PUBLISHED ON : செப் 07, 2014

விருதோ, கவுரவமோ அதற்கு முற்றிலும் தகுதியானவர்களை சென்று அடையும் போது நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. தமிழில் நாடகம், சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில், தன் தனித்தன்மையான நடிப்புத் திறமையால், இந்தியாவிலும், வெளிநாடுகளில் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நடிகர் ஏ.ஆர்.எஸ்., என்று அறியப்படும் ஏ.ஆர்.ஸ்ரீநிவாசன்,
தமிழ் நாடகத்துறையில், அளப்பரிய சாதனைகள் புரிந்த பம்மல் சம்பந்த முதலியார் (1959), டி.கே. சண்முகம் (1962), எஸ்.வி.சகஸ்ரநாமம் (1968), பூர்ணம் விஸ்வநாதன் (1992) போன்ற மாமேதைகள் வரிசையில், 20 நீண்ட ஆண்டுகளுக்குப் பின், ஏ.ஆர்.எஸ்சுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது; இது, தமிழ் நாடக மேடைக்கு கிடைத்த கவுரவம். 2011ம் ஆண்டுக்கான, இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அக்., 9, 2012ல் ராஷ்ட்ரபதி பவனில் வழங்கினார்.
'நான் எந்த நாடகத்தையுமே முழுமையாகப் பார்த்ததில்லை. நான் முழுவதுமாக பார்த்த முதல் நாடகம் இது தான்...' என்று, 'இம்பர்பெக்ட் மர்டர்' என்ற நாடகத்தை குறிப்பிட்டு பாராட்டினார் சிவாஜி. இந்நாடகத்தில் எழுத்தாளர் விட்டல் என்ற பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து, அனைவரையும் கவர்ந்தவர் ஏ.ஆர்எஸ்.,
'போலீஸ் அதிகாரி என்றாலே தொப்பை, முறுக்கி விடப்பட்ட மீசை, பெல்ட் மற்றும் பூட்ஸ் என்ற அடையாளங்களை உடைத்தவர்.
'உங்கள் நடிப்பு நாடகத்திற்கு நாடகம் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கிறது...' என்று பிரபல இயக்குனர், ஏ.சி.திருலோக் சுந்தர் இவரைப் பாராட்டியுள்ளார்.
'இப்போதெல்லாம் வேலைப்பளுவில், முன்போல உங்கள் நாடகங்களை பார்த்து ரசிக்க முடியாமல் போய்விட்டது...' என்று, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., குறிப்பிடும் அளவுக்கு, சிறந்த நாடகங்களை இயக்கி நடித்தவர் ஏ.ஆர்.எஸ்.,
இப்படி பலரது பாராட்டுதல்களை பெற்றுள்ள ஏ.ஆர்.எஸ்., கல்லூரி படிப்பை முடித்த பின், ( பி.எஸ்சி., பி.எல்.,) பிலிப்ஸ் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, அலுவலக, மனமகிழ் மன்ற கிளப்பில் நடைபெற்ற நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், முதன் முதலில், 1964ல் பூர்ணம் விஸ்வநாதன் எழுதிய, 'அண்டர் செகரட்ரி' என்ற நாடகத்தில் நடித்தார். அந்த நாடகத்தில் ஒய்.ஜி.பி., - சோ மற்றும் சந்தியா (ஜெ., தாயார்) நடித்தனர். ஏ.ஆர்.எஸ்., போன்றே முதல்முறையாக அந்நாடகத்தில், நடிக்க வந்த மற்றொரு பிரபலம் ஜெயலலிதா.
