தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 07, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1967ல், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அந்தத் தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணனை வேட்பாளராக நிறுத்த, எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன; அவரோ, போட்டியிட மறுத்து விட்டார். சுரேந்திரநாத் திரிவேதி என்ற அக்கால எம்.பி., எழுதியுள்ள, 'சோஷலிச தாகம்' எனும் நூலில், இது பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது:

எதிர்க்கட்சியை சேர்ந்த நாங்கள், ஜனாதிபதி வேட்பாளராக ஜெயபிரகாஷை தேர்வு செய்ய தீர்மானித்த போது, ஜனசங்கம் (இப்போதைய பா.ஜ.,) தவிர, கம்யூ., உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சியினர் என, அனைவருமே ஆதரித்தனர். இந்த விஷயத்தை இந்திராகாந்தியிடம் பேசும் பொறுப்பை என்னிடம் அளித்தனர். இத்தகவல் அறிந்த ஜெயபிரகாஷ் என்னை அழைத்து, 'இந்த, உயரிய பதவியில் எனக்கு விருப்பமில்லை; யாரோ வேறு சிலர் எனக்கான பேச்சுக்களை தயாரிப்பர்; அதை நான் என் கருத்தாகவோ, அரசின் கருத்தாகவோ பேச வேண்டும். இதை கவுரவமான வேலை என்று நான் கருதவில்லை; என்னை விட்டுவிடுங்கள்...' என்று உறுதியாக மறுத்து விட்டார்.

'பெரியோர் வாழ்வில் சில சுவையான தகவல்கள்' நூலிலிருந்து:

டால்ஸ்டாய் எழுத்துகளை விரும்பி படித்த காந்திஜி, தன் தென்னாப்பிரிக்க ஆசிரமத்திற்கு, 'டால்ஸ்டாய் பண்ணை' என்று பெயர் வைத்தார். நேரு ஏராளமாக படிப்பவர்; அவர் தன் சுயசரிதையில், 'சிறையில் பலதரப்பட்ட கடினமான நூல்களைப் படித்தேன்; நாவல்களை படிப்பதால் சோம்பல் தான் வளரும். அதனால், அவற்றை நான் படிப்பதில்லை. படிப்பதில் சோர்வு ஏற்படும் சமயத்தில், எழுத ஆரம்பித்து விடுவேன்.

'என் மகளுக்கு உலக வரலாறு பற்றி எழுதிய கடிதத் தொடர், இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது. என் அறிவு குன்றாமல் இருக்க அந்த வேலை பெரும் துணையாக இருந்தது. கடந்த காலத்தை பற்றி எழுதும் போதெல்லாம், அதே காலத்தில் வாழ்வது போலவே உணர்ந்தேன். பண்டைக்கால யாத்ரிகர்களான யுவான்சுவாங், மார்க்கோபோலோ மற்றும் இபன் பதூதா போன்றோரின் குறிப்புகள், மத்திய ஆசிய பாலைவனங்களை சுற்றிப்பார்த்த ஸ்லென் ஹெடின், திபெத்தின் புதுமைகளை கண்ட ரோரிச் முதலிய நவீன கால யாத்ரிகர்கள் எழுதிய குறிப்புகள் போன்ற பயண நூல்கள் என்றால் எனக்கு எப்போதும் தனி ஆர்வம்...' என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு தலைவர்களில், அண்ணாதுரை புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். அவர் தன்னுடைய பேச்சுக்களுக்கிடையே அரிய நூல்களிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டுவார். இப்போது, கருணாநிதியை தவிர இப்படி புத்தகம் படிக்கும் வழக்கம் உள்ள தலைவர்கள், யாராவது தமிழ்நாட்டில் இருக்கின்றனரா?

'வரலாறு கூறும் உண்மைகள்' நூலிலிருந்து:

தடை உத்தரவு என்பது சமூக புரட்சியில் ஈடுபடும் மனிதர்களுக்கு மட்டும் இல்லை; அத்தகைய புத்தகங்களுக்கும் தான். கி.மு., 200ம் ஆண்டில், சீன அறிஞர் கன்பூஷியஸ் எழுதிய, 'எனகாலெக்டஸ்' என்ற நூல், அந்நாட்டு அரசனின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு பிரதியையும் தேடிப் பிடித்து, தீ வைத்து எரித்தனர்.

முற்கால அறிஞர்களான இப்சன், ரூசோ மற்றும் ஹோமர் முதல், பிற்கால எழுத்தாளர்களான ஜாக் லடண்டன், லாரன்ஸ், பாத்லேயர் மற்றும் ஆஸ்கர் ஓயில்ட் வரை, இவர்களது படைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு, வெளியுலகிற்கு வராமலேயே முடங்கி விட்டன.

இத்தகைய நூல்களில் பல, பிரிட்டிஷ் மியூசியத்தில் தனிப்பகுதியாக இடம் பெற்றுள்ளன. 'லைப்ரரி ஆப் பார்பிடன் புக்ஸ்' என்று அதற்கு பெயர். வரலாற்று பெருமை கொண்ட பல கையெழுத்து பிரதிகளும், நூல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஹிட்லரின், 'மெயின்காம்ப்' நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. காங்., ஆட்சி காலத்தில் அண்ணாதுரை எழுதிய, 'ஆரிய மாயை' மற்றும் புலவர் குழந்தை எழுதிய, 'காந்தியார் சாந்தியடைய' நூல்கள் தடை செய்யப்பட்டு பறிமுதலாயின.

ஆங்கிலேய ஆட்சியில் பகத்சிங் எழுதி, ப.ஜீவானந்தம் மொழி பெயர்த்த, 'நான் ஏன் நாத்திகனானேன்?' நூல் தடைசெய்யப்பட்டது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us