பொருளை, 'நாய் விற்ற காசு குறைக்காது' என்று சொல்வது வழக்கம். ஆனால், இது, முழுமையான சொற்றொடர் அல்ல. 'நாய் விற்ற காசு குறைக்காது; கடிக்கும்...' என்பதே, சரி. பிறர் மனம் வருந்த, அவர் பொருளை அபகரித்து, அதில் தானம் செய்வதால், எந்த பலனும் விளையாது என்பதை விளக்கும் கதை இது:
சதானீகன் எனும் அரசர் சிறந்த வீரர்; பல விதமான யாகங்கள் மற்றும் அறச் செயல்களை செய்து வந்தாலும், கருணையில்லாமல் குடிமக்களை கசக்கிப் பிழிந்து, வரி வசூல் செய்து வந்தார். அதனால், 'பசு மாட்டைக் கொன்று, அதன் தோலில் செருப்பு தைத்து, பாதரட்சை தானம் செய்வதைப் போல, நம்மை கசக்கிப் பிழிந்து, செல்வத்தை பறித்து, அதில் தர்மம் செய்கிறாரே...' என்று புலம்பி, கண்ணீர் சிந்தினர், மக்கள்.
ஏழைகள் அல்லல்பட்டுச் சிந்திய கண்ணீரால், சதானீகனின் புகழ் அழிந்தது. பின், இறந்து, நரகத்தை அடைந்தார்.
சதானீகன் நரகத்தில், துயரத்தில் அழுந்தி இருக்கையில், யம லோகத்திற்கு வந்த பார்க்கவ முனிவர், அங்கே, சதானீகனை சித்ரவதை செய்வதைப் பார்த்தார்.
'எவ்வளவோ அறச்செயல்களை செய்த நீ, துயரம் விளைவிக்கும் இந்த இருள் நிறைந்த நரகத்தில் சித்ரவதைப்படுகிறாயே... ஏன்?' எனக் கேட்டார், பார்க்கவ முனிவர்.
'முனிவர் பெருமானே... அறவுணர்ச்சி இருந்தாலும், கருணை இல்லாதவன், நான். குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து, அவர்களிடம் இருந்தவற்றை எல்லாம் கவர்ந்தேன். அதனால் தான், நரகத்தில் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறேன்...' என்றார், சதானீகன்.
இக்கதையை தன் சீடர்களுக்கு சொல்லி, கருணை இல்லாதவன் செய்யும் அறம், தெளிவான அறிவில்லாதவன், நூல்களின் பொருளை அறிந்ததைப் போலாகும் என்றார், வியாசர்.
இதைத் தான் நம் முன்னோர், 'மாதாவக் கொன்னுட்டு, கோ தானம் செய்தான்...' என, எளிமையாக கூறினர்.
நல்ல செயல்களை செய்யும் போது, சற்று கருணையோடு செய்தால், நாமும் நலம் பெறுவோம்; நம் சந்ததியும் நலம் பெறும்!
பி.என்.பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்!
புனித தீர்த்தங்களின், உறைவிடம் என்று எதை கூறுகிறோம்?
எவர் மனதில், மோகமும், மாயையும் அணுகவில்லையோ, எவருடைய மனதில் திட வைராக்கியம் குடி கொண்டிருக்குமோ, யாருடைய இதழ்கள் ராம நாமத்தை ஓயாது ஓதிக் கொண்டிருக்குமோ, அவருடைய உடல், எல்லா புனித தீர்த்தங்ககளின் உறைவிடம் ஆகும்.