இந்நாடக அனுபவம் குறித்து ஏ.ஆர்.எஸ்., கூறும் போது, 'அன்டர் செகரட்டரி' நாடகம் முடிந்ததும், கலைஞர்களை பாராட்ட மேடைக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., அப்போது, நான், 'மேக் - அப்' கலைத்துக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர்., உங்களை கூப்பிடுகிறார் என்று சொன்னதும், அவசரமாக, 'மேக் - அப்' பை கலைத்துவிட்டு, ஒரு வித பயத்தோடு ஓடினேன். என் கைகளை கெட்டியாகப் பிடித்து, 'எனக்கு கே.பி.கேசவன் என்ற ஒரு நடிகர், குருவாக இருந்தார்; முழு சூட் போட்டால் அவருக்கு அவ்வளவு அழகாக பொருத்தமாக இருக்கும். இன்று உங்களைப் பார்த்ததும் அவர் ஞாபகம் வந்து விட்டது. முழு சூட் உங்களுக்கு, 'பர்பெக்டாக' பொருந்துகிறது...'' என்று கூறிய போது, எனக்குள் உற்சாக மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது. அப்போதிருந்து, எந்த விழாக்களில் பார்த்தாலும் என் பேர் சொல்லி அழைத்து பேசுவார் எம்.ஜி.ஆர்., அப்போதெல்லாம் பத்மஸ்ரீ விருது பெற்றது போல் அப்படி ஒரு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படும்...' என்று கூறினார் ஏ.ஆர்.எஸ்.,
சென்னை மத்திய சிறையில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவில், முக்கிய உறுப்பினராக இருந்தார் ஏ.ஆர்.எஸ்., திரை உலக நண்பர்களான ஜெய்சங்கர், சிவகுமார் உள்பட பல கலைஞர்களை அழைத்துச் சென்று, சிறையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, கைதிகளை மகிழ்வித்திருக்கிறார்.
* ஐம்பது வருட மேடை அனுபவத்தில், 39 மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 36, ஆங்கிலத்தில் மூன்று நாடகங்களில், நடித்திருப்பவர், 2,400க்கும் மேற்பட்ட முறைகள் நாடக மேடையில் தோன்றியிருக்கிறார். யு.ஏ.ஏ.,விற்காக மவுலி எழுதிய, ஏ.ஆர்.எஸ்., இயக்கி நடித்த, 'பிளைட் - 172' என்ற நகைச்சுவை நாடகம், 400 தடவைகளுக்கு மேல் மேடை ஏறியுள்ளது. மவுலியின், 'ஹரே ராம் பத்மவிழா' மற்றும் 'குருஷேத்திரம்' வெங்கட் எழுதிய, 'ரகசியம் பரம ரகசியம்' மற்றும் 'மெழுகு பொம்மைகள்' விசு எழுதிய, 'தேவியர் இருவர்,' சுஜாதாவின், 'கனவு கண்டேன் கண்ணா' போன்றவை ஏ.ஆர்.எஸ் இயக்கத்தில், அவரது நடிப்பில் வெற்றி பெற்ற நாடகங்கள். 'ரகசியம், பரம ரகசியம்' என்ற நாடகம், 38 ஆண்டுகளாக தொடர்ந்து, வெற்றிகரமாக மேடை ஏறிக் கொண்டிருக்கிறது.
* ஒய்.ஜி.பி.,யின் யு.ஏ.ஏ., நாடக குழுவில், கடந்த, 1968 முதல், 1976 வரை, பல பெற்றி நாடகங்களை இயக்கி நடித்த, ஏ.ஆர்.எஸ்., வேலை பளு காரணமாக விலகிக் கொண்டார்.
சித்ராலயா கோபுவின் மகன் ஸ்ரீராம் எழுதிய, ஒய்.ஜி.மகேந்திராவின், 'சுதேசி அய்யர்' நாடகத்தை முன்னறிவிப்பு இன்றி நடிகர் ரஜினி பார்க்க வந்தார். ஒய்.ஜி.மகேந்திரா அழைப்பில் நானும், ரஜினியுடன் உட்கார்ந்து, அந்த நாடகத்தை பார்த்தேன். நாடகத்தை பார்த்து ரஜினி வியந்து போய், இப்படியும், 'ஒரு நாடகம் போட முடியுமா?' என்று மனமார பாராட்டினார். 'நான் நடிக்கவில்லை என்றாலும், இந்த நாடகத்தை திரைப்படமாக்க வேண்டும்...' என்று கூறினார்.
* தமிழ் நாடக மேடையில் மீண்டும் ஒரு உத்வேகம் பிறந்திருக்கிறது. நல்ல ஸ்கிரிப்ட்கள் முயற்சிகள் வருகின்றன. நாடகம் போடும் செலவு அதிகமாகிவிட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன், 78 சபாக்கள் இருந்தன. இப்போது, 10 சபாக்கள் தான் உள்ளன.
* ஒரு முறை தன் பேரக்குழந்தையை பார்க்கச் சென்ற ஏ.ஆர்.எஸ்., அவன் கையில் இருந்த குரங்கு பொம்மையால் ஈர்க்கப்பட்டார். கை சொடுக்கினால், அது பாடும்; அதைப் பார்த்ததுமே, அவருக்கு ஒரு பொறி தட்டியது. அன்று இரவே, ஒரு சஸ்பென்ஸ் கதையை உருவாக்கி, இரண்டே நாட்களில் ஸ்கிரிப்டையும் எழுதினார். நடிகை ரேவதி தயாரித்த, ஏ.ஆர்.எஸ்., கதை, வசனம், டைரக் ஷன், நடிப்பில், 'பொம்மைகள்' என்ற பெயரில் தொலைக் காட்சி தொடராக வெளிவந்து வெற்றி பெற்றது.
* 'சென்னையில் சங்கீதம், நாடகம், இசை, நாட்டியம் இவை தற்போது சிறப்பாக செயல்படுகின்றன என்றால், அதற்கு நல்லி குப்புசாமி செட்டிதான் முக்கிய காரணம். அவருடைய அளப்பரிய உதவிகள் இல்லை என்றால், கலை உலகில் பெரிய வெற்றிடம் இருக்கும். நல்லி குப்புசாமி, ஏ.வி.எம் சரவணன் இருவரின் எளிமை என்னை வியக்க வைக்கிறது...' என்கிறார் ஏ.ஆர்.எஸ்.,
* ஜல்லிக்கட்டு படத்தில் கோர்ட் சீன் படமாக்கப்பட்டபோது, இடைவேளையில் சிவாஜி, 'உன்னோட உயரம், நிறம் மட்டும் எனக்கு இருந்திருந்தால், உலகத்தையே வித்துட்டு வந்திருப்பேன்...' என்றார். 'இப்போ மட்டும் என்ன நீங்க உலகத்தை விக்கலையா... என் தலையிலே ஒரு விக்கை கவிழ்த்து, கையிலே ஒரு நாயனத்தை கொடுத்து பாருங்க...தில்லானா மோகனாம்பாள் தலை தெறிக்க ஓடிப் போயிருவாங்க. (சிவாஜி சிரித்துவிட்டார்). நீங்க சொல்லுகிற இந்த தோற்றம், ஒரு பணக்கார அப்பா வேஷத்திற்கு ஓ.கே., பல தரப்பட்ட பாத்திரங்களில் நடிக்க உங்களாள மட்டும்தான் முடியும்; அதற்காகவே பிறந்தவர் நீங்கள்...' என்றேன்.
* ஜானதிபதியிடம், சங்கீத நாடக அகாடமி பரிசு வாங்க, ராஷ்டிரபதி பவன் சென்ற போது, நிகழ்ச்சி நடைபெற்ற சரித்திரப் புகழ் பெற்ற அசோக ஹாலில், ஒத்திகையின் போது மேலும், கீழும் நடந்தேன். நேரு, படேல், ராஜாஜி போன்ற மேதைகள், அந்த ஹாலில் நடந்து சென்றிருப்பர், அதே ஹாலில் நானும் நடக்கிறேன் என்ற உணர்வு ஏற்பட்டு, உடம்பு புல்லரித்தது. மேலும், ஜனாதிபதியிடம் பரிசு வாங்கும் போது, ஆலங்காடு ராமமூர்த்தி ஸ்ரீநிவாசன் என்று என் முழுப் பெயரைப் படித்த போது, தமிழகத்தில் உள்ள எங்கள் சிறிய கிராமத்தின் பெயரும், என் தந்தையின் பெயரும், அங்கு கம்பீரமாக ஒலித்தது பெருமகிழ்ச்சியை தந்தது.
* ஏ.ஆர்.எஸ்., திறமையான கிரிக்கெட் வீரர்; நல்ல பேட்ஸ்மேன், ஆப்ஸ்பின் பந்து வீச்சாளர். சென்னை சட்டக் கல்லூரி கிரிக்கெட் குழுவிற்கு ஆடியவர். ஒரு லீக் மேட்சில், நான்கே பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். தொடர்ந்து சட்டக் கல்லூரி கிரிக்கெட் குழுவில், அவர் ஆட வேண்டும் என்பதற்காக, கல்லூரி முதல்வர் அவரை தொடர்ந்து, எம்.எல்., மாஸ்டர் ஆப் லா படிக்கச் செய்தாராம்.
* 'தமிழ் நாடகங்கள், திரைப்படங்களில் ஆங்கில வார்த்தைகளை மிகவும் சரியாக உச்சரிக்கும் இரண்டு நடிகர்கள், மேஜர் சுந்தர்ராஜனும், ஏ.ஆர்.எஸ்சும் தான்...' என்று பிரபல எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன், தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ். ரஜத்
